*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, July 21, 2010

அன்பைத் தேடி...

தேடித் தேடிக் களைத்து எங்கோ மூலைத் தெருவொன்றில்
ஊத்தை உடுப்போடு
பாறையொன்றில் பசிக்களையோடு
நிறையாத மனதோடு உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.

எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்
அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும்.

அன்பு....
அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்
வயதின் வரம்பு கடக்க
அன்பே ஏக்கமாகி
வாழ்வு விழுந்து படுத்தபின்பும்
அன்பின் துளிச் சிதறலுக்காய் ஏங்கும் ஒரு ஜீவனாய் நான்.
காலவெளியில் கதறியழும்
அன்புப் பசியால் தினம் வாடும் சின்னக்குழந்தையாய்
துன்பப்புண் என் மனதில்.

தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.

சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்
சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்
அன்பின் ஒளி எங்கும் காணேன்.
அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது.

அன்பு கண்டேன்
நிறைவாய் அன்பின் சாயல் கண்டேன்.
சின்னக் குழந்தைகள் சொன்ன மொழிகளில்
அன்பு வழியக் கண்டேன்.
சிறகடிக்கும் பறவைகள் நிழல்தரும் மரங்கள்
ஏன்..ஐந்தறிவு மிருகங்களில்கூட
மிகுந்திருக்கும் அன்பு
மானிடம் மட்டும் மறந்ததேனோ !

சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு.

எங்கும் கதவடைப்பு தட்டுப்பாடு கிடைப்பது அரிது.
கிடைக்கவே கிடைக்காது.
ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.

நினைத்திராத நிமிடத்துளிக்குள் நான் இறந்துவிடுவேன்.
என் சுவாசத்தின் இறுதி இழைத்துளியில் ஊசலாடிக்
களைத்து இளைக்கிறேன்.
என் உயிர் பிரிவதைக்கூட உணர்கிறேன்.
சுவாசம் கொஞ்சம் வேகமானாலோ
இரக்கத்தை விட்டுவிட்டாலோ என் உயிர் பறந்துவிடும்.

வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்
விட்டுப் போகும் நேரத்திலும்
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!


(வானொலிக் கவிதை.24.02.2003)
ஹேமா(சுவிஸ்)


72 comments:

Ahamed irshad said...

அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும். ///

சிறப்பான வரி..


அருமையான கவிதை ஹேமா..

Anonymous said...

ஒரு துளி உண்மை அன்பு தேடிதான் எல்லா உயிர்களும் இருக்கு. நல்ல கவிதை ஹேமா

கலா said...

ஒரு துளி அன்பிற்காய் ஓடிக்
களைக்கிறேன்.
அதுவும் உண்மை
அன்பிற்காய் மட்டுமே\\\\\\\

இந்தக் காலகட்டத்தில் மிக,மிக அரிது
கண்டு பிடிப்பது,வேஷமா?பாசமா?எனப்
பகுத்தறிய முடியாத மாதிரி நம்ப
வைக்கும் நடிப்பு . ஹேமா
சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு\\\\\\\\

இவ்வரிகளால் ...மனது கனக்கவே
செய்கிறது


ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!\\\\\\\\

உண்மையான,பரிசுத்தமான,ஆழமான
அன்பு வைக்கும் சில நல்லுள்ளங்கள்
இன்றும் உலகில் உண்டு ஹேமா,
ஆனால் ....கிடைப்பது கொஞ்சம் கஷ்ரம்,
கிடைத்துவிட்டால் அதிஷ்டம்

Ramesh said...

கவிதையில் நனைகிறேன்.
அன்பே கடவுள்
வாழ்க்கை

கொல்லான் said...

கவியரசி ஹேமா,
//ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.//

பட்டத்திற்கு தகுந்த மாதிரி தங்களின் சிந்தனை .
தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

கலா said...

அன்பு : கிடைத்து விட்டால் சொர்கம்

அன்பு :கிடைக்கவில்லையென்றால் ஏக்கம்

அன்பு : கிடைத்துப் பிரிந்தால்..நரகம்

அன்பென்ற..மந்திரத்தால் கட்டுண்டால்...

