*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, September 25, 2013

காதல் யானை...


சாயரட்சை மணியோசை
திசையசைக்க
சுணங்கும் வடவை
வரவறியா
தொண்டலம் தொங்க
சுனை சுற்றும்
கரி மறக்க
மறுக்கா ஞிமிறு
நறை தடவி
பறக்கவிட்ட
தூது எட்டுமுன்
சினத்த வாரணம்
காமுறா மனம் வேண்டி
கராகன் நோக்கிய தவமாய்
விழாலி திணற
கார்கோள் மண்வாரும்
மத்தம் கொண்டு!!!

சுனை - நீர்நிலை
வாரணம் - யானை
விழாலி - யானையின் துதிக்கை உமிழ் நீர்
தொண்டலம் - துதிக்கை
சாயரட்சை - மாலைப்பொழுது
ஞிமிறு - தேனீ
நறை - வாசனை
கார்கோள் - கடல்
கராகன் - படைப்பவன்
மத்தம் - பைத்தியம்

ஒரு தமிழ் ஆர்வம்தான்.திட்டாதேங்கோ.சரி பிழை சொல்லுங்கோ.இதை எழுதத் தூண்டிய நண்பருக்கு(Saminathan Ramakrishnan)நன்றி !

பெண் யானைக்காய் நீர்நிலையருகே நிலையற்றுத் தவிக்கும் ஆண்யானை.மாலைநேரக் கோவில் பூஜைக்காக சுணங்கி வராமலிருக்கும் பெண்யானை ஒரு தேனீயின் இறகில் தன் வாசனை தடவித் தூது விடுகிறது.தூது கிடைக்கமுன் கோபம் கொண்ட ஆண் யானை, காமமில்லா மனம் வேண்டிப் படைத்தவன் முன் நின்று தும்பிக்கை உமிழ்நீர் திணறத் திணற பைத்தியம்போல கடல் மண்ணைத் தனக்குத்தானே வாரிப்போட்டுக்கொள்கிறதாம்.காதல் கிறுக்கனோ இந்த யானை :) :) :)

ஹேமா(சுவிஸ்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொற்கள் விளக்கமும் அருமை...

மாதேவி said...

படமும் கவியும் அருமை.

'பரிவை' சே.குமார் said...

அருமை... சொற்கள் விளக்கம் அழகு...
மொத்தத்தில் கலக்கல் கவிதை...

விச்சு said...


நல்லவேளை விளக்கம் சொல்லலேனா ”ஞே”ன்னு முழிச்சிக்கிட்டு இருந்திருப்பேன். காமமில்லா காதல் யானை ரசிக்க வைத்தது.

manichudar blogspot.com said...

யானையின் காதல் கிறுக்கு, நறுக்கென உங்கள் கவிதையில் நற்றமிழாய் ......

Post a Comment