*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, September 21, 2014

தலையாட்டிகள்...

யுத்த பூமியில் இரத்த ஓய்வு
ஆனாலும்
அழுத்தும் அதிகார அரசியல்...

காவலில்லா பூமியில்
காலம் பிரசவித்த
தலையாட்டி பொம்மைகள்
தாளடி நிலம் தடவி
உறவுகள் தேடிக் களைத்து
தாவளக் கழிவில்
தான் விளையாடிய
உடைந்த பொம்மைத் துண்டோடு.

கனத்தளவும் முடியாமல்
கந்தக நெடிக்குள் வினாக்களும்
குண்டுகள் துளைத்த தூண்களுக்குள்
ஒளிந்த பதில்களுமாய்.

விதி வரைந்த கரிக்கோடுகள்
சுயமிழந்த வலியோடு
பொம்மைக் குடிலுக்குள் நிலமளைய
தம் வேலி தின்னும் ஆடென
சாக்குருவியாய்
அழவைக்கிறார்கள் எம்மை.

அப்போதும்
முழுமையான என் கோபத்தையோ
வெறுப்பையோ
அதிகாரத்தையோ
அலட்சியத்தையோ காட்டமுடியாமல்
மாறாத தலையாட்டலோடுதான்.

பொம்மைகளுடன் படுத்து
பொம்மைகளுடன் கட்டிப்போட்டு
பொம்மைகளுடனான வாழ்வு
பொம்மையாய்ப் பிடிக்கவில்லை.

கொடூரமாயிருக்கிறது
ஒவ்வொன்றிற்கும்
பொம்மையென தலையாட்ட
பிடிக்கவில்லையென
உணர்த்தவோ சொல்லவோ
முடியாதிருப்பதன் சாபம்.

இன்றளவும்
நான் தலையாட்டிக் கொண்டேதான்.

காட்சிகளை மாற்றிக்கொண்டு
அவர்களும்
அப்படியேதான் இன்றளவும்!!!

பனிப்பூக்கள் பத்திரிகையில் பிரசுரமானது
www.panippookkal.com
நன்றி தியா......
Rasaiya Kandeepan

குழந்தைநில ஹேமா !

1 comment:

மகேந்திரன் said...

ஒவ்வொரு வரிகளும் நெஞ்சத்துள் அமர்ந்து பிசைகிறது...
கனக்கிறது மனம்...

Post a Comment