*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, August 14, 2014

குழந்தைகளற்ற தேசம்...

நிலாக்குட்டி....
உனக்கென்ன
விடுமுறையும் அதுவுமாய்
குட்டியானை
அதுதான் உன் அம்மாமேல்
உருண்டு பிரண்டு சண்டைபோட்டு
பிஸ்ஸாவும் சினிமாவுமாய்
பொழுது போக்குவாய்.

நிலா....
மூச்சை முழுதாய் உள்ளிழுத்து
மெல்ல அனுபவித்து
வெளிவிடுவது போலானது சுதந்திரம்
நிச்சயம் நீ அனுபவிப்பாய்
வேற்று நாட்டில் பிறந்தாலும்.

நம் ஊரிலேயே எத்தனை முறைதான்
அடையாள அட்டையை
முழத்துக்கு முழம் காட்டுவோம்
எப்போதாவது எப்போதாவதுதானே
இங்கு அந்த அடையாளம்
தேவைப்படுகிறது.

அழிந்த வீதி
இறந்த ஊர்
அலையும் ஆவிகளின் அழுகுரல்
நச்சுக்காற்றைச் சுவாசிக்கும்
உன் இனச் சகோதரர்கள்
போரில் இறந்த
முதல் விரலையும்
கடைசி விரலையும் கோர்த்த
உன் அண்ணா அக்காக்கள் வாழ்ந்த
அடர்ந்த சூன்ய பூமி
அடையாளக் கல்லறைகள்கூட
அற்ற அரூபம் அறிவாயா ?

குழந்தைகளை அழிப்பதே
அடக்குமுறைக்கான யுக்தியாய்
ஆயுதமாய் கையாளுகிறார்கள்
நிலா இப்போதெல்லாம்.

இனத்தை அடியோடு ஒழிப்பதை
சரிவரச் செய்கிறார்கள்
காஸாவிலும் ஈழத்திலும்
நல்லவேளை நீ
அங்கு பிறக்கவில்லை.

கோவிலில்லா ஊரில்
குடியிருப்பதுபோல
குழந்தைகளில்லா
ஊரும் வீடும்
எப்படியிருக்கும்
நிலா ?

நீ கேட்ட பார்பிக் கிலுக்கி
அங்கு இனிக் கிடைக்காது
பார்பிகளும் தம் தாய்களை
சூழ்ச்சி அரசியலிலிருந்து
காப்பாற்றும் கவலையில்தான்.

தாயின் குறியில் குண்டு வைத்து
கருவிலேயே கொன்றார்கள் ஈழத்தில்
காஸாவில் ஒவ்வொரு இஸ்ரேலியனும்
குண்டாகி
கொன்று தின்கிறான் குழந்தைகளை.

நிலா....
உனக்கு அம்மா சொன்னாளா ஒரு கதை ?

அரசியல் கிலோ என்ன விலையென்று
ஏதுமேயறியாச் சிலரையும்
இராவணுவக் குண்டுகள் துளைப்பதுண்டு
உன் தாத்தாவைச் சிதறடித்ததுபோல.

ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும்
அப்படித்தான் நிலா
உன்னைப்போல
பாலும் சொக்லேட்டும்
அம்மாவின் மடியும்
ஒரு கரடி பொம்மையுமே
உலகமாயிருக்கும்
அதற்கெப்படித் தெரியும்
அரசியலும் துப்பாகியும்
இனமும் மதமும்.

கண்முன்னால் பறிகொடுத்து
பதுங்கு குழிக்குள் பரிதாபமாய்
புலம்பித் தவிக்கும் பெற்றோர்கள்
குழந்தைகள்
பெற்றுக்கொள்வார்களா இனி ?
சாத்தியமில்லையே நிலா
இப்போதைக்கு.

இன அழிப்பின் உச்சத்திட்டம்
இதுதான் நிலா
அறிந்துவை
நம் இனத்தின் பாடுகளை நீயும்
இன உணர்வு ஓர் நாள்
உன் மனதோடு
கேள்வி கேட்கும் நிச்சயம்!!!

செஞ்சோலைச் செல்வங்களின் நினைவுநாளில்....

குழந்தைநிலா ஹேமா !

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதையை படித்த போது வேதனை மனதை அழுத்தியது. மிக அருமையாக சொன்னீர்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

ஆறா(த)து,ரணங்கள்.ஹூம்......................!

விச்சு said...

அறிந்துவை
நம் இனத்தின் பாடுகளை நீயும்// துயரங்களை படும் பாடுகளை எழுத்துக்களில் விதைத்துள்ளீர்கள். கண்ணீர்தான் மிச்சம்...

விச்சு said...

ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும்
அப்படித்தான் நிலா
உன்னைப்போல
பாலும் சொக்லேட்டும்
அம்மாவின் மடியும்
ஒரு கரடி பொம்மையுமே
உலகமாயிருக்கும்
அதற்கெப்படித் தெரியும்
அரசியலும் துப்பாகியும்
இனமும் மதமும்// என்ன பாவம் செய்தனவோ அந்த பிஞ்சுகள். ரணம்...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை அக்கா...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment