*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 29, 2013

ஒளிகாட்டும் வழி...


சூரியன் திசை தவறிய தேசத்தில்
எமக்காய்
உருகி வழிகிறோமென
சில மெழுகுவர்த்திகளின்
கூக்குரலில்
விழித்தெழுகிறோம் நாளும்.

மனக் கல்லறைக்குள்
உயிர் உருக்கி
ஏற்றிய தீபங்களோடு
கார்த்திகைப்பூக்களை
கரிகாலர்கள் நடந்த
காடுகளில் விட்டெறிகிறோம்.

காலம் சபித்ததால்
விளக்குகள் அணைந்த
அநாதை மரங்களுக்கு
மின்மினிகள்கூட
ஒளிதர மறுத்த உலகிது.

பார்த்துப் பார்த்து
அழித்தொழிக்கப்பட்ட
என் சனத்தில் கையில்
கருத்த சூரிய
பொம்மையொன்று திணித்து
சண்டை முடிந்த பூமியின்
சமாதான பொம்மை
இதுதான் என்கிறார்கள்.

குருதி குடித்த தேசம்
விட்டகன்றபோது
கடைசியாய்
ஓடிய ஓடத்தில் கிடைத்தது
ஒரு குப்பி விளக்கு மட்டுமே.

பயங்கரவாதியொருவன்
பயங்கர ஆயுதங்களுடன்
தப்பிவிட்டதாய் செய்தி.

ஏதுமறியா விளக்கொன்று
புலம்பெயர்ந்து தவிக்கிறது
யாராவது
தீராத்தாகம் தீர்த்தெரிந்து
ஒளிபரப்ப
எண்ணெய் ஊற்றும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 24, 2013

அதி'காரம்'...


தடித்த எருமைத்தோலுக்குள்
குத்தியெடுத்த ஆணியென
சொற்கள் கடுக்க
பிறப்பின் கர்வமாய் 
ஆண் அதிகாரங்கள்.
 
தண்ணியில்லா
ஆழ் கிணறு விழுத்தி
அடக்கி மறுக்கும்  
ஆணவத்தை
அண்டம் அமுக்க   
புகைச் சுளியங்கள்
ஆழக்கிணறு கடந்து  
மேலெழும்பி வந்து 
நிலம் பரவும்.
 
ஒற்றைப்படைப் பூச்சில்
முகம் மட்டுமே அழகாய்
உள்ளிருந்து அசிங்கமாய்
ஆணாய்... 
அதிகாரம் சுட்டெரிக்க
விழுத்திய கிணற்றுக்குள்
கிடக்குமெனக்கு
பலநாள் சந்தேகமொன்று....

பகல்கள் கலங்க
கதிகலக்கும் உன்னால்
என்னதான் முடிகிறது   
இரவுப் பொழுதுகளில் 
மாத்திரம்!!!

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5944

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 19, 2013

மாத்திரைச் சொற்கள்...


தப்பிப்பிழைத்தல்
என் வாழ்க்கையில்
பலமுறை
உங்களைப்போல்.

சிரித்தது கொஞ்சம்தான்
கடத்தலும் காவுதலும்
இழப்பும் இல்லாமையும்
அழுகையும்தான் அதிகம்.

காலத்தினிடை
காதலும் கற்றுமறந்தேன்
வயதும் வர
வழுக்கி நகரும் கூழாங்கல்லாய்
பல காதலைக் கடந்தோடியது மனது.

நானும் மனுஷிதானே....

மறத்தல்......
எனக்கு மட்டும் வரமா என்ன
பார்த்த சில முகங்களும்
பழகும் தமிழும்
மறக்கவிடவில்லை
சிறகு தந்தவனை.

இன்று.....
தெருவில் ஒரு முகம்
எனக்குத் தெரிந்ததாய்
திக்கிய வாய் அசைத்து
நீ....ங்க......ள்.

அடையாளமற்றுப் போனேனோ
ஒருவேளை.....

நிராகரிப்பின் அமிலத்தை
அள்ளி வீசியது
வார்த்தைகளால் அது.

மெல்லக் கொல்லும்
ஒவ்வொரு சொற்களையும்
மாத்திரையாக்கி
மெல்ல மெல்ல
இறப்பதே மேல்.

கனக்கிறது மனசு.....

மனமுருட்டும் மல உருண்டை
உணர்வற்ற மனதில்
இதுவரை நாற்றமில்லாமல்.

இப்படியே....
உணர்வுக்குள் தப்பித்தலும்
உணர்வற்று நாறுதலும்
எதுவரை.

அமிலச் சொற்கள்
தந்தவனுக்கொரு நன்றி
மீண்டும்
சந்திப்பதின் விபரமிருக்கிறது
என் இடக்கை ரேகையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 15, 2013

லவண்டர் முத்து...


நீ...
உறிஞ்சியதுபோக
மீந்து சிதறிக்கிடக்கிறது
இரவுப்படுக்கையில்
சில மின்மினி முத்தங்கள்.

தலையணையில்
ஒட்டிய முத்தம்
வெட்கிச் சிரிக்க...

மொக்குடைக்கும்
லவண்டர் பூவொன்று
செடியிலும்
உன் மடியிலுமென
கண்ணடித்து
தொட்டு தடவ
அடிவயிற்றில்
அதீத அலையொன்று
சேமிக்கிறது
சிறு முத்தொன்றை!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 14, 2013

போர்க்காலக் காதல்...


போர் ஒழிந்தபின்னும்
சிதைந்த காவலரணாய்
நிகழ்வுகளின் சாட்சியாய்
நம் காதலில் நான்.

ஆயுதங்களைக் கொள்ளையடித்தவர்கள்
உன் ஷெல் பார்வையை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நன்றி.

எறிகணை இலக்குகளை ஏவி
உச்சப் பனையில் புகையெழும்பும்
இரசாயனக் குண்டுகள் துளைத்த
திசைக்கூடாரமென
மனம் சல்லடையாய் கிடந்தாலும்
உன்னுள் மீள்குடியேற
13 ம் திருத்தச்சட்டமென
ஒப்பமிடுகிறேன்.

கிடப்பு அரசியலில்
அமைதிக்காலப்பணியென
நம் காதலும்
வெடிக்காத கண்ணிவெடியென
உன் மௌனமும்.

நீ....
சோதனைச்சாவடி
இராணுவமல்ல
நான்....
அடையாள அட்டை
காட்டிப் பல் இளிக்க.

முச்சந்தி தாண்டும்
கனரக வாகனத்துள்
உறங்கும்
மரணித்த போராளியாய்
A 9 பாதை
மிதிவெடிகளையும்
குடிசைகளின்
இடப்பெயர்வுகளையும்
மாவீரர் கல்லறைகளையும்
உணர்வற்றுக்
கடந்துகொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
ஆட்டிலெறிச் சொற்களையும்
தாங்கியபடி.

ஊரடங்குச் சட்ட காலத்தில்
தஞ்சமாய்
புகுந்தே கிடக்கும்
குழந்தைகளின் பங்கருக்குள்
தவறி விழுந்த பாம்பென
அலறியடிக்கிறது உயிர்.

நீ....
புலம் பெயர் தேசமல்ல
நான்....
அகதியுமல்ல
நிவாரணங்களை அள்ளி வழங்க.

நிச்சயம்
போரற்ற காலத்தில்
சமாதானப் பேச்சுவார்த்தைக்
குழந்தைகளோடு
நீ என்னுடனும்
நான் உன்னுடனும்தான்.

ஒரு சொல் சொல்லிவிடு
தீர்ப்பில்லா
காலவரையறையற்ற
வதைமுகாமாகிக்கொள்கிறேன்.

புரிந்துகொள்....
போர்க்காலம் தாண்டியபின்
இன்னொரு சொல் வேண்டாம்
நம் இலங்கை அரசாங்கம்போல்!!!

http://kaatruveli-ithazh.blogspot.ch/2013/10/blog-post.html?spref=fb

ஹேமா(சுவிஸ்)

Sunday, October 13, 2013

காதல் துளிகள் (10)

தனிமை
இரவின் பாடல்கள்
ஏதோவாய்
வானொலியில்
ஒற்றை மெழுகுதிரி
எரிய
முகமற்ற ஒருவனின்
அன்பின்
சுவாசம் மட்டும்
என்
அறை நிரப்பியபடி !

கேள்விகளால்
நிரம்பியிருந்தான் அவன்
எனக்கான
குவளைகள்
போதாமலிருக்கிறது
நிரம்பியும் வழிந்துமாய்
தளம்பிக்கொண்டிருக்கிறேன்
நான் !

அலட்சியமாய்
சாகடிக்க
நஞ்சு வேண்டாம்
தஞ்சம் கேட்கும்
மெல்லிய அன்பு போதும் !

சிலசமயங்களில்
சிறு தூரலாய்
தூவி
என் ஈரலிப்பை
காக்கிறானே தவிர
பெய்வதென்னவோ
மிதமிஞ்சிய
சதுப்பு நிலத்தில்தான் !

அன்பால்தான்
கொண்டான்
என்னை.....
அதே அன்பால்
கொல்கிறான்
என்னைத் தவிர்த்து !

சிலுவை வலிகளுக்கு
மருந்தாய்
இயேசு சொன்ன
ஏழு வாசகம்போல்
என் வலிக்கு
அவன் பெயர் !

ஹேமா(சுவிஸ்)