*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, March 17, 2009

முத்தம்...

எதிர் பார்த்துக்
காத்துக் கிடக்கிறேன்
உன் வரவுக்காக...
வீடு முழுதும் பரவும்
உன் வாசத்திற்காக...

மீண்டும்...
வழி அனுப்பும்போது
கிடைக்கும் உன்
சுவாசம் கலந்த
சூடான உன்
முத்தத்திற்காகவே !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, March 13, 2009

ஏணைக் கயிறு அறுக்கும் ஓநாய்கள்...

பறி போகிறது எனது ஊர்.
பதைக்கிறது என் உயிர்.
பக்கத்து வீட்டில்
புஞ்சி பண்டாவும்-பொன்சேகாவும்
காமினியும்-லாலும்.

என் தங்கமணி அக்காவும்
சின்னராசு அண்ணையும்
பாபுவும்-புனிதாவும் எங்கே?
சிதறிய தேசத்துள்
தொலைந்த முகங்கள்
எங்கே களவு போனது?

தேவதைகள் தவழ்ந்து திரிந்த
என் மண்ணில்
தீயால் எம்மைச் சுட்ட
கொள்ளிக் கட்டைகள்.
சிங்கள ஆக்கிரமிப்பின்
அவதாரங்கள்.
சகிக்கமுடியாத அசிங்கங்கள்.

முருகண்டிப்பிள்ளையார் கோவிலுக்குள்
புத்தர் இருந்தாராம்
நூறு வருடங்களின் முன்பே
அதுவும் மூலஸ்தானத்தில்.
கேட்பார் யாருமே இல்லை.
கதிர்காமக் கந்தனும் தொலைந்தான்.
உப்புமடப் பிள்ளையார்
கோவிலுக்குள்ளும்
புத்தன் இருப்பான் இனி.

தலைமுறை கண்ட
கோயில்களின் கதைகளையே
தலை கீழாய் மாற்றும் ஏதிலிகள்.
சூரியனைக்கூட
எரித்துப் புதைத்து
அதன் மேல் "பன்சல"கட்டும்
பன்னாடைகள்.

புத்தன் சொன்னதில்லை
சரித்திரங்களை வைத்து
சொக்கட்டான் விளையாடு என்று.
அவன் நிலத்திலும் இல்லை.

பயணங்களின்
இலக்குகள் இடைமுறித்து
எறிந்து யாரோ
என் சிதிலங்களை
இறுக்கி மிதித்து,
அத்தனயும் தனதாக்கும்
திட்டத்தோடு
என் ஊருக்குள் சிங்களம்.

என் ஊரோடான பிணைப்பு
எளிதில் அறுக்க முடியா
தொப்பிளின் கொடி.
என் வீட்டு முகட்டுக் கூரையில்
என் ஏணைக்கயிறு.
நான் வாழ்ந்த
அத்தனை பகல்களும் இரவுகளும்
சாட்சிகளாய்.

மிஞ்சியிருக்கும்
என் உயிர் கொண்டு வருவேன்
உன் உயிர் பறிக்க.
காத்திரு நீ...
கைக்கு எட்டிய தூரத்திலேதான்
என் வரவு !!!

"பன்சல"புத்தரின் கோவில்

"கோண்டாவில்"புகைப்படம் நன்றி கானா பிரபா

ஹேமா(சுவிஸ்)

Wednesday, March 11, 2009

அவளுக்கு ஈழவனின் பதில்...

எதற்காக இந்த இலக்கு...?
வீட்டு விளக்கை
எரிய வைக்க
கட்டு உடலைக்
காட்டலாமா சிட்டு!

பச்சைக்கிளியாம்
ம்ம்ம்,
பச்சையாக் காட்டுவதால்
பசுமையானாயோ!

வயிற்றுப்பசிக்கு
உண்டி தேட
உடலை விற்றுப்
வாழலாமா!

கூலி வேலை செய்தாலே
இன்பமாய்க் கூடியிருந்து
குடும்பமாய்க்
குடிக்கலாமே கூழ்!

நீயும் அழிந்து
உன்னை முகர்ந்தோரையும் அழித்து
நாகரீக வாழ்வுக்குப்
பணம் தேடும் பாவையே
எதற்காக இந்த இலக்கு!

