*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 06, 2014

குறிப்பற்ற யாசகம்...

ஆயுள் அவிரும்வரை
அஞ்ஞிமிறுக்கு
குறுஞ்செய்தியனுப்பலாம்.

தற்கொலையோ
இல்லை இயல்போ
இறுதியாய்த்தானே
உதடிறுகும்.

காத்திருக்கிறேன் குரல் கேட்க
நகச்சதை கடித்துத்துப்பி
இரத்தக்களறி...நுகர்ந்தும்
வந்தபாடில்லை அது
ஆனால்
அத்தனை கொடியதுமில்லை.

இன்றைய வெயிலை
உலர்த்தும் தென்றலிலும்
சில தீர்வுகள் இருக்கலாம்
சிந்திக்குமுன்
ஆவி நழுவுகிறது
சில பஞ்சுப்பூக்களோடு.

உரையாணி தேவையாயிருக்கிறது
பிரியங்களை மௌனமாய் மாற்றி
கனவுகளுக்குள் குறித்துக்கொள்ள.

இனிப்பெனத் தரும் கசப்பை
சொட்டுச் சொட்டாய்
உயிருருவிச் சிதிலடைத்து
வா........
எனக்கூறிவருமொருநாள்
மரணம் புதிர் அறுத்து.

சதுர்யுக யாசகம்
நெடுக நெடுக...!!!

குழந்தைநிலா ஹேமா.

1 comment:

Unknown said...

தற்கொலையோ
இல்லை இயல்போ
இறுதியாய்த்தானே
உதடிறுகும்.///ம்.......ம்...............!

Post a Comment