*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, September 17, 2009

மலையடிவாரத்துத் தோழியே...3

உன் அப்பாதான் தோட்டக் கங்காணி.
பறங்கி வெள்ளைக்காரத் துரையோடு
கையில் ஒரு தடியோடும்
வெள்ளை வேட்டியும் சட்டையுமாய்
தேயிலை மலைகள் நடுவில்
தூரமாய் உயர மலையில் தெரிவார்.
உன் அப்பாவும் அம்மாவும்
இப்பவும் சுகம்தானே தோழி.

உன் அம்மா சுடும் ரொட்டியும்
சம்பலும் அது ஒரு அலாதி ருசியடி.
ஒற்றை ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.
கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.
சுடுநீர்க் குளியல்.
எண்ணை சளிக்க வைத்து வலிக்க வலிக்க
இழுத்துப் தலை பின்னிவிடும் உன் அம்மா.
போடி போ...மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.

ஒரு நாள் பகல் பொழுதில் கண்ணை மூடிக்கொண்டு
இரு கைகளை ஒரு கையாக்கி சுடுகாடு தாண்ட
வேணுமென்றே யாரோ பயமுறுத்த
காய்ச்சல் பீச்சலோடு படுத்துக் கிடந்தோமே
இருவரும் வாரம் இரண்டு.
இன்னும் நான் அப்படியேதான். நீ ?

அந்த இந்தியத் தமிழ் மக்கள் பேசும் தமிழின்
இழுவையும் ஒரு சங்கீதம்தான்.
உன்னோடு திரிந்த
அந்த இளமைக் காலத்தில்
பன்னிரண்டு வயதுவரை
அந்தத் தமிழைத்தானே நானும் உச்சரித்தேன்.
பின்னர்தான் அணைத்தது
யாழ்ப்பாணத் தமிழ் என்னை.
காலம் பிரித்தது கல்வி என்கிற பெயரில்
உன்னையும் என்னையும்.

மறந்தே விட்டேனடி இன்னொன்றை.
உன்னோடு உங்கள் பண்டிகைகள்.
ரதி மனமதன் கூத்து,மாவிளக்குப் பூஜை
மஞ்சத்தண்ணி நீராட்டு என்று.
முழுதாக இல்லை என்றாலும்
நீறாக நினைவு தெளிந்து மறைகிறது.
இதைவிடப் பௌத்த மக்களின்
பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.

இத்தனை வயது கடந்த பின்னும்
கடந்த தடங்களைத் தூசு தட்டி
உன்னையும் தேடுகிறேன்.
என் அம்மா கோழிக்கு அடை வைப்பா
பத்து முட்டை என்றால்,
அதில் எங்கள் அத்தனை பெயர்களையும்
பொறித்துக்கொண்டு காத்திருப்போம்.
எப்போ என் முட்டை குஞ்சாய்ப்
பொரிக்குமென்று.
அந்தக் குஞ்சுகளும்
எங்கள் பெயரிலே உலவி வரும்.

இன்றைய நாகரீகச் சூழலில்
அன்பும் அமைதியும் தெய்வமும் தூய்மையும்
தொலைந்த தேசத்தில் நாம்.
சொர்க்கமாய் இருந்த அத்தனையும்
இற்றுப்போனதாய்.
நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.

கண்கள் திரைகிறதடி
முழுதாகச் சொல்லாவிடினும்
எழுதியதில் முழுதாய் இருக்கிறாய் என்னோடு நீ.
அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை.
மலையடிவாரத்து என் தூரத்துத் தோழியே
என் இனிய நண்பியே
கூடப்பிறவா சோதரியே...சகியே
வளைத்துப் போடமுடியா
அந்த இன்பப் பொழுதுகளை
மீண்டும் கண்டுகொள்வோமா ?
நானும் நீயும்...
எப்போ சொல்லடி !!!

ஹேமா(சுவிஸ்)
[ஞாபகங்கள் போதும்]

15 comments:

S.A. நவாஸுதீன் said...

மிக மகிழ்ச்சியாகவும், மெல்லிய சோகத்தோடும், பிரித்தறிய இயலாத வலியும் என்று ஒரு கலவையாய் மனதோடு ஒட்டிக்கொண்டது ஹேமா.

விஜய் said...

"அப்போது இருந்த நான்
இப்போ எனக்குள்ளும் இல்லை"

சூப்பர்ப்

க.பாலாசி said...

//ரொட்டிக்கு எத்தனை கைகள் நீளும்.
ம்ம்ம்...மாங்காய்க் குழம்பு.சேமக்கிழங்குக் கறி.கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.//

ஆகா..நாக்கில் நீர் ஊறும் கவிதை...கொஞ்சம் பிரிவின் வலியுடன்...

அருமை... ஹேமா....

ஆயில்யன் said...

//கடைந்தெடுக்கும் வெண்ணையில்
பொரித்தெடுக்கும் முருங்கையிலைக்கு எத்தனை சண்டை.//

எத்தனை ருசி என்று சுவைத்த காலத்தினை நினைத்து கொண்டே படித்து முடிக்கையில் பிரிவின் சோகம் உணரமுடிகிறது

Muniappan Pakkangal said...