உன்னைத் தொட்டானே
அவனும் கெட்டான்
அவஸ்த்தைப் பட்டான்
நோயை உண்டான்
வாழ்வை இழந்தான்!

அவளின் சில நிமிட சுகம்
அள்ளித் தந்த பரிசாய்
ஊரார் தூற்ற உறவினர் சிரிக்க
குடும்பத்தால் தனிமைப்பட்ட
எயிற்ஸைச் சுமந்த வாழ்வு!


"வானம் வெளித்த பின்னும்"வலைப்பதிவின்
'அவள்' கவிதைக்கு பதில்
எழுதியவர்: ஈழவன்-இலக்கியமேடு

என் இணைய நண்பர்களின் பதில்...?

Monday, March 09, 2009

அவள்...

உடல் தொட்டுப் போகின்றார்
மனம் அவர்க்கு இருப்பதில்லை.
மனம் வலிக்க
நொந்து அழுகின்றாள்.

சிவப்பு விளக்கு அவள்
சினந்தாலோ விரும்பி வரார்.
பணம்தான் அவள் இலக்கு
பாசம் அங்கு நிமிட நடிப்பு.

தன் வீட்டு விளக்கு எரிய
மெழுகாய்த்தான் எரிந்திடுவாள்.
யார் யாரோ தூற்றுகின்றார்
வேசியென்று பச்சையாய்.
பச்சைக்கிளி பாவம்
கொச்சையாய் அவள் வாழ்வு.

குமைகின்றாள் குழறுகிறாள்.
விரும்பியா ஏற்றுக்கொண்டாள்
வேசியென்ற பட்டத்தை.
அவளுக்கும் ஆசையுண்டு
ஒருத்தனோடு வாழவென்று.
இறைவன் படைப்பிலேயே
இதற்கென்றா படைத்திருப்பான்.

சறுக்கிச் சிதைந்ததால்
சதையையே விற்கிறாள்.
படிக்காமல் பட்டமும்
அவளுக்குப் பரத்தையென்று.
பரம்பரை வேசியா அவள்
பார்ப்போமா அவள் சரிதை.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
அவளைச் சதிசெய்து
சாய்த்திருக்கும் ஒரு வேளை
வாழ்வும் வழி மாறி இடறியிருக்கும்.
சிந்தித்தாள் சிலந்தி அவள்
தன்னைத் தானே கைது செய்தாள்.

வறுமை வேசியாக்கும்
வயதும் வேசியாக்கும்
நண்பனும் நாசம் செய்வான்
நாயகனும் நம்பிக் கெடுப்பான்
தனிமை கொடுமை செய்யும்
பேரம் பேசுவாள் காசுக்காய்
தாயும் தாசியாக்க.

அழகே காதலாய் மாறி
அதுவே துரோகம் செய்யும்.
சமூகம் சங்கதி பேசி
சுற்றம் குற்றம் சொல்லிச் சொல்லியே
சுமந்திருப்பாள் சாக்கடையை.

சாமி நான்தான் என்று
வீட்டில் ஒருத்தி காத்திருந்தும்
வேசி வீடு ரகசியமாய் ரசித்து வருவார்.
அருவருப்பாய்த் தூற்றினாலும்
திருடனாய் ருசித்து ரசிப்பார்.

எது எப்படியோ...
வாங்குவதும் விற்பதும்
அவள் விருப்பம்
அவள் உரிமை.
அடுத்தவன் பொருளையா
அவள் விற்றாள்.

உள்ளுக்குள் கள்வர்கள்
எல்லோரும் நல்லவர்கள்
சுகம் கொடுக்கும் பாவையோ
பார்வைக்குக் கெட்டவள்.

அசிங்கமாயில்லை...
பேசாதே...
பெண்ணின் கண் பார்த்துப்
பின் புறம் பேசாதே.
முடிந்தால் வாழ்வு கொடு
இல்லை பேச்சை விடு.

கண்ணில் கண்ணீரும்
மனதோடுதான் அவளும்.
ஆண்டாளின் கதைபோல
அவள் வலி உணர்.
நாற்றம் உனக்குள்
ஊர் துடைக்கிறாய் வாயால்.

