*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, October 06, 2013

ஏய் ...பாடலொன்று...

Love for music
குளிர்காலமோ கோடைகாலமோ
இசை.....
என் நாளைச் சுவீகாரம் எடுத்துக்கொள்கிறது
அன்றைய நாளின் ஆரம்ப இசை
என்னைத் தத்தெடுத்தும்கொள்கிறது....

மொழியில்லா இசைகூட
வந்தமர்ந்து கொள்கிறது என்சிறகில்
அதன் அர்த்தம் புரியாமலே
தோள்மேல் உறங்கும் குழந்தையாய்
மூச்சிலிறங்கும்
மூச்சைப்பறிக்கும் இணைக்காதலாய்....

அதானால்தான் ஒரு முறை சொல்லியிருந்தேன்
ஐ லவ் ரஹ்மான்
பின்னொருமுறை ஐ லவ் இளையராஜா
போதையில் ஒருமுறை ஐ லவ் ஹரீஸ்
ஐ லவ் எஸ்.பி.பி
ஐ லவ் ராஜேஷ் வைத்யா
காதலர்களை நான் மாற்றுவதில்லை இசையில்
நிறையவே காதலர்கள் இரவிலும் பகலிலும்....

சில பாடல்களை
என் வாழ்வில்
என் காதலில்
என் சோகத்தில்
ஏன்...என் மோகம் கூடும்
முச்சந்தியிலும் சந்தித்துக்கொள்கிறேன்...

பொழுதுகளைக் கள்ளாக்கிக் குவளை நிரப்பும் 
கனவுக் காதலன் கைகளில் ஊஞ்சலசைக்கும்
விரல் வெப்பத்தில் மதிமயக்கும்
ஏதோ ஒரு பாடலும் அதன் இசையும்
நடுவில் மனதை அறுத்தே போடும்
வீணையின் லாவகமும்...

சில பாடல்களில்
நுரை மிதக்கும் தேநீர்போல் ஒரு வசீகரம்
அப்படியே அள்ளியணைக்கும்
குழந்தையின் மென்னுடல்போல ஆத்மதிருப்தி
என் காதலன் முத்தம்கூட இசையின் பின்னால்தான்
என்னை அசைக்கும்...

இப்போ கோபித்துக்கொண்டிருப்பான் அவன்
ஆனால் பாடல் ஒன்றில்
சமாதானம் கொள்ளும் நம் காதல்...

ஒரு இசைக்காலத்தில்தான் அந்த அறிவிப்பாளன்
ஒருகோடிக் கும்பல் ஸ்வரங்கள் மத்தியில்
ஆண்குயிலின் கம்பீரக்குரலுடன்
என்னைச் பரப்பிச் சிதறவிட்டிருந்தான்
இசை மயக்கம் அதன்பின் உச்சநிலையில்...

சில இசைகள் தீர்மானிக்கிறது
வாழ்வுக்கான தீர்மானங்களை
ஒரு குக்கூ இசையுடன் .... !!!!

ஹேமா)சுவிஸ்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

இன்னிசை நின்று போனால்...
என் இதயம் நின்று போகும்...
இசையே… உயிரே…
எந்தன் தாய்மொழி இசையே...
என் இமைகள் துடிப்பதும் இசையே...
எங்கும் இசையே...
மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்... கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்... ஐம்புலன்கள் எந்தன் இருப்பு...
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு...
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு...
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு... இசையோடு வந்தேன்…
இசையோடு வாழ்வேன்…
இசையோடு போவேன்...
இசையாவேன்...

Anonymous said...

வணக்கம்
சில இசைகள் தீர்மானிக்கிறது
வாழ்வுக்கான தீர்மானங்களை
ஒரு குக்கூ இசையுடன் .... !!!!
கவிதை அருமை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

நல்ல கவிதை ஹேமா

'பரிவை' சே.குமார் said...

சில இசைகள் தீர்மானிக்கிறது
வாழ்வுக்கான தீர்மானங்களை
ஒரு குக்கூ இசையுடன் .... !!!!

ஆஹா... அருமையான கவிதை சகோதரி...

தனிமரம் said...

இசையில் தொடங்குதம்மா என்பது போல எப்போதும் பாடல்கள்தான் சாமரம்! கவிதையில் ஒரு புதுமை !

Post a Comment