*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 26, 2013

அவனு(ஆணு)க்கும் வெட்கம்...காதல் சிலுவையில்
முத்த ஆணி அறைந்தால்....

அத்தனை
அவஸ்தையோடு நீ
என்றாலும்.....
புதுக்காதலன் கதை சொல்லி
பொறாமை நெருப்பு மூட்டி
சில முத்தங்களும்
சில வெட்கங்களும் பெற
நான் பட்ட பாடு.

இன்றும் என்னை
ஈரமாய் வைத்திருக்கிறது
உன் வெட்க முத்தம்.

சிட்டுக்கள்
கூடிப் பேசும் ரகசியமாய்
சில்லென்று நனைக்கிறது
நேற்றைய நினைவுகள்.

தொட்டாச் சிணுங்கியாய்
சுருங்குவதும் விரிவதுமாய்
மனதைக் கூசச் செய்து
கிள்ளிக் கடக்கிறது இப்போதும்.

நீ கேட்பது போக
நான் கேட்டும்
உன் முகம்
முத்தாய் வியர்த்ததும்
குரலில்
வெட்கக் கோடுகள் கீறியதும்
தரலாமா வேண்டாமா யோசித்ததும்
புதிய அனுபவமாய் உனக்கும்
ஏன்..........எனக்கும்தான்.

என் ஆதங்கம்தான் அதிகம் இதில்

நான் உன்னருகில்
இல்லாமல் போனதும்
உன் சிவந்த முகத்தைக்
காணாமல் தவித்ததும்
எப்படி நெளிந்து
உன்னைச்
சமன் செய்திருப்பாயென்பதும்
காற்றலையில் களவாய்
போனதப்போது.

பாதி நிலவுக்குள்
பக்க முகிலுக்குள்
உன் வெட்கம் மறைய
செவ்வானச் சூரியனாய்
உன் முகம்.

புதிதாய்
புத்தம் புதிதாய்
புதிதான முத்தப்பூக்களோடு
நீ.....தந்து விட்டுப்போன
முத்தத்து நினைவோடு
ஜோடி மயில்
முத்தம் பார்த்து
பிரமித்தபடி நான்!!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// காற்றலையில் களவாய்
போனதப்போது. ///

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

thiyaa said...

உங்கள் கவிதை அருமை, முத்தத்துக்குள் இத்தனை இருக்கா....

வெற்றிவேல் said...

பாதி நிலவுக்குள்
பக்க முகிலுக்குள்
உன் வெட்கம் மறைய
செவ்வானச் சூரியனாய்
உன் முகம்.

அழகு ஹேமா...
நிலவு, முகில், சூரியன்... அழகிய கற்பனை.

மகேந்திரன் said...

////பாதி நிலவுக்குள்
பக்க முகிலுக்குள்
உன் வெட்கம் மறைய///
என்ன ஒரு சொல்லாடல்!!!
உங்கள் சிந்தனையை
விரல்வழி கசிந்த வரிகள்
மேலும் அழகூட்டுகின்றன....

இராய செல்லப்பா said...

நேற்றைய நினைவுகள், தொட்டாச் சிணுங்கியாய், சுருங்குவதும் விரிவதுமாய்
மனதைக் கூசச் செய்து, “கிள்ளிக் கடக்கிறது” என்ற சொல்லாட்சி வரவேற்கத்தக்கது.

Seeni said...

engeyo manam ponathu..!


arumai..!

பால கணேஷ் said...

மயில்களின் முத்தம் பார்த்து நீங்கள் பிரமித்துப் போனதைப் போல உங்கள் கவிதையில் நான்! பிரமாதம் ஃப்ரெண்ட்!

ஸ்ரீராம். said...

ஆஹா.... வெட்க முத்தம்.. பொறாமையால் தூண்டப் பட்டு.....

"நேற்று நடந்ததெல்லாம் யார் சொல்லுவார் நிலவே.... நீ சொல்லாவிடில்....யார் சொல்லுவார் நிலவே..." :)))))

மறுபடியும் மறுபடியும் படித்து ரசிக்க மீண்டும் ஒரு கவிதை!

MANO நாஞ்சில் மனோ said...

நான் உன்னருகில்
இல்லாமல் போனதும்
உன் சிவந்த முகத்தைக்
காணாமல் தவித்ததும்
எப்படி நெளிந்து
உன்னைச்
சமன் செய்திருப்பாயென்பதும்
காற்றலையில் களவாய்
போனதப்போது.//

அசத்தல்.....!

sury siva said...

நித்தம் நித்தம்
முத்தங்கள்
எத்தனை எத்தனை !!

சத்தமில்லா முத்தங்கள்.
சங்கதி சொல்லும் முத்தங்கள்.
காணாதவனுக்கும் முத்தங்கள்.
கண்ணீருடனும் முத்தங்கள்.
காற்றிலும் கலந்த முத்தம்
கனவிலும் நிசமாய் முத்தம்.
முத்தமிடுவதே ஒரு
சித்து வேலை.

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்
கண்டவனை அல்ல,
உண்டவனை (ளை)
உனக்காக தன்னுயிரும் தருபவனை
உளமாற முத்தமிடுங்கள்.

மூவுலக இன்ப சுகம்
முழுமையாய்ப்பெறுங்கள்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.com.

கவியாழி said...

சத்தமில்லாத முத்தங்கள் மீண்டும் மீண்டும் கிடைக்க வாழ்த்துக்கள்

இளமதி said...

தொட்டாச் சிணுங்கியாய்
சுருங்குவதும் விரிவதுவதுமாய்
உங்கள் கவிகள் இன்று
எங்கள் மனங்களிலும்...

அழகிய மென்னையான கவிதை. ரசித்தேன். வாழ்த்துக்கள் ஹேமா!

சசிகலா said...

தொட்டாச் சிணுங்கியாய்
சுருங்குவதும் விரிவதுமாய்
மனதைக் கூசச் செய்து
கிள்ளிக் கடக்கிறது இப்போதும்...
அழகிய வரிகள் பட்டும் படாமல் சிலிர்க்க வைக்கிறது. ஹேமா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முத்தத்தை வைத்து இவ்வளவு அழகாக கவிதை படைக்க முடியமா? ஹேமாவால் மட்டுமே முடியும்.

Post a Comment