*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, October 14, 2013

போர்க்காலக் காதல்...


போர் ஒழிந்தபின்னும்
சிதைந்த காவலரணாய்
நிகழ்வுகளின் சாட்சியாய்
நம் காதலில் நான்.

ஆயுதங்களைக் கொள்ளையடித்தவர்கள்
உன் ஷெல் பார்வையை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நன்றி.

எறிகணை இலக்குகளை ஏவி
உச்சப் பனையில் புகையெழும்பும்
இரசாயனக் குண்டுகள் துளைத்த
திசைக்கூடாரமென
மனம் சல்லடையாய் கிடந்தாலும்
உன்னுள் மீள்குடியேற
13 ம் திருத்தச்சட்டமென
ஒப்பமிடுகிறேன்.

கிடப்பு அரசியலில்
அமைதிக்காலப்பணியென
நம் காதலும்
வெடிக்காத கண்ணிவெடியென
உன் மௌனமும்.

நீ....
சோதனைச்சாவடி
இராணுவமல்ல
நான்....
அடையாள அட்டை
காட்டிப் பல் இளிக்க.

முச்சந்தி தாண்டும்
கனரக வாகனத்துள்
உறங்கும்
மரணித்த போராளியாய்
A 9 பாதை
மிதிவெடிகளையும்
குடிசைகளின்
இடப்பெயர்வுகளையும்
மாவீரர் கல்லறைகளையும்
உணர்வற்றுக்
கடந்துகொண்டிருக்கிறேன்
உன் ஒவ்வொரு
ஆட்டிலெறிச் சொற்களையும்
தாங்கியபடி.

ஊரடங்குச் சட்ட காலத்தில்
தஞ்சமாய்
புகுந்தே கிடக்கும்
குழந்தைகளின் பங்கருக்குள்
தவறி விழுந்த பாம்பென
அலறியடிக்கிறது உயிர்.

நீ....
புலம் பெயர் தேசமல்ல
நான்....
அகதியுமல்ல
நிவாரணங்களை அள்ளி வழங்க.

நிச்சயம்
போரற்ற காலத்தில்
சமாதானப் பேச்சுவார்த்தைக்
குழந்தைகளோடு
நீ என்னுடனும்
நான் உன்னுடனும்தான்.

ஒரு சொல் சொல்லிவிடு
தீர்ப்பில்லா
காலவரையறையற்ற
வதைமுகாமாகிக்கொள்கிறேன்.

புரிந்துகொள்....
போர்க்காலம் தாண்டியபின்
இன்னொரு சொல் வேண்டாம்
நம் இலங்கை அரசாங்கம்போல்!!!

http://kaatruveli-ithazh.blogspot.ch/2013/10/blog-post.html?spref=fb

ஹேமா(சுவிஸ்)

10 comments:

ஆத்மா said...

எத்தனையோ ரோஜாக்களை மொட்டுகளிலே கசக்கியுள்ளது ஆயுதங்கள்...
புகைப்படத்திலும் விட்டு வைக்கவில்லையா...

போர்க்காலக் காதல் வலி மிக்கது

அப்பாதுரை said...

சில அமைதிகள் தண்டிக்கப்பட வேண்டியவை. தெளிந்த காதலைத் தவிர்க்கும் அமைதி கொலைக்குற்றம். குற்றம் புரிவோருக்கு வதை முகாம் ஏதுமில்லையென ஏங்க வைக்கும் வரிகள். நன்று.

தனிமரம் said...

போர்க்காலககவி நெஞ்சில் இடிபோல இருக்கின்றது இன்னும் தீர்வுதான்???

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க்கையும் ஒரு போர்கலம்தான்..

போர் காலங்களை வென்று காதல் வாழட்டும்

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள் வலிகள்...

'பரிவை' சே.குமார் said...

வலி நிறைந்த வரிகள்...
போர்க்காலம் வலி சுமக்கும் கவிதை...

மகேந்திரன் said...

நெஞ்சம் ரணமாக
கொதிக்கின்றது
காதலின் இனிமையை ரசித்தாலும்
தருணத்தின் சாரங்களை நினைத்து...

சீராளன்.வீ said...

போர்க்காலக் காதலிலே - உன்
பொங்கியெழும் கண்ணீரை
பார்ப்பார் யாரோ - உந்தன்
பைங்கிளியோ நானறியேன்...!

அழகிய கவிதை
தொடர வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

Anonymous said...

வணக்கம்
மனதில் வலிகளை சுமந்த எங்களுக்கு அருமையான கவிதை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

jayaram said...

வலிகளின் காதல் வரிகள்

Post a Comment