*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 04, 2010

வெறுமையின் பாரம்...

இனி யாரும் என்னைத் தேடாதிருக்கட்டும்.
தடுத்துத் துகிலுரிக்க
கையொன்று என்னை தீண்டாதிருக்கவே
பாரங்கள் கையிலும் தலையிலுமாய்
எல்லை தொடும்
பறவையின் வேகத்தோடு புறப்படுகிறேன்.

வறுமை வயிறு காய்ந்தபோதும்
குழந்தைகள் நடுவில்
காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.
மனித உருவில் மிருகங்கள் வாழும்
குகையிலிருந்து செல்வது
வீண் விரயமாய் இல்லை எனக்கு.

பாரங்கள் தந்தவன்
வெறும் பொருளாய் பிண்டமாய்
நினைக்கையில்
தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
இடம் நகர்ந்து
காடோ கடலோ தேடியே போகிறேன்.

ஐந்தறிவு மிருகங்களால்
ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
வெற்றுப் பாராங்கள் மட்டுமே
எடுத்துப் போகிறேன்.
விட்டுப் போவதும் அதுவேதான்.

இனியாவது உணரட்டும்
மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
இல்லை அப்படியே வாழட்டும்.
மறுத்து வாழாத ஒருத்தி
வரும்வரை !!!

ஜெகா வரைந்த ஓவியத்திற்கு என் கற்பனையில்.
"ஜே..."ன் கவிதை காண...
ஹேமா(சுவிஸ்)

62 வருட சுதந்திரமாம்...

கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய் !

இது ஓர் சுதந்திரமாம்.அதுவும் அறுபத்திரண்டாம் !

செருகிய கிடுகு வேலிக்குள்
வேண்டுகோள்கள் விருப்பங்கள்
விண்ணப்பங்களாகி
பத்திரமாய்
கரையானுக்கும்
கணவனுக்கும் காட்டாமல்
இமைவரை அழுத்தி மை பூசி
மறைத்தபடி
சுதந்திர தேசத்து அதிர்வில்
அடுப்படிப் பாத்திரங்கள்
உருண்டு விழ
"சத்தம் கேட்டால் எழும்பிக் கத்துவார்"
மனதிற்குள் முணகியபடி
உணர்வுகள் முடங்க முறிய
சத்தங்களை சு(ச)கித்து
தொட்டிலோடு சேர்ந்தாடும் சுதந்திரப் பெண் !

இதுவும் ஓர் சுதந்திரம் !!!

வாழ்த்துக்கள் மனங்கள் நினைத்தபடி வாழ்வும் அரசியலும் நகர !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 02, 2010

பிரிவு...


பிரிவின் புதைகுழிக்குள்
புதையுண்டு போயிருக்கிறாயா
பிரிவின் வதையை
அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !

என்ன நடந்ததாக
என்னை விட்டுப் பிரிந்தாய்
என்ன சாதிக்கிறாய்
வானுயர சிறகடிக்க
சிறகு தந்து சேர்ந்து பறந்த
நீ.....
ஏன் பாதை மாறினாய்
பிரிவின் வழி சுகமானதா !

மரண தண்டனைக்குள்
தள்ளப்பட்ட எனக்காய் வாதாடி
விடுதலை தருவாய்
எனப் பார்த்திருக்க
மீண்டும்
சோகச் சிலுவைக்குள் அறைந்தவனே
என் கல்லறைக் கற்கள்கூட
கண்ணீர் சுரக்கும்
உன் பெயர் கேட்டால் !

எனக்கும் தெரியாமல்
என்னைத் திருடிவிட்டு
என் விருப்பம் தெரிவிக்க
ஒன்றுமே தெரியாதவனாய் மறுத்தது
படமாய் விரிகிறது மனக்கண்ணில் !
ம்ம்ம்.....
இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.
புரையோடிய மனதையாவது
திருப்பித் தந்துவிடு !

கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.
நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.
உன் அன்பால் கட்டுண்ட என்னை
நீயே சுட்டுப் பொசுக்கு.
செய் ...
உன்னால் முடிந்த எல்லாமே செய் !

பைத்தியக்காரனே
யாருமே பிரிக்கமுடியாது
என்ற எங்களை பிய்த்தவன் நீ.
இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்
ஒவ்வொரு நிமிடத்திலும்.
வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்
சேகரித்து கவிதைகளாக்கி
காயமுன்
எழுதப்பழகிக் கொள்கிறேன் !

எத்தனையோ சோகங்களை
சுட்ட பழம்போல ஊதித் தின்று
செரிக்கப் பழகிக்கொண்ட என்னால்
நீ தந்துவிட்டுப் போன சோகத்தை
ஏனோ பழக மறுக்கிறேன் !

இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!

வலியோடு ஹேமா(சுவிஸ்)

Friday, January 29, 2010

பிடிக்கேல்ல...

அ...னா
ஆ...வன்னா...படிக்கட்டாம்
தேவாரம் பாடமாக்கட்டாம்
வீட்டுப்பாடம் செய்யட்டாம்
பிடிக்கேல்ல எனக்கு.

