*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, October 31, 2009

இருளும் ஒளியும்...

புத்தகங்களோடு புரண்டபடி
குண்டுச் சட்டிக்குள்
குதிரையோடிக் கொண்டிருக்கும் வரை
வாழ்வின் வறட்சி புரிவதில்லை.

அலுவலக அறைக்குள்
பூம்...பூம் மாடாய் ஆமாம் போட்டு
அன்னிய மொழியில் அளவாய் அறுத்து
பொய்யாய்ச் சிரித்து வரவேற்று
அந்தி சாய
நெரிசல் குறைந்த
பேரூந்துக்காய் காத்திருந்து ஏறி
வீட்டு வாசல் வரும்வரை
சொல்லிவிட்ட சாமான்கள்
ஞாபகத்திற்கு வரவேயில்லை.

ஜோனிவாக்கர்
கோலா கலந்து குடிக்கிற வரை
முன்னம் இருந்த
கறுப்பன் வெள்ளையன்
சாதி பேதம்
போன இடம் புரியவில்லை.

அறியா நண்பனிடம்
தீப்பெட்டி உரசப் போய்
தொத்திக் கொண்ட உறவாய்
கல்லறைத் தொழிலாளி
பேதம் தெரியவில்லை.

வாழ்வு என்னமோ
என்னை சுற்றி என்கிற மாதிரி.
வாழ்வின் வட்டம் கடந்து
மாயை உலகம்
மயக்க வாழ்வு பற்றிப் பேசும் வரை
சுமை போன இடம் புரியவில்லை.

எல்லாம் முடித்து வீடு வர
முதுகில் தொங்கும் மகன்
இறுக்கிக் கட்டினாலும்
முகம் சுழிக்கும் அவனுக்கு
கணவனாய் அப்பாவாய் ஆகும் வரை
அவனுக்கும் புரியப்போவதில்லை
வாழ்வின் இருளும் மயக்கமும் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 27, 2009

புதிதாய் ஒரு பூ...

நொந்த தருணங்கள் நொடிந்து விழ
எண்ணச் சிலந்திகளை கடித்துப் துப்ப
அந்தகார அரூபங்களாய் எரி பூச்சிகள்.

பகலவனுக்குப் போட்டியாய் எரிக்க
என்னுள் நெருப்பின் பெரு வெளிச்சம்.
தீயின் அகோரம்
என் பசப்புச் சிரிப்பை
அம்பலப் படுத்தி
எரித்துக்கொண்டே விரட்டுகிறது.

கோடை விடைதர
வாடைக் காற்றில்
பூமி மஞசள் நிறத்தில்
நாகரீக உடையோடு.
எனக்குப் பிடிக்காவிட்டாலும்
அரிதாரம் இட்டுக்கொள்கிறேன்
அடையாளம் காட்ட.
வேற்று நிறங்களை பூமி ஏற்றுக்கொள்ள
வேறுபட முடியாமல்
ஒத்துழைத்துத் திரும்புகையில்
வாழ்வின் உண்மைகளில் ஒரு வெறுமை.

பல்கனிப் பூக்களோடு மட்டும் பேசிய நான்
பெயர் தெரியாத பூவொன்றிற்காக
நாள் தோறும் காத்திருக்கிறேன்.
பூட்டிய கதவிடுக்கில்
மெதுவாய்த் தென்றலின் நடமாட்டம்.

நான்கு சுவர்களுக்குள் பயணித்த உணர்வு
மொழி கடந்து தூரம் கடந்து
பதிலில்லாக் கேள்விகளோடு
நெடும் பாதையில் விரைகிறது.
பாதைகள் திசை சிதறிப் போனதா.
இல்லை...
என் உணர்வுகள் கலைந்து போனதா.

புரியாத வேளையில் ஒரு புது நட்பு
அன்பின் சக்தி கண்டு அதிசயித்தபடி
நீட்டிய கரத்தோடும்
முரட்டு மீசையோடும்
கோர்த்துக்கொள் கையை
நம்பு
நானும் உன்னோடு
உறவாய் என்றபடி.

புரியுமா என் மீதான
குற்றங்களும் நியாயங்களும்
பெயர் தெரியாத மலரோடு
நெருங்கும் நட்புக்காவது !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, October 22, 2009

சேமித்த கணங்களில்...


ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !

என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !

தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன்
என் கண்களை !

மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !

நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !

நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை !

சுற்றிச் சுழன்று
திரும்பியும் விழுகிறேன்
உன் நினைவுக் குழிக்குள்.
என் புதைகுழியாகவும்
அமையலாம் அது !

கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டிருக்கிறாய்.
உன்னைத் தாண்ட முடியாத
சுதந்திரம்.
எனக்கு ஏன் !

நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன்
படுக்கை முழுதும் நீ.
கைகளோடு
இறுக்கிக்கொள் என்கிறேன்.
மறுபடியும்
உயிர்த்தெழுந்து
மடி சாய்த்துக்கொள்கிறாய்
உணர்வோடு !

உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
பத்து நாள்தானே
பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
கல்லாய்த்தான் இருந்தேன்
கரைத்தது உன் அன்பு.