சொர்கமும் தெரிவதுண்டு
நரகமும் தெரிவதுண்டு...

ஆவியும் அடங்குவதுண்டு

மிக,மிகப் பொல்லாத “சொல்”

ஹேமா அன்பின் ஆழம் தேடும் கவிதை
ஆழ்மனதில்....
ஆள் மனதில் பதியட்டும்
நன்றிஹேமா

VELU.G said...

அன்பை அன்பால் வெளிப்படுத்தும் அற்புத படைப்பு ஹேமா

அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான கவிதை

Unknown said...

அன்பை அன்பால் வென்றுவிடுதல்!

Joelson said...

அருமையான கவிதை
சிறப்பான வரிகள்.
என்றும் அன்புடன்

ஜோதிஜி said...

வானொலியில் வாசிப்பதுண்டா ஹேமா?

Prasanna said...

நானும் தேடுகிறேன். கிடைக்கும் இடத்தில் அப்படியே சரண்..

எனக்கும் புரியும் படி கவிதை எழுதிய தானைத்தலைவி ஹேமா அக்கா வாழ்க :)

ரிஷபன் said...

ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.
அதே அன்பை கொடுத்துக் கொண்டிருப்போம்.. அட்லீஸ்ட் நம்மிடம் வருபவர்களுக்காவது அது கிடைக்கட்டுமே..

க.பாலாசி said...

அவதிகளற்ற அன்பிற்கு ஏங்காத மனங்களில்லை.. அன்பு வற்றின மானுடம் கொட்டிக்கிடக்கும் இடங்களில் அதை தேடித்திரிகுவது வீண்தானே..

நல்ல கவிதை ஹேமா...

ஸ்ரீராம். said...

வானொலியில் வாசித்தளித்திருந்தால் ஒலி வடிவமாகக் கொடுக்க முயற்சி பண்ணலாமே ஹேமா... நல்ல கவிதை. அன்பு கிடைக்குமா என்று அலைவதை விட அன்பை பரவலாக எல்லோருக்கும் கொடுத்துப் பார்ப்போம். பன்மடங்கு அதிகமாகத் திரும்பக் கிடைக்கும்!

கலா,

அன்பிற்கு ஏகப் பட்ட விளக்கங்கள். எதிர்பார்ப்பில்லாதது அன்பு.
அன்பில் உண்மை அன்பு போலி அன்பு என்று உண்டா என்ன?
ஒரே சொல் அன்பு. அவ்வளவே...!!

ராஜவம்சம் said...

ரொம்ப அன்புக்கு ஏங்கி எழுதியிறுக்கீங்க.

அன்பு பல இடங்களில் ஏமாற்றத்தில் தான் முடிகிறது.

உன்மையான அன்பைத்தேடினால் அதுவும் வீச என்ன விலை என்று கேட்கும் இயந்திர வாழ்க்கையாகிவிட்டது மனித வாழ்வு.

வருத்தத்துடன் ராஜவம்சம்.

Riyas said...

அன்பை தேடும் மனதின் அத்தனை வெளிப்பாடுகளும் உங்கள் கவிதையின் மூலம் காட்சியாகிறது
ஹேமா அக்கா..

//"அன்பை எடுப்பவன் ஆயுதத்தைவிட கூர்மையானவன்,ஆயுதத்தை எடுப்பவன் அன்பினால் கூர்மையாக்கப்படாதவன்//

இதுவும் என்னை ஈர்க்கவே செய்தது..

உங்களிடம்தான் வார்த்தை கடன் வாங்க வேண்டும் கவிதை எழுத கொடுப்பிங்களா..?

அன்புடன் நான் said...

தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.//

//சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு\\

மிக கனமான வலியை உணர முடிகிறது....

நிலையான நிறைவான அன்பும் உண்டுதான்.

கவிதை கனக்கிறது ஹேமா.

meenakshi said...

