*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, March 01, 2008

அன்பே வா...


சோககீதங்களின்
இசைத் தெரிவில்...
முரண்பாட்டு முடுக்கின்
தகராற்றுச் சந்தியில்...
அறிமுகமாகினாய் நீ.
தடவைகள் சில
தர்க்கப்பட்டாலும்
பறக்கின்ற பட்டாம்பூச்சி
தொட்டுச் செல்லுகையில்
விட்டுச் செல்லும்
வர்ணப் பொடியாய்
உன் சிநேகம்.
தாயின் மடி தேடும்
கன்றின் உறவாய்
உன் வரவு.
அன்றைய திகதியில்
நானோ...
மீண்டும் மீண்டும்
சோதனைச் சிலுவையில்
எனக்கு நானே
ஆணி அடித்துக் கொண்டு
சோகச் சாவடியில்.
நீயோ...
கிளிப்பிள்ளையாய்
சொன்னதையே
திரும்பத் திரும்பச்
சொல்லிக் கொண்டு
என்னடியில்.
இன்று....
அதிசயமாயிருக்கிறது
என்னை நினைத்தாலே.
இத்தனை ஆழமாகவா
எனக்குள் நீ!
அத்தனை அன்பா உனக்குள்!
நிறைந்த தைரியசாலிபோல
ஒரு திமிர் எனக்கு.
தெரிகிறது இப்போ அது
நீ தந்ததென்று.
இரும்பென்று இருந்த
என் இறுமாப்பு
மெழுகிலும் மெலிதாக.
என் அன்பின் வட்டத்துக்குள்
நீ மட்டுமே
உலாவியிருக்கிறாய்.
நீ என் பாதுகாவலன்.
உன் திடீர் பிரிவு
மனதை
முடமாக்கிக் கிடத்திவிட
ஆயிரம் கேள்விகளுக்கு
நீ ஒருவனே பதிலாய்.
நீ இல்லாத பொழுதுகள்
ஒவ்வொன்றும்
கணங்களாகி யுகங்களாகி.
மீண்டும்...
தனிமையாய் வெறுமையாய்
ஏழ்மையாய் ஆனதாய்
ஒரு தவிப்பு.
என் பலமும்
பலயீனமும் நீதானடா.
சின்னதாய் தனிமையாய்
இருந்த என் உலகத்துக்குள்
எப்படியோ
நுழைந்துகொண்டாய்
என்னையுமறியாமல் நீ.
என் இனியவனே...
உனக்குள் உறைவதிலும்
உனக்குள் தொலைவதிலுமே
ஒரு ஆனந்தம்.
உறங்கையிலும் நீயாய்
விழிப்பிலும் நீயாய்
நினைவுகள் நிறைய நீயாய்
கனவின் கற்பனைகளில் நீயாய்
கண்கள் முழுதும் அன்பே நீயாய்
நெஞ்சம் கனக்க
காதல் நிறைத்துக்
காத்திருக்கிறேன்.
உயிரே...
வந்துவிடு காற்றாய்
விரைந்து வந்து விடு!!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

விச்சு said...

மனமுறுக்கும் நினைவுகள்.

Post a Comment