*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 24, 2008

மீண்டும் ஒரு காத்திருப்பு...


ஆணாய் கருவானவன்
ஆளப்போவது உலகானாலும்
கருவறைச் சிறை விட்டு
விடுதலை தருபவள் பெண்தானே.
சுதந்திரம் பெற்றதும்
சுதந்திரம் தந்தவளையே
தூக்கியெறிந்து
விலங்கும் ஒன்று போட்டு
ஆணாதிக்கச் சிறைக்குள் தள்ளும்
ஆணின் அக்கிரமம்.
பிறப்புத் தொடக்கம்
இறப்பு வரை
சார்ந்தே வாழ்வதாய் பெண்ணினம்.
முடியாமை மனதளவில்.
பெற்றவனுக்கு முதல் அடிமை.
கூடப்பிறந்தவனுக்கும் அடிமை.
கை பிடிப்பவனும் தொடர அப்படியே...
தானே தாலாட்டும்
பிள்ளைக்கும் தான் அடிமை.

இறைவன் முடிதொட்ட விஞ்ஞானம்
மனித இயல்பின் வாழ்வை
மாற்ற முடியாததாய்.
இன்றும் தலைமுறை
தொடரும் வாழ்வாய் இது.
தாலிக்கயிறே தூக்குக்கயிறாகி
கூண்டில் பறவையாகி
கட்டாயக் கைதியாகும்
கண்ணீர்ப் பறவையவள்.
தூக்குக்கயிற்றின்
முன்னோட்ட முடிச்சே
அவள் கழுத்தில்
மூன்று முடிச்சாய்.
102 சவரனில்
அழகாய் ஒரு தூக்குக்கயிறு.

கர்ப்பப்பை காலியானாலும்
காயாத கண்ணீர்ப்பை.
துக்கத்துள் தூக்கம்
தொலத்த பாவியவள்.
விழித்திருக்கிறாள்
இன்றும்...
தான் பெற்ற பிள்ளையாவது
தன் விலங்கை
அவிழ்ப்பான் என்ற
நம்பிக்கை ஏக்கத்தோடு !!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

தாலிக்கயிறே தூக்கு கயிறா!

Post a Comment