கவிதை வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது ஹேமா. அருமை! எல்லோருக்குமே வாழ்வில் ஒரு தூய்மையான, உண்மையான அன்பு உள்ளம் நிச்சயம் கிடைக்கும். அதிர்ஷ்டம் செய்தவர்களுக்கு அது தகுந்த காலத்திலேயே கிடைத்து விடும். மற்றவர்களுக்கு கால நேரம் தவறினாலும், நிச்சயம் கிடைக்கும். ரிஷபன் அவர்கள் சொன்னதை போல், நம்மிடம் வருபவர்களுக்கு நாம் உண்மையான அன்பை என்றுமே கொடுத்துக் கொண்டிருப்போம். கொடுப்பதில் கிடைக்கும் நிறைவு வாழ்வில் வேறு எதிலுமே இல்லை.
//எதிர்பார்ப்பு இல்லாததுதான் உண்மையனா அன்பு// மிகவும் சரிதான் ஸ்ரீராம். உண்மையான அன்பில் போலித்தனம் இருக்காது. அதுபோல், போலித்தனமானவர்கள் காட்டும் பரிவில் உண்மையான அன்பு இருக்காது. அது வெறும் போலி அன்புதான்.

நசரேயன் said...

//ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.
அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.//

எனக்கு 100 மில்லி போதும்

//
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!//

அன்பிற்கு பதில் கும்மி தான் கிடைக்கும்

கமலேஷ் said...

மிகவும் வலி நிறைந்ததாக இருக்கிறது சகோதரி.

செ.சரவணக்குமார் said...

//அன்பு....
அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்
வயதின் வரம்பு கடக்க
அன்பே ஏக்கமாகி
வாழ்வு விழுந்து படுத்தபின்பும்
அன்பின் துளிச் சிதறலுக்காய் ஏங்கும் ஒரு ஜீவனாய் நான்.
காலவெளியில் கதறியழும்
அன்புப் பசியால் தினம் வாடும் சின்னக்குழந்தையாய்
துன்பப்புண் என் மனதில்.//

என் மனதிலும்..

வலி நிறைந்த வரிகள் தோழி.

தமிழ் உதயம் said...

வரிக்கு வரி வேதனை கலந்த சுகத்தை வாசித்தேன்.

Ashok D said...

excuse me இந்த அன்பு.. பாசம்... எல்லாம் ‘கருவேல நிழல்’ன்னு ஒருத்தர் ப்ளாக்ல கவிதையெல்லாம் எழுதறாரு அவர்கிட்ட கேட்டீங்கின்னா... கிலோ கிலோவா..சாரி டண்கனக்கா கொடுப்பாரு... try பண்ணுங்களேன்...

எத்தனை ‘அன்பு’ வார்த்தைகள் உங்கள் கவிதையில்(?)... (கிட்டதட்ட 20 தடவை)..


புதிய caption நல்லாயிருக்கு.. ’அன்பு ஆயுதம்’ அத தாங்க சொல்லறன்... (அதோட சேர்த்தா 22 அன்பு)(இப்பவே கண்ணகட்டுதே)

ஏங்க நீங்க எத்தனவாட்டி எங்ககிட்ட அன்பா இருந்து எங்களுக்கு தெம்பு சொல்லியிருக்கீங்க... நீங்களே இப்படி நீட்டி முழக்கலாமா?

Anyway உண்மையான அன்பு Hammam தாங்க... :))

(தொடரும்)

விஜய் said...

பழசானாலும் பட்டையை கிளப்புது

அன்புகள் சகோ

விஜய்

Ashok D said...

அப்புறம் வர்றேங்க.. உங்க அன்பு தொல்லை தாங்கமுடியலங்க...

ஆனா நல்லாதான்யிருக்கு...
2003க்கு இது ஓக்கே :)

ஜெயா said...

எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்
அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு
முன்னால்
நானும்...என் நானும்.

கவிதையின் ஒவ்வொரு வரியிலும் உண்மை அன்புக்காக ஏங்கும் ஒரு ஜீவனின் ஏக்கத்தை உணர்கின்றேன்.
கண் கலங்க வைக்கும் வரிகள்...
அழகான படங்கள். வாழ்த்துக்கள் ஹேமா.........

