*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, November 14, 2011

தப்பாகும் தப்புக்கள்...

முறைத்து...முழித்து
செல்லமாய் அடிக்கும்
குழந்தைக்கு திருப்பியடித்து
முரடனாக்கும் அம்மா.

மழலை மொழியில்
சொல்வதெல்லாம் இனிக்குமென்று
தப்பான சொற்களையும்
மழலையாக்கும் அப்பா.

செல்லமாய் தொடங்கி
மெல்லமாய் மெல்லமாய்
முரட்டு குணமும்
எதிர்க்கும் சக்தியும்
கொடுக்கும் உங்களையே
ஒரு நாள் வீழ்த்தும்
மழலை தாண்டிய
அதே குழந்தை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 08, 2011

நான்...இங்கு...ஏன் ?

யார் நீ...
ஏன் இங்கு...
எங்கிருந்து...
என்று தொடங்கி
தொக்கி நிற்கும்
கேள்விகளோடுதான் இன்றும் !

வருடங்கள் கடந்து
நான்காவது தலைமுறை
நடக்கையிலும்
பார்வைகள் பிறத்தியாகவே !

இருப்பிடம் கேட்டால்
தெருப்பெயர் சொல்வேன்
இல்லை...இல்லை
உன் இருப்பிடம் என்பார்கள்
“இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

நடுவில் ஒட்டிக்கொண்ட
நான்.....
நிலையானவர்களிடம்
சொல்லும் “இங்கு”
பிறழ்வாய் இருவருக்குமே !

அவர்களுக்கும் புரியவில்லை.
எனக்கும்...
தெரியவில்லை சொல்ல!!!

அடிக்கடி அடிபடுகிறேன்....ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 01, 2011

இருக்கை...

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறச் சங்குக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
பிணங்கள் புதைக்கும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, October 18, 2011

முகிழ்ப்பு...

red rose love romance 3 pictures, backgrounds and images
அவிழ்த்துவிட்ட கூந்தலுக்குள்
குறுந்தாடி புதைய
ஒற்றைக்குச்சியென
ஒடிந்து கிடந்த தேகத்துள்
பிரியங்களோடு அணைக்கிறது
ஒரு சேகுவேரா டீசேர்ட்.

சந்தன மணம் பரப்பிய
சாதுர்யங்களின் தகிப்பில்
கலந்த மையிருட்டோடு
மெய்தேடிக்களைத்து
முதுகுத் தண்டில்
பனியூற்றும் பயிற்சிக்கு
கணங்களின் நுனியில்
பிரார்த்தனைகள்.

சிகரெட்டின் வாசனைக்குள்
ஈரமுத்தம் சகித்த இதழோடு
குயவன் கையில் களிமண்ணாய்
தேகம் ஒத்துழைக்க
சலிப்பற்றுப்போகிறது முகிழ்ப்பு.

எதிர்த்தலில்லாமல் ஏற்றுக்கொண்டு
அடிமையென
மெல்ல மெல்லக்
கரைந்துகொண்டிருக்கிறது உயிர்!!!

ஹேமா(சுவிஸ்)
நன்றி உயிரோசை பங்குனி இதழ்.

Thursday, August 11, 2011

கூழாங்கல்...

ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப
உருண்டுகொண்டேயிருக்கிறேன்.
குதித்தும் தாவியும்
நொருங்கியும் கரைந்துமாய்
சிக்கிக்கொண்டாலும்
தடையறுத்த ஆறுதல்
எவருக்குமில்லை.

உருண்டுகொண்டேயிருப்பதால்
அறுபட்ட சில நிகழ்வுகள்
மாறி மாறி...
இருள் ஒளி கடக்கும் முகடுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள்.

ஓ.....
பாறையில் வேர் விட்ட
சிறுவிதை.
குட்டி மீன்கள்
பெரிய மீன்களாய்.
படர்ந்த பாசி
அடியில் ஊடுருவும் விஞ்ஞானம்.

என்றாலும் தட்டித் தடக்கி
உருண்டுகொண்டே....யிருக்கிறேன்
ஒற்றைக்கல்லாய்!!!

ஹேமா(சுவிஸ்)


விடுமுறை விடுமுறை கோடை...பெரிய விடுமுறை.சந்திப்போம் நண்பர்களே !

Tuesday, August 02, 2011

இருள் வழி...

எங்கோ...
போயிருக்கிறது அது
கண்ணைக் கட்டி
இருளுக்குள் விட்டுவிட்டு !

மலையும் ஆறும் கலக்கும்
மிருகங்கள் புணரும்
காடுபோலிருக்கிறது
கண்ணாமூச்சி விளையாடி
கை விட்டுப் போனது யார் இங்கே !

பிந்திய இரவின் முனகலும்
பயந்து ஒதுங்கும் மானை
மயக்க முயலும் துணையுமாய்
விரகத்தின் வேதனையை
நீட்சியாக்கிவிட்டபடி...

மூடித் திறக்கும் கதவுவழி
ஏதேதோ உருவகங்கள்
கற்பனைக் கழிவுகள்...

ஓடிக் களைத்த வீராங்கனையாய்
கண்ணாடி பார்த்து
களிப்படைந்து
உடை மாற்றி
மீண்டும் வந்து
போர்வைக்குள் நுழைகையில்
ஏதோ ஒன்று
குறுக வைக்கிறது என்னையே!!!

ஹேமா(சுவிஸ்)