*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, July 11, 2008

உள் காயங்கள்...

குட்டிக் குட்டி ஆசைகள்
கூரைச் சேலைக்குள்.
விம்பும் விசும்பலைக் கூட
விரட்டி மறைத்தபடி
மணவறை நோக்கி மரத்த மனதோடு
பயணம் மிக அலங்காரமாய்.

மனவறைக்குள்
திருகிய ஆசைகள் திணறியபடி
வருடங்கள் இருபத்தைந்து
பார்த்துப் பார்த்துக் கட்டிய
அழகான மணல் வீடு
அலை அடித்துக்
கலைத்துப் போக
கையாலாகதவளாய்.

மனதோடு பேசிக் கொள்ளும்
பெற்றோருக்கு அடங்கிய மகளை
பேசா மடந்தையை
திருமண பந்தம் திசை திருப்பும்.
குடும்ப கெளரவம் பேசும் அம்மா
பரம்பரை புகழ் பேசும் அப்பா
பேசவே விடாத உறவுகள்.

ஓமப்புகையும் மந்திரங்களும்
மன ஓலத்தை மறைக்க
தங்க வேலிக்குள் கைதியாய்
தாழிட்ட கதவுக்குள்
பால் செம்போடு
தலை குனிந்தபடி
குற்றம் செய்தவளாய்
அவள் மட்டும்
முதலிரவுப் பள்ளிக்குள்.

குட்டிக் குட்டிக் கனவையெல்லாம்
தொலைத்துவிட கலைத்துவிட
பரணுக்குள் தூக்கிப் போட்டுவிட
தகுதிகள் திறமைகள் ஆசைகள்
அலட்டல்கள் அலசல்கள் அத்தனையும்
கண் முன்னாலேயே
தகர்த்து எறியப்படும் நாள் இதுவாய்.

விருப்பம் தெரிவிக்க முன்னமே
கழற்றித் தூர எறியப்படும்
அவள் ஆடைபோல
பெயரின் முன் எழுத்தைக் கூட
கேட்காமலேயே
மாற்றிவிடும் சடங்கு.

குனிந்த தலைக்குள்
கலங்கிய கண்களைக்
கவனிப்பார் யார்?
என்றாலும் பயணம் தொடங்கும்
மணமாலையும் மஞ்சள் கயிறும்
கழுத்தை நெரிக்கும்
இன்னொரு உறவின்
புதிய தொங்கு பாலமாய் !!!

ஹேமா(சுவிஸ்)

4 comments:

தமிழன் said...

நீங்கள் அரசியல் தலைப்பை தொட்டு வெகு நாட்கள் ஆகின்றன.எதிர்பார்கிறேன் உங்கள் அரசியல் விளாசல்களை.நன்றி

Anonymous said...

11 Jul 08, 18:06
mika arputhamana kavithai..manasu kanathu kidakku.anandan.

ஹேமா said...

என்ன திலீபன்."முடிவில்லாப் பயணம்"இப்போதானே எழுதினேன்.எங்கள் அரசியல்....
என் தேசத்திற்காகவும்
என் மக்களுக்காகவும் மட்டுமே மனம் இரங்கிக் கிடக்கிறது.யாரைக் குறை சொல்ல என்று தெரியவில்லை.
நாட்டில் அட்டூழியங்கள் தலை விரித்தாடிக்கொண்டிருக்கிறதே.


ஆனந்தன் நன்றி வந்ததற்கும் ரசித்ததற்கும்.சந்தோஷமாய் இருக்கிறது.

ஜுனைத் ஹஸனி said...

arumayana janaranjaga kavidhai. waalthukkal hema.

Post a Comment