Arasi Raj said...

கவிதை எழுதுறதுல உங்கள அடிச்சுக்க முடியாது

ஒவ்வொரு வரியையும் ரசிச்சேன்....

வினோ said...

முதல் முறையா உங்க கவிதைகளை படிக்கிறேன்... மிக்க நன்றி.. அருமையா இருக்கு..
/நானும்......என் நானும். / ரெண்டும் தனித்தனிய யோசிக்கும் பொது நிறைய இருக்கு...

/அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது. / - இது உண்மையா?

இன்றும் இன்னும் சில நேசக்கரங்கள் அன்பை கொட்டுகின்றன ஹேமா... உண்மையான அன்பை.

சீமான்கனி said...

//எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்
அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும்//

ரசித்தேன் ஹேமா வலியை வார்த்தைகளில் சொல்லி வாழ்கையின் வாட்டத்தை கவிதை அழகாய் வலம் வருது...வாழ்த்துகள்...

சிநேகிதன் அக்பர் said...

வேதனை சுமந்த கவிதை. காலங்கள் மாறும் காயங்கள் ஆறும் ஹேமா.

- இரவீ - said...

என்ன தான் கவிதை சோகமா, கவலையா, அருமையா இருந்தாலும் - கும்மி குறைவா இருக்கும் காரணத்தால் என் சிரமேற்று தொடர்கிறேன்,
அங்க இங்க ஒளிஞ்சு இருக்குறவங்க கூட களத்துல குதிக்கவும்.
(இங்க கும்மி அடிச்சதுக்கு, திட்டு வாங்கினது எனது நியாபகத்தில் இல்லாத காரணத்தால் - திரும்பவும் ஒரு சின்ன கும்மி)....

- இரவீ - said...

//தேடித் தேடிக் களைத்து எங்கோ மூலைத் தெருவொன்றில்//
உங்க அம்மா உங்களை தேடி, தேடி கடைசியில நீங்க கிடைத்த இடம்னு சொல்லுறீங்க ...

- இரவீ - said...

//ஊத்தை உடுப்போடு//
வருசத்துக்கு ஒரு முறை துவைச்சா ஏன் ஊத்தையா இருக்காது ??

- இரவீ - said...

//பாறையொன்றில் பசிக்களையோடு//
தினமும் திண்ணைல சும்மா உக்காந்துகிட்டு, பசிக்குது சொன்னா அம்மா அடிக்க தான் செய்வாங்க.

- இரவீ - said...

//நிறையாத மனதோடு உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.//
ஒரு குண்டான் சோத்தை - குழம்பு சட்டியில் கொட்டி அமுக்கிட்டு ... பேசுற பேச்ச பாரு.

- இரவீ - said...

//எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்//
ரொம்ப நக்கல்... ஆமா சொல்லிபுட்டேன்... இருக்கு ஆனா இல்லை மாதிரி இருக்கு.

- இரவீ - said...

//அன்பின் வேஷங்கள் முன்னால்
பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்
நானும்......என் நானும்.//
அன்பின் வேஷங்கள் முன்னால சாகச மனுஷன், அவனுக்கு முன்னால நீங்க... அப்டீனா
நீங்க தான் அந்த அன்பின் வேஷங்கள் ????

- இரவீ - said...

//அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்//
எவ்ளவு தாக்குச்சு ???

- இரவீ - said...

அது சரி... அன்பு... அன்பு... அன்புகறீன்களே யாரு அது ???
உங்க எதுத்த வீட்டு பையனா ???

- இரவீ - said...

//இன்னும் கிடைக்காத பாவியாய்.//
கிடைச்சா - அப்பாவின்னு சொல்லிக்குவீன்களா?
//சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்
சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்
அன்பின் ஒளி எங்கும் காணேன்.//
எத எங்க தேடுறதுன்னு விவரம் தெரியாது போல உங்களுக்கு ... பாவம்.

- இரவீ - said...

