
எறும்பு ஒன்று.
என் அறை...
மௌனம் நிரம்பிய
என் இதயம் போல.
எழுதிய குறைகளாய்
கவிதைகள் பரப்பிய மேசை.
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
பேசிய வார்த்தைகள்
ஒரு மூலையில்
கசங்கிய காகிதங்களாய்.
தெருவில் அடம் பிடித்து
அழும் குழந்தையின் குரல்
நிசப்தம் கலைத்து
என் பல்கனி பாய்ந்து.
சிரிக்க வலுவற்ற மனம்
ஒற்றைக்காலில்
தவம் கிடக்க முயல்கிறது
உன்னைக் காண.
முருங்கை மரம் ஏறி
முகம் கவிழ்க்கிறது வேதாளம்.
சேமித்த ஞாபக மிட்டாய்களின் இனிப்பை
நாவு மீண்டும்
இரை மீட்டிச் சுவைத்தபடி
தூவானமாய்
மனம் சிணுங்கிக் கொண்டாலும்
எப்போது மீண்டும்
முந்தைய சாயல் எதுவுமே இல்லாமல்
பேசிக்கொள்ளலாம்.
என் வீட்டு பல்கனிப் பூக்கள் மட்டுமே
என் தவிப்பைச் சொல்ல
தலை அசைத்து முயற்சிக்கும்.
தெரியுமா உனக்கு
அந்த மேக நிறக்கொடி
முதற் பூ பூத்துவிட்டது.
என்றாலும்
வரமாட்டாய் நீ!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||