சிட்டுப்போல... பட்டுப்போல...
சின்னதாய்...
அழகானதாய்...
தொட்டால் கசங்கிவிடும்
பஞ்சுப்பெட்டகமாய்.
தொட்டுப்பார்
என் கன்னத்தை
தட்டித்தடவும்போது
விட்டு வெளியில் ஓடி
ஒளிந்திருந்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
சங்கத்தமிழில் சொல் கோர்த்துத்
தனக்கென்று ஒரு மொழியில்
மொழி பெயர்த்து
செவ்விதழ் விரித்து
"அம்மா"என்று
அழைத்திடும் அழகு.
இரு வர்ணம்
கலந்து தீட்டிய ஓவியமாய்
இரு பவளம் பதித்து
ஒளி கொடுக்கும் கண்ணிரண்டாய்
தாமரை இதழ் மடித்து
இரு காதுகளாய்
சின்ன வெண்கற்கள்
கோர்த்தெடுத்த பல்வரிசையாய்
குதறும் கூர்மையாய்
போதைச் சிரிப்பொடு
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
எட்டி நின்று ஜாலம் காட்டி
உருட்டி விட்ட பந்தைக்
கட்டிப்பிடித்து உருண்டெழும்பி
திரும்பவும் உருட்டக் கேட்டு
கண்ணால் கதை சொல்லி
"அம்மா" என்று
அழைத்திடும் அழகு.
கள்ளமில்லாப் பிள்ளையவள்
கொள்ளையின்பம் காட்டுபவள்.
குழந்தையும் தெய்வமும்
கொண்டவர் உள்ளம் வாழும்.
சூதில்லை வஞ்சகமில்லை
பொறைமையில்லை
பொச்செரிப்பில்லை
குறை நிறை சிறிதுமில்லை
சுட்டெரிக்கும் பார்வையில்லை
விளக்கங்கள் குழப்பங்களில்லை
வேஷமில்லை கோஷமில்லை
உன்னது என்னது இல்லை
பொய் பிரட்டுப் போலியில்லை
புரியாதது எதுவுமில்லை
இத்தனையும் இல்லையென்றால்
இக்குழந்தை ஜடமுமில்லை.
என்னை முகம் பார்த்துக் கனிவோடு
"அம்மா"என்று
அழைக்கும் அழகு.
ஆனால் இன்று
"அது"அதுதான்
அன்பு தந்த அந்தக்
குழந்தைக்கு உயிரில்லை.
ஆறுதலாய் நான் அணைத்த
அந்த உயிருக்கு உயிரில்லை.
முன்னைய இரு நாட்கள் முந்தி
என்னோடு உண்டு உறங்கி
அழகாக என்னை
"அம்மா"என்றழைத்த
அச்செல்வம் இன்றில்லை.
முந்தை நாள் அடுக்களை
நான் துடைக்க... தன் வாலால்
தானும் துடைத்து
வாய் நிறைய"அம்மா"என்றழைத்து
பால் குடித்துப் படிக்கட்டுக் கடந்த
என் "இளவரசி"
இருபது நிமிடங்கள் கடந்திருக்கும்
திடீரென்று ஓலமிட அவலப்பட்டு
அருகில் வர"அம்மா"என்று
அழகாக அழைத்து
அடங்கியே போனது.
"இளவரசி" என்கிற
என் அன்புப் பூனைக்குட்டி!!!!!!
ஹேமா(சுவிஸ்)
29.01.2003 Mr & Mrs Lüthi Markus & Sybille Swiss Bern.
Tweet | ||||
1 comment:
பூனைக்குட்டியா! அதிரா வளர்த்த பூனையா.. இருந்தாலும் அம்மாவின் பாசத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
Post a Comment