//ஐந்தறிவு மிருகங்களில்கூட மிகுந்திருக்கும் அன்பு
மானிடம் மட்டும் மறந்ததேனோ !//
மான் கூட ஐந்தறிவு மிருகம் தானே ???

- இரவீ - said...

//எங்கும் கதவடைப்பு தட்டுப்பாடு கிடைப்பது அரிது.
கிடைக்கவே கிடைக்காது.//
ஏன் - காந்தி ஜெயந்தி அன்னைக்கு, சரக்கு தேடுநீங்களா???

- இரவீ - said...

//நினைத்திராத நிமிடத்துளிக்குள் நான் இறந்துவிடுவேன்//
மத்தவங்க எல்லாம் மணிக்கணக்கா ரூம் போட்டா இறக்க போறாங்க ???

- இரவீ - said...

//வானொலிக் கவிதை//
நீங்க சொன்ன வானொலி எண்ணெய் சட்டி(கடாய்) தான ???

- இரவீ - said...

//.24.02.2003//

அப்பவே இப்டியா ??? யப்பா கண்ண கட்டுதே.

NILAMUKILAN said...

அன்பின் பொறி விரைவில் உங்களை தீண்ட வாழ்த்துக்கள். நல்ல கவிதை ஹேமா.

Jerry Eshananda said...

தேடல் தானே....இந்த கணங்களை நீட்டிக்கிறது.

Unknown said...

இன்றைய தேதிக்கு எதிர்பார்ப்பற்ற அன்பு சாத்தியமற்றே தெரிகிறது.. ஆனாலும் நிரம்பி வழியும் அன்புடன் நம் தோள் சாயும் அற்புதங்களும் இருக்கவே செய்கிறது..

Madumitha said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

Karthick Chidambaram said...

//சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு.//

ரொம்பவும் உண்மை ஹேமா. உங்கள் கவிதை அருமை.

கலா said...

அன்பிற்கு ஏகப் பட்ட விளக்கங்கள். \\\\
ஆம் நண்பரே!
அன்பு: சொல்லொன்றுதான் மனிதர்கள் அதைக்
கையாளும் விதம் வேறுபடுகிறது {நடமுறைப்
படுத்துவது}
அப்போது அங்கு அன்பு உண்மையன்பாய்
இல்லாமல் மாறிவிடுகிறது
{சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டு
பக்கம் வரும் பாசாங்கு காட்டும்
மாய அன்பில் கட்டுப்பட்டு
காயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு}
இவ் வரிகளில் அன்பு எவ்வளவு துன்பப்பட்டிருப்பதை
பாருங்கள். உண்மை அன்பு இருந்திருந்தால்...
இவ்வரிகள் வர வாய்ப்பில்லை


2

pinkyrose said...

//உங்களிடம்தான் வார்த்தை கடன் வாங்க வேண்டும் கவிதை எழுத கொடுப்பிங்களா.?//

உண்மை ரியாஸ்!
ஹேமாக்கா கிடைக்குமா?

நானும் எண்ணங்களை எழுத்துக்களாக்க முயன்றால் வார்த்தைகள் கண்ணமூச்சி ஆடுகின்றனவே!

pinkyrose said...

//உங்களிடம்தான் வார்த்தை கடன் வாங்க வேண்டும் கவிதை எழுத கொடுப்பிங்களா.?//

உண்மை ரியாஸ்!
ஹேமாக்கா கிடைக்குமா?

நானும் எண்ணங்களை எழுத்துக்களாக்க முயன்றால் வார்த்தைகள் கண்ணமூச்சி ஆடுகின்றனவே!

கலா said...

