*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, July 02, 2013

முத்தத் துளிகள் (2)

தேன் முத்தம்
தரும்
திருடன்
உன்னைத் தின்ன
என்னோடு
காத்திருக்கிறது
தேன் களவு கொடுத்த
வண்ணத்துப்பூச்சியுமொன்று !

ஒரு கன்னம் நிறைத்(ந்)தால்
மறு கன்னமும் காட்டு
சொல்லி வைத்தார்
சிலுவைச்சாமி
சரி சரி....
மறு கன்னத்தையும்
நிறைத்திவிடு
இது காதலர் தினம் !
இன்றெல்லாம்
சொன்ன உன் வார்த்தைகளை
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
போதவில்லை கவிதையாக்க....
உன் வெடிச்சிரிப்ப்பும்
போதாது....
ராத்திரி
மு...த்...த...ம் தர
விடிகாலை...
முழுக்கவிதையாகிவிடும்
பாரேன் !
நீ.....
தராத முத்தத்தால்
நிரவாமல் கிடக்கிறது
கன்னக்குழிகள்
என்.........
முழுமையடையாக்
கவிதைபோல !
உன்...
தீராக்கோபங்களால்
எனக்குள்....
கருக்கொள்கிறது
முத்தக்குஞ்சுகளாய்
தரப்போவதில்லை
இப்போதைக்கு
உன்னிடம் நான் !

ஹேமா(சுவிஸ்)

Saturday, June 29, 2013

எனக்கான காடு...


உனக்கும் எனக்குமான
இந்தப் பெரும் காட்டில்
இல்லாதிருக்கிறது
என் சந்ததிக்கான இடம்.

பாறைகளில் மோதி வீழும்
பறவையல்ல நான்
வல்லமையற்ற மனதோடு
திசைகளை
மாறிக் கீறிக்கொள்ள
முட்டாள்களின்
வழித்தோன்றலும் அல்ல.

புகைப்படங்களிலும்
பொருட்காட்சிச்சாலையிலும்
தொங்கும் காட்சிப்பொருளல்ல
எங்கள் அவல வாழ்வு.

முன்னையோர் சேகரிக்காத
எமக்கான சரித்திரங்களை
என் சந்ததியாவது எழுதும்
வழிவிடு.....

இது எனக்கான காடு
இளங்கன்றுகள் பயமறியாது
எச்சரிக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, June 28, 2013

ஞாலத்துளி...


கடக்காது கரை
ஆர்கலி (கடல்)
மீள்கூடும் கூழாங்கல்.

சிதைந்துலர்ந்த வர்க்கபேதம்
உருமேறு தெருநாயின்
நச்சுப்பல் புண் புணர்வு
இரவுக்குறியோசை.

கல்லும் உதவும் ஒருக்கால்
எள்ளின் புல்லும்
சூடாற்ற புவிபரவ
மனிதம்
மதியாக் காளான்
கோட்டமாய்
மண்சாடிக் காலிறங்கும்.

குருதி குடித்த சாத்தானின்
சூன்யச் சீரழிவு
கடைவாய் வழி
நாகரீக அலங்காரமென
நிர்வாண காதம்
பேச்சு உடை.

கொட்டாவி ஊழியன்
தட்டும் தகரம்
ஊர்வெளியில்
நிர்மாலியச் சடங்காய்
 
நிருத்தம்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, June 24, 2013

சொல்லித் தொலைந்தவர்...


கூப்பிய கரங்களுக்குள்
அகப்படாத ஒரு கடவுள்
தோரண நூல்களைப் பிரித்து
வெளிநடப்புச் செய்திருந்தார்
இன்று காலை.

நேற்றுப் பேசிக்கொண்டிருக்கையில்
பறந்தடித்த
புழுதிக் கடதாசியில்
தன் இருப்பிட விலாசத்தை
தந்தும் போயிருந்தார்.

அர்ச்சனைப் பூக்களோடு
ஒரு குழந்தை
தானும் தேடிக்கொண்டிருப்பாதாய்
தெருவழி என் கை பற்றி
வரைந்தும் காட்டியது
கன்னக்குழி ஒட்டிய
அந்தக் கடவுள் முகத்தை.

இரவெல்லாம்
இருவரும் பாடித் தீர்க்கிறோம்
தேவாரம் தவிர்த்து
தாலாட்டுப் பாடல்களை
சொல்லித் தொலைந்தவருக்காக.

அக்கடவுளின்
ஒரு நிமிடச் சலசலப்பு
நீள்கிறது
வெறுமை விலக்கி
காலையும் மாலையும்
தொடரும் இரவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, June 19, 2013

எழுதா வரிகளில்...


உருவம் உலர்ந்து
மரித்துக்கொண்டிருக்கும்
பறக்கவியலா
எண்ணெய் தோய்ந்த சிறகொன்றை
பெயரில்லாப் பூச்சியென
புல்லிடுக்கில்
முண்டி வளரும் புல்லென
கண்டிருந்தேன்
புறநகர் வீதியொன்றில்.

பெரியாரையும்
ஓஷோவையும்
சேகுவராவையும்
தனக்கான அடையாளங்களோடு
தன் அலமாரியின்
இரண்டாவது அடுக்கில்
சேமித்து
வம்சம் வளர்க்க
நானென்ன இயந்திரமாவெனக்
கேட்டவளை....

எழுதப்படா
என் கவிதை வரிகளில்
நீண்ட வகிடெடுத்து
இரட்டைப்பின்னலோடு
சில கம்பீர வரிகளில்
பொருத்தியுமிருந்தேன்.

அலட்சியங்களுக்குள்
அர்த்தமற்ற சுலோகமென
புதைகிறது
சில இலட்சியங்கள்!!!

ஹேமா (சுவிஸ்)

Sunday, June 16, 2013

அப்பா...


சிற்பியென
பாறை செதுக்கி
மொழியறிவித்து
வலிதாங்கும் வேராய்
இன்றும் அப்பா.

இளைத்தவிரல்
ஆதுரமாய் பற்றி
இறைந்துகொண்டிருக்கும்
என் இருப்புக்களை
எப்போதும்
'அம்மாக்குட்டி'யென.

தன்வழி
உதிர்த்துப் போகுமென்
குஞ்சுக்கால சிறகுகளை சேமித்து
தன் நிழலில் இளைப்பாற்றி....

பெருவெளியோடு
அடர்ந்த நீல
விளிம்புகளை
நான் வரைய அனுமதி தந்து....

ஒப்பீடென விரல் நீட்டி
சொல்லமுடியா
இரையும் அக்கடல்
அகதிதேசம்வரை
சரியாய் செதுக்கும்
தச்சனென இப்போதும்
என்னை.

தூரதேசதிலிருந்தபடி
உப்புக் கண்ணீர் வரைகிறது
ஒரு வரி அப்பா!!!

ஹேமா(சுவிஸ்)