*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, May 18, 2014

மே 18...


இப்படியொரு வானம்
பார்த்திருக்கிறீர்களா
என் பூமியின் வானம்
இப்படித்தான்.

என் இனத்தின் இரத்தம்
நம் காணிகள் தெருக்கள்
ஒழுங்கைகளெங்கும்
ஓடி உறைந்து
மிச்சத்தை உறிஞ்சியிழுத்த வானம்
அன்று.....
இப்படித்தான் சிவந்து கிடந்தது.

'யாழ் உங்களை வரவேற்கிறது'
சுடுகாட்டின் திசைகாட்டி
வடக்கையே காட்டி நின்றதப்போ.

ஒட்டுமொத்த உலகமே வஞ்சித்து
தமிழனைக் கஞ்சியாக்கி
நந்திக்கடலில்
கொதிக்க விட்ட நாளிது
மே 18.....

வருடம் ஐந்தாகியும்
அழியாமல் கண் நிறையும் நாளிது
பொய்யுரைத்து வன்மம் சூழ் வானரங்கள்
அழித்த ஈழம் செங்குருதியாக
இயற்கையே சொல் பிறழ்ந்து
எம் வாழ்வே குருதியிழந்து
இரக்கமற்ற இறைவனும்
சிறு குஞ்சுகள் குருமான்கள் என்ற பேதமற்று
அறுத்துக்கொண்டிருந்தான் உணர்விருக்க.

ஏதுமற்றவரானோம்
பனை தென்னைகளின் மூழறுத்த பிசாசுகள்
மிஞ்சிய காக்கா குருவிகளின்
கூடுகளைக்கூட விடவில்லை.

பசித்தோரை வயிறு நிரப்பிய பரம்பரை
தெருவோரம் நாறிக்கிடந்தும்
அனுமதியில்ல
எரிக்கவோ புதைக்கவோ அன்றெமக்கு
உம்மைத் தாண்டியல்லவா
கேடுகெட்ட இவ்வுயிர் காத்தோம்

குருதிக் குளமாய் நந்திக்கடல் மாற
தாகம் தீர்த்துக்கொண்டது தர்மப்போர்
புத்தனின் செங்காவி மூடிக்கொண்டது
என் நிலத்தை
மூச்சிழந்தது முள்ளிவாய்க்கால்
கண்களை மூடாமலே அணைந்து போனது
ஆயிரமாயிரம் தமிழ் உயிர்கள்
அவர்களின் கனவோடும் வாழ்வோடும்.

காட்டிக்கொடுத்தவனும்
கற்பழித்தழித்தவனும்கூட
கலங்கியிருக்கலாம் அக்கணம்.

அவிழும் திரைக்குள்
ஆயிரம் ஏக்கக் கண்களை
ஏந்திநிற்கிறது இப்பௌர்ணமி
கொடுப்பதற்காய் ஏதுமில்லை
இப்போதும் எம் கைகளில்.

நீங்கள் வருவீர்களென்றுமட்டும்
தெரியுமெனக்கு
அசையாத் தீபமொன்றை
ஏற்றுகிறேன்
உங்கள் முகம்காணவும்
திரைகள் அவிழவும்.

மன்னியுங்கள் கண்கண்ட தெய்வங்களே
நீங்கள் செப்பனிட்ட வழிகளில்
இன்னும் பூண்டும் புல்லும்
செதுக்கியெடுக்க இன்னும் கைகளில்லை
அத்தனை கைகளுமே எடுக்கப்பட்டு
பொம்மைக் கைகளாகிப் போனோமே.

காத்திருக்கிறோம்
சூரியக் கதிர்கள்கொண்ட
காத்திரமான கையொன்றிற்காக.

இன்று குற்ற உணர்வில்
கூனிக் குறுகுவதைவிட
வேறு வழியில்லை செம்மல்களே
எம்முயிரில் கலந்த காவல் தெய்வங்களே
மன்னிக்கவில்லையா சொல்லுங்கள்
இத்தீபம் கொண்டே
மூண்டு எரிந்துகொள்கிறேன்
உங்கள் முன் .

அதற்கும்
தலை குட்டி அணைத்துச் சிரிப்பீர்கள்
அறிவேன் நான்.

இழந்தோம்.....இழந்தோம்

எல்லாமே இழந்தோம்
இல்லையெமக்கு இனி நீங்கள்
சதி சதி......என்று தெரிந்தும் விதி நொந்து
உள்ளுக்குள் கொதிகொண்ட பொழுதுகளோடு
இன்றும்..இப்போதும்..எப்போதும்...!!!

உங்கள் நினைவுகளுடன்.......அகதித் தமிழச்சி ஹேமா சுவிஸ்லிருந்து !

3 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் வரிகள் மனதை கனக்கவைத்து விட்டது காலத்துக்கு அமைவாக கவிதை புனைந்த விதம நன்று வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

சதி சதி......என்று தெரிந்தும் விதி...............///சிரம் தாழ்த்திய வணக்கங்கள் உறவுகளே!

Post a Comment