எதிர்பார்ப்பில்லாதது அன்பு.\\\\
ஆம் இதை நான் ஒத்துக் கொள்கிறேன்
இந்தக் காலத்தில் இப்படிச் சிலர்தான் அந்த
உண்மையன்பை வெளிபடுத்துகிறார்கள்
சிலர் அன்பு போலிதான்!!

|\\\அன்பில் உண்மை அன்பு
போலி அன்பு என்று உண்டா என்ன?
ஒரே சொல் அன்பு. அவ்வளவே...!!\\\\
ஒரு காதலனும்,காதலியும் மிகவும்
{நீங்கள் சொன்ன}உண்மையானஅன்புடன்
காதலித்து ஏதோ ஒரு காரணத்தால்...
அந்தக் காதலன் திடீரென்று உன்னைப்
பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிடுகிறான்
அப்போது அந்த அன்பு உண்மையா?போலியா?
உண்மையன்பு வைத்திருந்தால் அதை,அவர்களை
யாராலும்
பிரிக்க முடியாதல்லவா!
அப்போது அந்த அன்பு அங்கு பல பெயர்களுடன்....
{போலி,நடிப்பு.ஏமாற்று,ஒருவிளையாட்டு,
பொழுதுபோக்கு என அந்த அன்பை மோசம்
செய்துவிட்டாரல்லவா?

இந்த அன்பை எந்த வகையில் சேர்கலாம்??
நண்பரே!அன்பு அன்புதான் அது புனிதம்
அதைச் சிலபேர் தங்கள் சுயநலத்துக்காக
தப்பான முறையில் நடத்துவதைத்தான்
நான் பல விளக்கங்களுடன் சொல்லிருந்தேன்

Thenammai Lakshmanan said...

வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்
விட்டுப் போகும் நேரத்திலும்
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!//

மூன்றாம் முறையாக இன்று அழுது கொண்டு இருக்கி்றேன் ஹேமா.. கமலேஷ்., சிவாஜி சங்கர்.. இங்கு நீங்கள்.. ம்ம்ம் ஒண்ணும் சொல்ல முடியல..

Chitra said...

தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.

...... ம்ம்ம்.... எத்தனை உணர்வுகள் நிறைந்த வரிகள்..... !

தூயவனின் அடிமை said...

தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....
அதன் பின் அன்பின் அருகாமை
இன்னும் கிடைக்காத பாவியாய்.


பெற்றோர்களின் பாசத்திற்கு ஏங்கும் மனதிற்கு வார்த்தையால் ஆறுதல் கூறினாலும் ஈடு ஆகாது.

sakthi said...

சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்
சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்
அன்பின் ஒளி எங்கும் காணேன்.
அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது.

arumayana varigal hema!!!

Anonymous said...

ovoru varigalum ovoruvarukaga padaika pattadhu pondra oru unarvu....mugam ariyatha unnai katti anaithu vazhthu solla asai padugiren ikkavithaikaga...kangalum kalangiyadhu ithil ulla pala yekkam enakullum iruppathal......paratta theriyalai hema intha padaipukku athanai unmaiyum ithu alli kondu erupathal itharku parattu pothadhu...

தமிழ் அமுதன் said...

மிக மிக அருமை..!

நினைவில் நிற்கும் வரிகள் இவை

நானும் ...என் நானும்..!

இரக்கத்தை விட்டுவிட்டாலோ என் உயிர் பறந்துவிடும்...!

சமீபத்தில் நான் படித்ததில் சிறந்தது இது..!

தமிழ் அமுதன் said...

உங்கள் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று..!

முனியாண்டி பெ. said...

//ஐந்தறிவு மிருகங்களில்கூட மிகுந்திருக்கும் அன்பு
மானிடம் மட்டும் மறந்ததேனோ ! //

மிகவும் யோசிக்க வைத்த வரிகள்.

இந்திரா said...

அருமை தோழி,
உணர்வு பூர்வமான படைப்பு, தொடருங்கள்.
இந்திரா.
(தீவு.கோம்) .

சௌந்தர் said...

ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!

அனைத்து வரிகளும் சிறப்பு. அன்பான வரிகள்

ஹேமா said...

