*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 07, 2015

அனுகரணவோசை...

அவிழ்த்த
நூல் பிரித்து
கயிறாக்கியிழுத்த
போட்டியின் வெற்றியில்
இரத்ததானப் பெருவிழா.

இத்தனை ஏக்கமா
இருந்திருக்கிறது
யாக்கைக் குடுவைக்குள்
காதலும் காமமுமாய்.

தோய்த்தெடுத்த
ஈரங்கள் காயப் போதுமாயிருந்தது
இருபது விரல்கள் பிணைத்த
நிமிட மென்வெப்பம்.

வியர்வையில் முளைத்து
மௌனித்த நாணம்
இதழ் இதழாய்
அவிழ்ந்த மணம் மடியில்.

ஒற்றை நிலைக்கண்ணாடி காண
கொழுக்கி விலகிய சங்கிலியில்
சம்பிரதாயச் சடங்கு.

இனி
ஊரும்
எறும்புகளும்
பிரிக்கா இடைவெளியற்ற
ஆடைகள்
தேடி உடுத்துவதே அழகு.

உதட்டு முத்தங்கள்
ஒட்டிய இடங்களில்
சுவாச வாசங்களாய்
அன்பின் தியானம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Saturday, April 04, 2015

கனவும் கடனும்...

கண் மூடினால்
கனவுகளில்
கனவுகளைத் துரத்தும்
பிரமாண்டப் பாம்பு
இடிந்து விழும் வானம்
புயல்
போர்
வன்முறை
வறுமை.

இன்றைய புதுக்கனவில்
என்றோ
தாத்தா சொன்ன
ஒற்றைக் கண்ணன்
துரத்த....

ஓடிய திசையில்
ஆழக் குழியொன்றில்
குப்பறத் தள்ளிய
நடு இரவில்
பிஞ்சுக் குழந்தையின்
கரங்களில் தஞ்சமாய்
தூங்கும் கனவில் நான்.

இனிப்புக்கள்
தேவதைகள்
நட்சத்திரங்கள்
பனிப்பாறைகள்
பளிங்கு மாளிகைகள்
மூக்கு முட்டும் வாசனையோடு.
வேண்டாக் கனவுகளை
அடித்து விரட்ட ....

பச்சைத் தவளை
டோராக்குதிரை
சிவப்புச் சிங்கம்
மஞ்சள் நாய்
சிவப்புப் பாம்பு
ஓடும் ஊர்தி
பறக்கும் விமானம்
குட்டிக் குட்டியாய்.

போர் நிறைந்த உலகில்
சிசுக்கள் நசுக்கும் பூமியில்
கை உயர்த்தி
அடிமைப் படா
ஓர் குழந்தை.

சிரிக்கும் கனவை
சிதைக்காமல் இணைகிறேன்
குட்டிப் புன்னகைக்குள்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Thursday, March 26, 2015

ஆசுவாசம்...

ஈரூற்றுக் குருதியின் பெருவலியோடு
வானம் கூடடைகிறது ஒற்றையாய்.

இந்நிகழ்வுக்குத் தேவையாய்
கண்களைக் குளிப்பாட்டித் திரும்ப
வானவில் சமைக்கும்
நிறுத்தல் குறிகளின் விளம்பல்.

தேவையற்ற அலங்காரமும்
பரப்பிய பூவும்
தட்டோடு காத்திருக்கும்
பழங்களும் பாவம்.

ஆதிமனிதன் தின்று
போட்ட விதையில்
முளைத்த முத்தக்கோட்பாடு
எச்சிலாய் வழியும்
அக்கினிக்குச் சாட்சியாய்.

ஏன் இத்தனை
ஆயுதக் கண்கள் கொக்கியாய்
இங்கவிழும் ஆடைக்குள்.

அவசியமற்றது.....

கனவுகளைத் தின்ற
இந்த இரவும் முடியும்
போதும்
மிச்சம் மிச்சமென
தாய் சேய் நலமென்பதோடு!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Friday, March 20, 2015

எட்டு முத்தங்கள்...

வதை முகாம்களில்
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !

வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !

இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!

பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !

மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !

வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !

மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !

நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

Tuesday, March 17, 2015

வேண்டுமொரு கண் திறந்த புத்தன்...

பழைய சொற்களோடுதான்
அவர்கள்
ஆட்கள் மாறிக்கொண்டு
எங்களையும் மாற்றாமல்
மாற்றிக்கொண்டு.

பிரகாசமாய்
புத்தனைக் கண்டேன்
பாதுக்காக்கும் தன் பல்லால்
பழைய சொற்களை
அவர்கள் தீட்டிப் புதிதாக்க
வாய்திறவா
தன் சொற்களோடு
மத்தியில்.

நித்திய பாவனையில்
கண்ணை மூடி
பெருங்காதுகளில்
சேமித்த படிமங்களோடு
தனித்திருந்தான்.

எப்போதோ....எப்போதோ
புத்தன் கண்ணொளி பறித்து
பரணில் பதுக்கியதாக
தேசியம் பேசும்
ஒரு பிக்கு.

சமத்துவம் சொல்லும்
'மைத்திரி' க்களும்
'சிறீ' க்களும்
புத்தனின் ஒளிவட்டத்தை
தம் தலையில்
பொருத்தியிருக்கிறார்கள்.

துவக்குகளற்ற தேசத்தில்
'துட்டகைமுனு' க்களும்
'காமினி' க்களும்
'ரணில்' களும்
இந்திய
'மோடி' க்களும்
மாடி உலகமும்
புத்தனை பேசவிடாமல்
பேசிக்கொண்டிருக்க...

அவன் கண்மூடியபடிய
திறந்த பெருங்காதுகளோடு
எப்போதும்போல
வேறு வழியின்றி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Sunday, March 15, 2015

ஒரு அகதிக்காதலும் ஒரு அதிகாலையும்...

மூடிக்கிடந்த விழியில்
ஒளியள்ளி வீசிவிட்டு
ஒளிகிறான் ஒரு திருடன்.

கரகரக்கும் இமை உதற
கருநீலக் கண்ணனாய்
சிறைப்பட்ட காற்றாய்
மெல்லக் கசிகிறான்
எங்குமிசைக்கிறான்
ஏதோ ஒவ்வொன்றிலும்
அது அதுவாய்.

காதல் குடில்
புல்லாங்குழல் வேலி
நகரா இசைக்குள்
சுற்றிவளைக்கப்பட்ட
அவன் நினைவுகள் தவிர
ஏதுமில்லை மீட்ட.

மண்பூத்த பனிப்பூவில்
சிலிர்த்து மலர்கிறது
தூரத்துக் காதல்.

அகதிக்காதல் என்கிறேன்
நான்...
அவனோ...
அதிகாலைக் காதலென்கிறான்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)