*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, August 13, 2012

புலம்ப விடுங்களேன்...

குற்றங்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறவன்தான் நியாயப் புத்தகங்களை சுமந்து திரிவான்.நான் சுமையற்ற சிறு மரமாய் எனக்குப் பிடித்த காற்றில் தலை கோதிக் கொள்கிறேன்.அதே காற்று உன் வீட்டுக்கும் வரும்.உன் அறையின் திரைச்சீலையையும் தென்றலாய் அசைக்கும்.வலது உள்ளங்கையில் தானாக வந்து அமர்ந்துகொண்ட காற்றைப் பறிகொடுத்தாலும்....எத்தனை கல்வீசினாலும் கலங்காத குளத்தில் பூவொன்று விழுந்து கலங்கிப்போனது...!

......க்காரன் என்றே பெயர் வைத்திருந்தேன்......பெயர் தெரியவில்லை.தெரிந்தாலும் சொல்லப் பிடிக்கவில்லை.முதலில் அவன்தான் ”தாமதாய் வந்த பல்கலைக் கழகம்! ஆசையோடு படிக்கிறேன்!பாஸ் பண்ணுவேனா???” என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.மகிழ்ச்சிகளை அள்ளிக்கொடுத்தே பழக்கபட்ட நான் என......இன்னும் ஏதோ ஏதோ...கவிதையாய்ச் சொல்லிச் சிரித்தான் !

குற்றமென்று எந்த வரைமுறையும் எனக்குக் கிடையாது.....ஆக அதற்குண்டான நியாயத்தைப் பற்றி சிந்திக்கிறவளும் நானில்லை.ஆனால் எதற்காகவோ தண்டிக்கப்படுகிறேன்.அன்பே கிடைக்காத காட்டில் திரிந்த வேளை தெரிந்த குட்டி மின்னலென வெளிச்சம் தந்து என்னைத் தன் கைக்குள் பொத்திய அந்த நிமிடங்கள்....!

நிச்சயம் இது ஆயுள் தண்டனை.இந்தத் தண்டனை....தன்னை மறந்துவிட்டேனா என என்னைப் பரீட்சித்த அந்த ஒற்றை உயிருக்கு மட்டுமே வெளிச்சம்!


முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 07, 2012

பெரிதாய் சிறிதாய்...

நீண்டிருக்கும் அது
சிலசமயம்
பெரிதாயும் சிறிதாயும்.

தவறுகள்
தேவைகளுக்கேற்ப
கனவுகளை இழுத்துத் தகர்த்துவிடும்.
முன்னால் நிற்பவன்
அலுகோசா அன்பானவனா
நீதியானவனா நெறிகெட்டவனா
அதற்குத் தேவையற்றதாய்.

"உனக்கு நீயே கடவுள்"
தத்துவம் இங்கே பொய்யாகி
உயிரின் தீர்மானம்கூட
இன்னொரு கையிலாகிறது.

விஞ்ஞான யுகம் தந்த
வரங்களில் இதுவுமொன்று.
உயிருள்ளவை
உயிரற்றவை
விஞ்ஞானம்
பகுப்பாய்வு முடிவுகள்
சிரிப்பாயிருக்கிறது நினைக்க.

பிரபஞ்சத்தை
நிர்ணயிக்கிறதாம் செயற்பாடுகள்
ஹிரோஷிமா நாகசாகி
உலக யுத்த
அழிவிலும் ஆரம்பம்
இன்றைய யப்பான்.

பேச்சுள்ளவனை ஊமையாக்கி
அந்த ஊமையுடன்
பேச....
நட்புடன் சிரிக்க
நினைத்ததைச் சாதிக்க
சிலசமயம்
நீட்டிய முகத்துடன்
சிறிதாயும் பெரிதாயும்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, August 04, 2012

காதல் துளிகள் (1)...

வாசனை தெரிந்திருக்கும்
வடிவம் அறிந்திருக்காது
அதுபோல
பெயெரில்லாப் பூ
நீ...

தலை கோதும் விரலும்
தாலாட்டும் உன் குரலும்
இன்றெனக்கு
இல்லையென்றால்
இயற்கையில் ஏதோ
இன்னலே தவிர
உன்னாலாயிருக்காது.

என் கண் மையை
உன் கையிலிடுகிறேன்
தேடிப்பார்
எனக்குள் நீயா
உனக்குள் நானா
என்று !

மேகம் விட்டிறங்கிய
பூவொன்று
நேற்று
காற்றின் வரவுக்காய்
திறந்தே கிடந்த
என் வீடு புகுந்து
மௌனம் உடைத்த
மொழி திரட்டி
என் பெயரை
உரசிப்போனதால்
இன்றுமுழுதும்
புதுகாற்றைச் சுவாசித்ததாய்
சொல்லிக்கொண்டேயிருக்கிறது
என் உள்ளுயிர் !

ஒரு பிரிவின்
சுவடென்றறியாமல்
அவன் பார்வை வரித்திழுக்க
மேலிருந்து கீழாக நகர்ந்தேன்
அழுத்தப்பரப்பில்
அவன் நீராய்
அவன் கண்ணில்
மிதக்கும் மீனாய் நான் !

'பிரிந்தாலும் புரிந்து வாழ்வதும் இதம்'

ஹேமா(சுவிஸ்)

Monday, July 30, 2012

கோழியும் கழுகும்...



வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.

ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
 
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!

அருக்கன் - சூரியன்.

அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.

இத்தினி - கடுகிலும் சிறிதளவு.

எம்பி - உந்தி எழும்புதல்.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 25, 2012

இலவச மன்னிப்பு...

ஒவ்வொருமுறையும்
கைபிசைந்து நிற்கிறேன்
செய்த தவறுகளுக்காய்
என்னை முறைத்து
பின் ரசித்து
ரட்சிக்கும் தேவனாய்
உதறி விடுகிறாய்
மன்னிப்புக்களை.

இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்துக்கொண்ட நான்
மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 2012...

காலக்கொடுமைகள்
நிரம்பி வழிய வழிய
எல்லாவற்றையும்
ஏந்திக்கொண்டிருக்கிறது
அகதித் தேசம்
கரையாப் பனிமலைக்குள்
போர்வையோடு புதைந்தவள்
திட்டித் தீர்க்கிறாள்
தன்னையும்
தன் மண்ணுக்கான போரையும்
அகதி தேசத்தையும்.

எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
சிங்களச் சிப்பாய் ஒருவன்
என்னைச் சிதைத்துத்
கழிவறைக்குள் தள்ளுகையில்
அங்கு.....
பெண்சதை தின்று
புணரத் தாவும்
இன்னொரு மிருகத்தோடு
போராடிக்கொண்டிருந்த
அதே அம்மா.

தொடையிலும் மாரிலும்
வேறு வேறு இடங்களிலும்
இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
சுட்டுச் சிதைத்த வடுக்கள்
இன்னும்....இன்றும்!!!

ஹேமா(சுவிஸ்)