அன்பு தந்த அத்தனை உறவுகளுக்கும் என் அன்பின் நன்றி.யாராச்சும் கவிதை நீட்டாயிருக்குன்னு திட்டுவிங்களோன்னு பாத்தேன்.ஆக அஷோக் மாத்திரம் அன்பை எண்ணி எண்ணிப் போட்டிருந்தார்.7 வருஷத்துக்கு முந்தி ரேடியோவுக்கு எழுதின கவிதை.இப்போ எவ்ளோ திருத்தமா எழுதப் பழகியிருக்கேன்.இப்பகூடச் சுருக்கி எழுதித்தான் பதிவிட நினைச்சேன்.
அப்புறம் கவிதை வரிகள் நல்லாயிருக்கிறமாதிரியும் ஏதோ பழைய நினைவோட இருக்கிற மாதிரியும் இருக்கு.அதனால சுருக்கல.


ஜோதிஜி...இலண்டன் வானொலிக்கு ஆரம்ப காலங்களில் எழுதியிருக்கிறேன்.அப்போ Fax ல் அனுப்புகிறபடியால் அந்தப் பதிவுகள் இப்போதும் என்னிடம் இருக்கிறது.
எல்லாம் பெரிய பெரிய பதிவுகளாய் இருக்கிறது.இப்போது அவைகளைப் புரட்டிப் பார்க்கிறேன்.
அதிகமானவைகள் காதல் கவிதைகள்தான்.இடைக்கிடை பதிவில் தருகிறேன்.ஆனால் நான் என் குரலில் வாசித்ததில்லை !இங்கும் வானொலிகளில் நீ,நான் என்கிற ஒற்றுமையில்லாத அதோடு அரசியல் பிரச்சனைகளும்.அதானால் இப்போ வானொலிக்கு அனுப்புவதில்லை.லங்காஸ்ரீ இணையத்தளத்தில் மாத்திரம் இணைத்திருக்கிறார்கள் குழந்தைநிலாவை.


ஸ்ரீராம்...கேட்டிருக்கீங்க ஒலி வடிவில் தரவென்று.அப்போ இப்படி ஒரு புளொக்கர் செய்வேன் என்று நினைத்திருக்கவில்லை.இருந்தாலும் கசெற்றில் இருக்கிறது.என்றாலும் தெளிவு பற்றியும் எப்படி அதை புளொக்கரின் இணப்பது பற்றியும் எனக்குத் தெரியவில்லை ஸ்ரீராம் !


ரவி....
வானலி இல்ல இது வானொலி !


ஓ...பிரசன்னாவுக்கு இந்தக் கவிதை முழுசாப் புரிஞ்சிருக்கு.
சந்தோஷம்.ஏதோ பட்டமெல்லாம் தந்திருகார்.நன்றி பிரசன்னா.


நிலாவுவும் அம்மாவும்.....எப்பிடி இருக்கீங்க.எவ்ளோ நாளாச்சு.சுகம்தானே !


புதிதாய் இணைந்துகொண்ட விநோ வுக்கும் நன்றி.

சத்ரியன் said...

//அன்பு கண்டேன்
நிறைவாய் அன்பின் சாயல் கண்டேன்.//

ம்..!

ஆ.ஞானசேகரன் said...

//வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்
விட்டுப் போகும் நேரத்திலும்
ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.
கிடைக்குமா ?!!!//

அழகான வரிகளால் அன்பை தேடியுள்ளீர்கள் ஹேமா....


அன்புடன்
ஆ.ஞானசேகரன்

ஆதவா said...

ஒரு துளி உண்மை அன்பை
அன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.

அதை நீங்களே சொல்லிவிட்டீர்களே...

சின்னக் குழந்தைகள் சொன்ன மொழிகளில்
அன்பு வழியக் கண்டேன்.
சிறகடிக்கும் பறவைகள் நிழல்தரும் மரங்கள்
ஏன்..ஐந்தறிவு மிருகங்களில்கூட மிகுந்திருக்கும் அன்பு

கவிதை சற்று பெரிதாக இருந்தாலும் கவிதைக் கரு அன்பைத் தேடுவதாக இருக்கிறது.. தேடுதல் என்பது சின்ன வட்டத்திற்குள்ளேயேவா முடிந்துவிடுகிறது? அதற்கு எல்லைகள் கிடையாதே.

கவிதை நாயகருக்கு சீக்கிரமே அன்பு கிடைக்கட்டும்.