திருந்து நீ...
சமூகம் திருந்தும் தானாய்.
சொல்லுங்கள்
நம்மில் யார் சுத்தம்
சாமியார்களா ???
சந்நியாசிகளா ???
பெரியார்களா ???
பெருங்குலத்தோரா ???

மண்ணைத் தொடுகிற வரை
விழுகின்ற மழைத்துளி தவிர !!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, March 07, 2009

என் நிலாவுக்கு நாலு வயசு...



குழந்தைநிலாவின் குட்டி நிலா!
வானம் வெளித்து வந்த கவிதை நிலா!
நான்கு வயதின் நாயகி நிலா!
பிறந்த நாளின் பிள்ளை நிலா!

பூக்களும் அழகோ உன்னைவிட!
நிலவும் உன்னைவிட ஒளி தருமா!
மயிலும் பதமிடுமோ உன் பாதம் போல்!
தேனும் சுவைக்குமோ உன்னைவிட!

என் வானம் வெளிக்க வந்த
நிலவடி நீ எனக்கு!
கவிதைகள் தந்த
கருவடி நீ எனக்கு!
தனிமை தொலைக்க வந்த
தோழியடி நீ எனக்கு!

நிலா,உனக்கொன்று தெரியுமா!
வானம் தேடுகிறது
தன் நிலவைக் காணவில்லையாம்!
நான் எடுத்து வந்ததை அறியாமல்
நட்சத்திரங்களும்
வான் அழுத மழையில் கரைகிறதாம்!




ஏன்...குட்டியம்மா
இன்றைய உன் புன்னகையை
உனக்குள் சேமிக்கிறாய்.
வாய் விட்டுத்தான்
கொஞ்சம் சிரியேன்.

அகரம் எழுத மறுத்தாயோ!
முத்தம் இல்லை...போடி
என்றாளோ அம்மா!
அதனால் என்ன இப்போ.
வானின் மை எடு.
மேகத்திரையில்
ஒரு பொம்மை கீறு.
ஒரு முழக்கம் போடு.
வீடே அதிருமடி.
இனி என்ன...உன் கைக்குள்
மந்திரமாய் ஒரு பொம்மை
உன்னோடு விளையாட!!!

ஓராயிரம் நட்சத்திரங்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வாழ்த்துப் படிக்க
புன்னகை சுமந்ததாய்
உன் பாதைகள்.

விழிகளில்
குறுநகைக் குமிழி!
தேன் தமிழின் பிறப்பிடம்
உன் மொழி!
பிளந்த மாதுளையடி
உன் கன்னம்!
என் வானின் நிலவடி நீ!
நிலவுக்கு வகிடெடுத்த
மின்னலடி நீ!



இந்த நாளின் புன்னகை மறவாதே.
இயல்பின் புரிதல்கள்
என்றும் உன்னுடன் வலம் வர,
மனிதம்...
உனக்குள் முழுமையாய் வாழ,
எதிர்காலக் கனவுகளை
ஞாபகப்படுத்திக்கொண்டே
பிரவாகமாய் ஒளிரட்டும்
உன்
நாளைய நாட்கள்.



அன்பை...
உனக்குத் தர வழிகள்
தேடியபடி
எட்டாத் தூரத்தில் நான்.
குழந்தை நிலாவுக்குள் கொஞ்சம்
தொட்டுச் செல்லும்
தென்றலின்
முதுகில் கொஞ்சமுமாய்!
பிரித்துப் பார் கண்ணே.

வாங்கிக்கொள்
என் அன்பை.
கள்ளமில்லா
வெள்ளைச் சிரிப்பும்
களங்கமில்லா
உன் பூ முகமும்
சாயங்கள் ஏந்தாமல்
இயல்போடு வாழட்டும் !!!

ஹேமா(சுவிஸ்)
மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிலாக்குட்டிக்கு!!!

Tuesday, March 03, 2009

ஒரு கூதல் மாலை...

குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.

உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.

நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.

பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.

புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.

உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.

ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.

குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.

பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!

ஹேமா(சுவிஸ்)