*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, March 03, 2008

நீ....


என்....
கனவுக் காலங்கள் நீ...
கவிதைகளின் நாயகன் நீ...
புதிதாய்ப் பக்கங்கள்
எழுதியவன் நீ...
வாழ்வையே
புரட்டிப் போட்டவன் நீ...
மூடியும் திறந்துமாய்
இருந்த என் பக்கங்களை
தொடர்ந்தும் படித்தவன் நீ...
இன்னும் பச்சை இருக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்த்து
மீண்டும் துளிர் விட
நீர் வார்த்தவன் நீ...
எனக்குள்ளும் இருந்த
நேசத்தின் கூச்சலை
அறிமுகப்படுத்தியவன் நீ...
நெருப்புக்குள் நின்ற
என்னை நீராக மாற்றி
குளிர்மையை
உணர்த்தியவன் நீ...
நச்சுப் பாம்புகளின் நடுவே
நம்பிக்கை ஒளி காட்டிய
நேர்மையின் சாயல் நீ...
மலையைக் கூட
மடி தவழும் குழந்தையாய்
மாற்றித் தந்தவன் நீ...
அலை புரண்ட மனதிற்குள்
கரையாய் நின்றவன் நீ...
உள்ளக்கலவரதின்
உரிமையாளனும் நீ..
வெள்ளை மலருக்கு
வர்ணச் சேலை கட்டி
வாழ்வின் வட்டம் விட்டு
வெளி வரச் செய்தவன் நீ...
எல்லாம்.....
எல்லாம் எல்லாமுமாய்
இருந்த உன்னை
முடியாது......
சொல்ல முடியாது.
வரிகள் வரவில்லை
எனக்குள் உயிரில்லை.
அழக்கூட முடியவில்லை
கண்மணியாய் நீ...
நம்பிக்கை தந்த
உன் சிறு விழிகளுக்குள்
அடங்கும் என்
வீரமும் விவேகமும்.
வேறு என்ன...எப்படி...
இனி எனக்கான புத்ககங்கள்
ஸ்தம்பித்துக்கொள்ளும்.
எதுவுமே எழுவதற்கில்லை
உன்னால்...
புரட்டப்பட்ட பக்கங்கள்
என்றும் உனக்கானதாய்.
நீ படித்து
விட்ட வரிகளிலேயே
காத்துக்கிடக்கப் போகின்றன.
என் நேசத்தின்
அடையாளத்தோடு!!!!!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

இனி எனக்கான புத்ககங்கள்
ஸ்தம்பித்துக்கொள்ளும்.
எதுவுமே எழுவதற்கில்லை...//
மீண்டும் எழுதுங்கள்.

Post a Comment