வாழ்த்துக்கள் சகோதரி............

-----------------------------
எப்படி இருக்கீங்க? நலமென நம்புகிறேன்..

Anonymous said...

எனது நண்பர் ரவிசங்கர் ஒரு வேலை விசயமாக சென்னை வந்து இருந்தார் அவர் வேலை முடிந்த பின்னர் ரயிலில் அவரை ஊர் அனுப்ப பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் வழுக்கட்டயாமாக என்னை இறங்கச் சொன்னார். நாங்கள் இறங்கி தி. நகர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு மனநோயாளி ஒருவர் அருகில் சென்றார் அவரை மிக அருகாமையில் பார்த்து விட்டு கொஞ்சம் அவருக்கு உணவும் வாட்டர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்தார்.


என்ன நண்பா உங்களுக்கு ரயிலுக்கு நேரமாச்சே என்றேன். திரும்பிப் பார்த்த அவரின் கண்கள் கலங்கி இருந்தது. என்ன விசயம் என்று விசாரித்தேன். என் கூட பிறந்த அண்ணன் பத்து வயதாகும் போது காணாமல் போய் விட்டான். அவன் உயிரோடு இருக்கின்றான இல்லையா என்பது இதுவரை தெரிய வில்லை. பேப்பரில் டீ.வீயில் எல்லாம் விளம்பரம் கொடுத்து தேடினோம் கிடைக்க வில்லை. அதனால் தின தினமும் அவனை என் வாழ்நாளில் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தேடிவருதாக குறினார்.


எங்கள் குடும்பத்தில் எந்த விஷேசம் நடந்தாலும் அதை நாங்கள் முழுமையாக அனுபவிக்க முடிய வில்லை. அவனின் பிரிவே எங்களை வாட்டுகிறது என்றார். கூட பிறந்தவனின் பிரிவே தனது வாழ்நாளின் சோகமாக தொடர்கிறது என்றால் அந்தப் பாசப் பிரிவை வார்தையில் வடிக்க முடியாது என்பது உண்மைதான்.


Anonymous said...

எனது நண்பர் ரவிசங்கர் ஒரு வேலை விசயமாக சென்னை வந்து இருந்தார் அவர் வேலை முடிந்த பின்னர் ரயிலில் அவரை ஊர் அனுப்ப பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு நிறுத்தத்தில் வழுக்கட்டயாமாக என்னை இறங்கச் சொன்னார். நாங்கள் இறங்கி தி. நகர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு மனநோயாளி ஒருவர் அருகில் சென்றார் அவரை மிக அருகாமையில் பார்த்து விட்டு கொஞ்சம் அவருக்கு உணவும் வாட்டர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்தார்.


என்ன நண்பா உங்களுக்கு ரயிலுக்கு நேரமாச்சே என்றேன். திரும்பிப் பார்த்த அவரின் கண்கள் கலங்கி இருந்தது. என்ன விசயம் என்று விசாரித்தேன். என் கூட பிறந்த அண்ணன் பத்து வயதாகும் போது காணாமல் போய் விட்டான். அவன் உயிரோடு இருக்கின்றான இல்லையா என்பது இதுவரை தெரிய வில்லை. பேப்பரில் டீ.வீயில் எல்லாம் விளம்பரம் கொடுத்து தேடினோம் கிடைக்க வில்லை. அதனால் தின தினமும் அவனை என் வாழ்நாளில் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தேடிவருதாக குறினார்.


எங்கள் குடும்பத்தில் எந்த விஷேசம் நடந்தாலும் அதை நாங்கள் முழுமையாக அனுபவிக்க முடிய வில்லை. அவனின் பிரிவே எங்களை வாட்டுகிறது என்றார். கூட பிறந்தவனின் பிரிவே தனது வாழ்நாளின் சோகமாக தொடர்கிறது என்றால் அந்தப் பாசப் பிரிவை வார்தையில் வடிக்க முடியாது என்பது உண்மைதான்.


Anonymous said...
This comment has been removed by the author.

Post a Comment