காக்கையாய் மனம் கரைய
காத்திருக்கிறேன்
விருந்தாய் வந்துவிடு சீக்கிரம் நீ !
தினமும்...
பார்த்த உன் புகைப்படம்தான்.
இப்போதெல்லாம் பார்க்கையில்
வெட்கமாயிருக்கிறது !
எது எதுக்கோ
இருக்கும் வரம்புச் சட்டம்போல
மீசைக்கும் வரம்புச்சட்டம் போட்டிருந்தால்...
அந்த இடுக்கில்...பிடித்துக்கொள்வேன்
உன் ஆண்மையின் குரலை !
தூர இருந்தபடி
ஒளிப்பதும் வெளிவருவதுமாய்
கண்ணாமூச்சியா
இரு இரு...
வலையோடுதான்
காத்திருக்கிறேன் கனவுகளில்கூட
சிக்கும்போது பேசிக்கொள்கிறேன் !

ஒரு புழுவாய்...
தனிமைக் கூடு கட்டிக்கொண்டு
இறக்கை முளைத்தபின்னும்
முடங்கிக்கிடந்தவள் நான்.
வலை விரித்தவன் நீ.
இன்று நான் தங்கும் கூடாய் நீ.
நீ வீசிய வலையில்
சிக்கிக்கொண்டவனும் நீயேதான்!
அதிசயக் கடவுளோ நீ
பட்ட மரம்
தளிர்க்க வைத்துப் போகிறாயே
உதிர்க்க மட்டும் வைக்காதே !

கீறு விழுந்த
இசைத்தட்டாய் என் இதயம்
பைத்தியம்...
உன் பெயரையே பாடிக்கொண்டிருக்கிறது !
என் உயிர் நீ
என் உறவுகள் நீ
என் வாழ்க்கை நீ
என் அறிவு நீ
எல்லாம் எல்லாம் எல்லாமே
உலகில் எல்லாமே நீயானால்
உன்னில் அத்தனையும் நானாவேன்!!!
உறவுகள் எல்லோருக்கும் 2011 இனிதாய் மலரட்டும் !
ஹேமா(சுவிஸ்)