துயரம் துயரம்.....
சொல்லொனாத் துயரம்.
மனதைப்
பிடுங்கியெடுத்து
எறியும் துயரம்...
ஐரோப்பியப் பிரதேசத்தில்
ஓ...வென்று குழறியழ
முடியாத் துயரம்.
இங்கு வாழும்
நாய்களின்
நின்மதி கூட
நம் தமிழனுக்குக்
கிடைக்காத துயரம்.
நித்தம்... நித்தம்
தமிழனின்
உயிர் விலை
சரிந்து கொண்டே
போகிற துயரம்.
என்றுதான்
இரத்தஆறு
இல்லையென்றாகி
சத்தம் சந்தடி ஓய்ந்து
சொந்தங்களோடு
சேரமாட்டோமா
என்கிற துயரம்.
கொல்லுதலும்
செத்தலும்
இல்லாமல்
கஞ்சியோ கூழோ
சஞ்சலமில்லாமல்
சாதி சனத்தோடு
சேர்வோம் என்கிற
ஏக்கத் துயரம்.
வாழ்கின்ற வயதில்
பிஞ்சுகளும் பூக்களுமாய்
பறையடிக்கப் பாடையிலே
போகிறாரெனப்
புழுங்கும் துயரம்.
நான்கு பிள்ளைகள்
பெற்றெடுத்தும்
அநாதையாய்
வயோதிப காலத்தில்
நாதியற்ற பெற்றவர்கள்
அவதியுறும் துயரம்.
எத்தனை அவலம் சந்தித்தும்
எல்லாமே
பலனற்றுப் போகும் துயரம்.
முயற்சிகள் அனைத்தும்
துன்பமாய் துயரமாய்
திரும்பத் திரும்பத்
தமிழன் தலையில்
இடிதான் என்கிற
துயரம்!!!!!!!!!
02.11.2007(சுப.தமிழ்செல்வன் இறந்த தினம்)
Tweet | ||||
1 comment:
தமிழனின் அவலம். துயரத்தினை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
Post a Comment