Vaathiar mahalum Kangaani mahalum sernthu kalakki irukeenga.You can't forget beautiful younger days Hema.

வேல் கண்ணன் said...

மூன்றையும் படித்து பார்த்தேன் ஹேமா.
ஏனோ ஒரு இனம் புரியாத வலியை ஏற்படுத்துகிறது. சுகங்கள், சோகங்கள் ஒருங்கே தான் அமைகிறது வாழ்க்கை. நினைவுகள் எல்லாம் சுமையாகி போனால்.....

ஆரூரன் விசுவநாதன் said...

//மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க.//

நினைவுகளின் ஆழம் புரிகிறது.

//பன்சல (புத்தவிகாரை) புத்தனின் பெரிய உருவம்.
இருவரும் இறுக்கிக் கைகளைப் பிடித்தபடி
முட்டுக்காலில் தாமரைப் பூ வைத்து
ஊதுவர்த்தியும் ஏற்றிக் கும்பிட்டதும்
நினைவலையாய்.//

எங்கு போய்த்தொலைந்தானோ? உங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டு,...இயலாமையில் ஒடி ஒளிந்துகொண்டானோ?


//நோக்கமில்லாமல் நகரும் உலகம்.
அதனால்தான் அழிவுகளும் ஏராளம்.
இத்தனை அழிவுக்குள்ளும்
இயலுமானவரை காத்துவைப்போம்
விழிகளுக்குள் எம் அழியா நினைவுகளை.
என்ன இன்பம் என்ன சுகம்.//

சொல்ல வார்த்தைகள் இல்லை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

கவிதாசிவகுமார் said...

வயது பல கடந்தாலும் தோழியை நினைத்தும் காண வேண்டியும் மனம் மருகி எழுதியுள்ள கவிதை. சுகமான நினைவுகளையும் சோகமான வலிகளையும் சுமந்துள்ளது நட்பிற்கு சமர்ப்பணமாய் இக்கவிதை. இந்தக் கவிதையை எப்படியேனும் உங்கள் தோழி படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உங்களை அடைய பிரார்த்திக்கிறேன் தோழி. வாழ்த்துக்கள்.

ers said...

விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்


புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

செம்மொழி said...

"மனம் களைத்துச் சோர்கிறது.
முடியவில்லை எனக்கு உன்னை நினைக்க"

...ஆழமான நினைவு ..அழகான பதிவு ..

பணி தொடர வாழ்த்துகள் .. :)

அன்புடன் நான் said...

ஹேமா தங்களின் கலையாத நினைவுகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக பின்னிய பட்டாடையை போல் உள்ளது.

அதிலும் நெய் உருக்கும் போது அதில் முருங்கைஇலை போட்டு எடுத்து ருசித்தது எனக்குள்ளும் பழைய நினைவை எற்படுத்தியது.

Anonymous said...

நல்ல நினைவலைகள்.... அழகான தொகுப்பு.

சந்தான சங்கர் said...

ஈழ மண்ணின்
ஈர நினைவுகள்,

போர்த்திய பசுமையை

நேர்த்தியாய் மீண்டும்

விரித்திருக்கின்றாய்,

உதடுகளின் வார்த்தைகளை

இனம் கண்டு பல

இனம் கொன்ற தேசத்தில்

மனம் கொண்ட கிளியின்

ஏக்கம்.ரசாயன ஆயுதங்களில்

ரசம் இழந்த ஈழ
வடுக்கள்.

உன் நினைவுகளின்
ஏக்கம் கண்டு ஈழ மண்ணில்
உறைந்துவிட்ட குருதிகூட
உருகிவிட்டு மருகி எழும்.

தோழியே!
நனைந்துவிட்டேன் உன்
ஞாபகங்கள் எனும் மழையில்
"வானம் வெளித்த பின்னும்"

Nathanjagk said...

இந்த அசாதாரணமான விவரணைகளும் கவிக்காட்சிகளும் படிப்பவனை தேயிலைக் காட்டுக்குள் ​தொலைய வைத்துவிடுகிறது.

தோட்டக் கங்காணியின் உருவம்..
மாங்காய்க் குழம்பு, சேமக்கிழங்குக் கறி
வெண்ணையில் பொரித்தெடுக்கும் முருங்கையிலை (அதாவது நெய் ​உருக்கும்​போது போடும் முருங்கையிலை?)
ரதி மன்மதன் கூத்து, மாவிளக்குப் பூஜை, மஞ்சத்தண்ணி நீராட்டு
முட்டையில் ​பொறிக்கப்படும் பெயர்கள்....

யப்பா...!!

முட்டையில் பொறிக்கப்பட்ட பெயர்கள் அழகிய புகைப்படமாக மனதில் தங்கியிருக்கிறது.

நான் எப்பவாவது சினிமா எடுப்பேனென்றால்.. அதில் பால்யத்தை காட்டும் காட்சி வருமென்றால்... அந்தக் காட்சியை பெயர்கள் பொறிக்கப்பட்ட முட்டைகளாகத்தான் காட்டுவேன்.

அதில் நிச்சயம்.. ரதி என்ற பெயர் ​எழுதப்பட்டிருக்கும்.

Hema said...

super

Post a Comment