கண்ணீரின் சாரல் எங்கும்
அன்பே...போய்விடு
யாரும் பார்க்கமுன் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, October 19, 2009

நேற்றைய இரவில்...

வெள்ளைத் தெருவில் குடியிருப்பு
பலகாலமாய்.
குடிசையும் கூடும்
வாழ்வும் நிரந்தரமாயிற்று.

மாற்று வாழ்வை
நெளிந்து வளைந்து
பழகிக் கொண்டாலும்
உட்புக முடியாமல்
இகழ்தலுக்காட்பட்டு.

மரபணு கொல்லாமல்
தொடரும் நகர்வில்
இன்னும்
இரையூட்டி...இரையூட்டி
வளர்ந்த ஒரு மிருகம்.

காயசித்திக் காரகன்.
காரடை தின்றாயா
காராம்பசுவில்
பால் கறந்தாயா என்கிறது
பிந்திய இரவில்
செய்மதி துளைத்து.

காரணம் சொல்லாத கோடாங்கி.
இயல் இனம் மாறாத கார்க்கோடகன்.
இல்லையேல்
கேசவாரிப் பறவையாயும் இருக்கலாம் !!!

இகழ்தலுக்காட்பட்டு (நன்றி நேசன்)

ஹேமா(சுவிஸ்)

Saturday, October 17, 2009

தீபத்திருநாள் ஈழத்தில்...

Orkut Scraps - Butterfly
தமிழன்னை தவமிருக்கிறாள்.
நொந்திருக்கிறாள்.
அவதி அவளுக்கு
வேதியல் மாற்றங்களாலும்.
தன் குழந்தைகளின் இழவுகளுக்கு
அழுதழுது கண்களிலும் புண்.
உயிர்கசிந்து
ஊண் உருகிக் கிடக்கிறாள்.
கனத்த பாரம்
கைகளிலும் தோள்களிலும்.
பாவம் கொஞ்சம் தூங்கட்டும்.

உற்சாகமாய் பசுமையாய் எழுவாள்
இயற்கை அன்னை உயிர்ப்பிக்க.
மலைகளைச் சுருட்டி வைத்து
புயலின் உதவியோடு
பெருமூச்சுக் களைந்தெறிவாள்
காத்திருப்போம்.

அண்டம் விரிப்பாள்.
அவனியெங்கும்
மகப்பேறுகள்.
சூல்கொள்வாள் தானும்.
வண்ண வண்ணமாய்
வண்ணத்துப் பூச்சிகள் படைத்து
கலயம் கலயமாய்
கருமுட்டைகள் கொடுத்து
மயிர்கொட்டிப் புழுக்களால்
என் தேசம் நிறைப்பாள்.
தானும் பத்தியம் இருந்து
பேறுகாலம்
பார்த்துக் காப்பாள் அவளே.

முட்டைகள் வெடித்து விழும்
மயிர்கொட்டியாய்.
இன்னும் இனம் வளர்ப்பாள்
மீண்டும் கூடுகட்ட
இருள் விலகும்.

வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணங்களால்
புதுச்சேலையுடுத்தித் திளைத்திருப்பாள்
என் தமிழ்த்தாய்.
ஈரவிழி அசைவில்
ஒளி உமிழ்வாள்.
அன்றே...
தீபத்திருநாள் ஈழத்தில் !!!

என் இனிய நண்பர்களுக்கு
என் மனம் நிறைந்த தீபஒளி வாழ்த்துகள்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 13, 2009

முடியாத அவகாசங்கள்...

சிரிக்கச் சிரிக்க
கவிதை ஒன்று எழுதலாமென்று
விறுவிறென்று
சிவப்பு விளக்கில் கூட
நிற்காமல் நடக்கிறேன்.

தபால் பெட்டியில் அபாய அறிவிப்புக்கள்.
பூட்டிய கதவைத் திறக்கும்போதே
தனிமை முட்டித் தள்ள
தொலைக்காட்சி திருப்புகையில்
"முகாம்களிலும் பட்டினிச்சாவு".
தொலபேசி அலற
பிறந்த தேசத்து அகதிகளுக்கான பணத்திரட்டல்.
வெதுப்பகத்து ஏதோ திரள் ஒன்று
பசி போக்கக் குளிர்ந்து கிடக்க
ஒரு மிடர் தண்ணீரால் தொண்டை நனைத்து

இணையம் திறந்தால்
இறப்பு
அழிவு
அலட்சியம்
அநியாயம்.

இயலாமை வர்ணங்களால்
சிலவரிகள் கிறுக்கத் தொடங்குகிறேன்.
சிவப்பு
பச்சை
நீலம்
கறுப்பு என
கண்ணீரில் கரைந்து
என்னை மாற்றுகின்றன வர்ணக் குழைவுகள்.

காதலைத் தேடினேன்
அங்கும் காத்திருப்பு
சந்தோஷம்
சிரிப்பு
தோல்வி
அழுகை
முற்றும்.

மீண்டும்
நானும் என் அறையுமாய்
தனிமையே சுகமாயிருக்கிறது.
அழப்பிடிக்கவில்ல
சிரிக்க வசதியில்ல.

சிரிப்பு...
தூர நின்று
என்னைப் பார்த்துச் சிரித்தபடி !!!

ஹேமா(சுவிஸ்)