ஐஸ்ல வழுக்கி விளையாட
சுவரில பென்சிலால கீற
ஐஸ்கிறீம் குடிக்க
விஜய் படம் பார்க்க
அவரின்ர பாட்டுக்கு டான்ஸ் ஆட

புதுச்சட்டை போட
பள்ளிக்கூடம் போக
அண்ணாவோட சண்டை போட
அக்கான்ர சாமான்கள் களவெடுக்க

அம்மா மடியில படுத்திருக்க
நித்திரை கொள்ள
ம்ம்ம்..பிறகு
ஹேமா வீட்டுக்குக் காரில போக
விரல்.....சூப்பவும்தான்

எல்லாம் பிடிக்குது
அது மட்டும் பிடிக்கேல்ல எனக்கு
ஏன் ? !!!

இவன் என் சிநேகிதியின் மகன்.
பெரி...ய விஜய் ரசிகன்.பெயரும் சச்சின்.

ஐ லவ் யூ டா செல்லம்.


ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 26, 2010

ஏன் மாறினாள்...

இப்போ.....
அவள் முன்னைப்போலில்லை.
தேவைப்படுகிறது
எப்போதும் அவன் அருகாமை.
கை கோர்த்தபடி சேர்ந்து நடக்கிறாள்.
சிரிக்கிறாள் நிறையக் கதைக்கிறாள்.
மனம் குறுகுகிறேன்
வெறும் கையாலாகாதவனாய் எட்ட நின்றபடி.

கூப்பிடுமுன் எனையறிந்து
பட்டாம்பூச்சியாய் என் பக்கம் அமர்பவள்
இன்று என்னைத் திரும்பிப் பார்க்கவே
அரமணி நேரமாகிறது.
கள்ளி இப்போவெல்லாம்
முன்னைவிட அழகாயிருக்கிறாள்.
அவளைக் கைப்பிடித்த காலங்களில்
அவளால்தான் நான் அழகாயிருந்தேன்.

குளிக்கும் நீர்கூடப் பெருமையடிக்கும்.
கூந்தல் மலரும்
மரத்தில் இருந்ததைவிட மணம் வீசும்.
முகம் பார்க்கும் கண்ணாடியோ கர்வம் கொள்ளும்.
கொள்ளை அழகு இன்னும் மெருகேறி
நடையில்கூட ஒரு நளினம்.
ஆனால் என் இணக்கத்தை மட்டும்
சுனைப்பாய் நினைக்கிறாள்.

அவள் முன்னைப்போலில்லை இப்போ.
மென்மையின் தாயாய்
தெருவில் தடம் பதித்தால் சருகும் சப்திக்காது.
பின்னழகின் கூந்தல் நீளம்,
கீறிவிட்ட கண்ணும் ,மூக்கும்
குழிவிழும் கன்னமும்
செவ்விதழின் விரிப்பில்
அசந்த சிலைகூட வரம் கேட்கும் உயிர்பெற.
இவளால் நான் கொண்ட இறுமாப்பெத்தனை.

என்னவள் இல்லை இப்போ முன்னைப்போல.
இதோ...இதோ வருகிறான்
காவற்காரனாய் வாசலில் நான்
எனக்கொரு வணக்கம் சொல்லக்கூட மனமில்லாமல்
சொல்லி நுழைகிறான் அவள் அறைக்குள்.
மெல்ல அணைக்கின்றான் ஏதோ கொடுக்கிறான்
அன்புநிறை நன்றி சொல்லி முத்தமிடுகின்றாள்.
கரம் தொட்டுக் கட்டியணைத்துக்
கூட்டிப்போகிறான் என் கண்முன்னாலேயே.

மனம் கொதித்து உலையாகி விம்ம
எப்படி இருந்த என்னவள்
ஏன் மாறினாள் இப்படி
வரட்டும் அவள் இன்று
"என்னை விட்டுப் போய்விடுவாயா அன்பே"
கட்டாயமாய்க் கேட்டுவிடுவேன்.
நினைக்கையிலேயே
நெஞ்சு வெடிக்காதா கடவுளே !

அவளுக்கு வயது எழுபத்துமூன்று
வந்தணைப்பவர் அவளது வைத்தியர் !!!

[2003 ல் ஒரு சுவிஸ் தம்பதியரைப் பார்த்த அனுபவம்]
ஹேமா(சுவிஸ்)

Saturday, January 23, 2010

மௌன மொழி...

சொல்லடி என்றேன்
என்ன என்றாள்.
மௌனம் உடை என்றேன்
ம்....என்றாள்.
ஏனடி கொல்கிறாய் என்றேன்
அதற்கும் சிரித்தாள்.

நிலவு பிடிக்குமா
உன் மடி படுத்தால்
தலை கோதுவாயா என்றேன்.
அதற்கும் மௌனித்து
அழத்தொடங்கினாள்.

பிறகு பேச்சு வராமல்
கவிதை சொல்லவா என்றேன்.
இறுக்கிய கை தளர்த்தி
தலை நிமிர்த்தி கண் பார்த்தாள்.
மௌனம் கலைக்கவா என்றேன்
தலையசைத்தாள்.

ஏதாவது...தர...வா
வார்த்தை தொடங்கிய என்னை
மிச்சம்
பேசவே விடாமல்
இதழோடு இதழ் அழுத்தி
மீண்டும் மௌனித்தாள்.

மௌனமே வெட்கி
மௌனிக்க !!!

ஹேமா(சுவிஸ்)