*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, March 17, 2015

வேண்டுமொரு கண் திறந்த புத்தன்...

பழைய சொற்களோடுதான்
அவர்கள்
ஆட்கள் மாறிக்கொண்டு
எங்களையும் மாற்றாமல்
மாற்றிக்கொண்டு.

பிரகாசமாய்
புத்தனைக் கண்டேன்
பாதுக்காக்கும் தன் பல்லால்
பழைய சொற்களை
அவர்கள் தீட்டிப் புதிதாக்க
வாய்திறவா
தன் சொற்களோடு
மத்தியில்.

நித்திய பாவனையில்
கண்ணை மூடி
பெருங்காதுகளில்
சேமித்த படிமங்களோடு
தனித்திருந்தான்.

எப்போதோ....எப்போதோ
புத்தன் கண்ணொளி பறித்து
பரணில் பதுக்கியதாக
தேசியம் பேசும்
ஒரு பிக்கு.

சமத்துவம் சொல்லும்
'மைத்திரி' க்களும்
'சிறீ' க்களும்
புத்தனின் ஒளிவட்டத்தை
தம் தலையில்
பொருத்தியிருக்கிறார்கள்.

துவக்குகளற்ற தேசத்தில்
'துட்டகைமுனு' க்களும்
'காமினி' க்களும்
'ரணில்' களும்
இந்திய
'மோடி' க்களும்
மாடி உலகமும்
புத்தனை பேசவிடாமல்
பேசிக்கொண்டிருக்க...

அவன் கண்மூடியபடிய
திறந்த பெருங்காதுகளோடு
எப்போதும்போல
வேறு வழியின்றி!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

பாவம் புத்தர்!

சாய்ரோஸ் said...

ஹிட்லர்களுக்கும் ஸ்டாலின்களுக்கும் மத்தியில்
புத்தரால் மட்டும் வேறென்ன முடியும்?...
தமிழினத்துக்கு விழும் வாய்க்கரிசியை
வேடிக்கை பார்ப்பதன்றி?...

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமை...

V.N.Thangamani said...

TAMILANIN VITHIYOO.....!

Post a Comment