*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, February 27, 2009

நித்திரை மேகங்கள்...

நாள் முழுதும்
உழைத்துக் களைத்து
குடிசை திரும்பும் ஏழையாய்
பகல் ஒளிந்து கொள்ள,
இருள் மெல்ல மெல்ல
தன் கடமைக்காய்.

தலையணையின் பஞ்சுக்குள்
ஓய்வெடுத்த
உன் உணர்வுகள்
உறக்கம் கலைத்து,
விழித்துக் கொள்ள வைக்கிறது
உன் ஞாபகங்களை.

ஓர் ஏழைத்தாயின் கண்களில்
காத்திருக்கும் ஏக்க இருளாய்
உருளும் உலகை
இருள் ஆக்கிரமிக்க,
என் விழியும் மனமும் மட்டும்
தேடுதல் வேட்கையோடு.

தவறு செய்த குழந்தை
தந்தை தரும் தண்டனைக்காய்
காத்திருக்கும் எதிர்பார்ப்போடு,
பசியோடு இரை தேடும்
பறவையின் கவனத்தோடு
வெறித்த என் பார்வை.

உனக்கென்ன
குளிர் காலம் வர
வெப்பம் தேடி ஓடும்
பறவையாய்
உன் பாட்டில்
நீ...
வருகிறாய் போகிறாய்.

நான் இங்கு
ஒவ்வொரு விநாடியும்
உன் நினைவு மதில்களில்
முட்டி மோதி
காயப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன்.

என் தேசத்து
அமைதிப் பேச்சு வார்த்தையாய்
நீ....ண்டு
இன்னும் நீ....ண்டு
தூரமாகிப் போகிறவனே,
விழியோடு
மனதையும் சேர்த்தே
திறந்து வைத்துக்
காத்திருப்பேன்.

என்றோ ஒரு நாள்
நீ....
விழியோடும் மனதோடும்
நிஜமாய் நிறைந்து கொள்வாய்
என்கிற நம்பிக்கையோடு
ஸ்தம்பித்தபடி நான்.

ஓய்வெடுத்துக் கொள்
நீ....
நித்திரை மேகங்களாய் !!!
*************************************************
மேகங்கள் தூங்கினால்....
இயற்கை-இயக்கங்கள் ஸ்தம்பிக்கும்.
இங்கு ஒரு பெண்ணின் மனம்
ஆசைகளோடு ஸ்தம்பித்து நிற்பதாய்!

எதையோ எழுதிவிட்டு
தலைப்பைக் கொடுக்கலாம்.
சுலபம்.
தலைப்புக்குக் கவிதை !!!
கொஞ்சம் குழப்பம்தான்.
மாதவ் க்கு ஏனோ ஒரு விபரீத ஆசை.
(ஆசைக்கு அளவே இல்லையாம்!)
மாதவ் தந்த
"நித்திரை மேகங்கள்"
தூங்காமல் குழந்தைநிலாவில்.

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 24, 2009

இசைச் சகாப்தம் ரஹ்மான்...

நாடி நரம்புகள் இசையின் வசமாய்,
பெருவெளிச் சில்வண்டுகள் நடுவே
இசை சுமந்தது உன் உலகம்.
இரவும்...பகலும்
சரிகமபதநி சொல்லியபடி
இசைக்காடுகள் நடுவே
உன் தேசம்.
உன் கிளைகள் முழுதும்
கலையின் குயில்கள்.

மூலையில் கிடக்கும் சிரட்டைகூட
உன் விரல்படச் சேவகம் செய்யும்
இயல்பின் பெருமிதம் இல்லா
உன் விழிகளுக்குள்
இசை அரசியின் இருப்பு.
அவ்வளவு அழகாய்
பூங்குடில் போட்டிருக்கிறாள்.

நிகழ்கால விருதுகளின்
நடுவில் நின்றுகொண்டு
எதிர்காலத்தை
இறைவன் கையில் கொடுத்துவிட்டு
இன்னும்
ஏகப்பட்ட பட்டங்களுக்காய்
உனது காத்திருப்புக்கள்.

என்றாலும்
இறுமாப்பில்லா
புன்னகைத் தென்றலாய்
அகமும் புறமும்
எட்டிய திசை முட்டும்
இசை...இசை...இசை.

உன்னைப் பெற்ற நாடு
பெற்ற தாய்
காதலின் அன்புத்துணை
உன் உயிர்க்குழந்தைகள்
தவம் செய்த
இசைப்பூ நீ அவர்களுக்கு.

உலகத்தின் திசையெங்கும் ரஹ்மான்.
புயலாய் மழையாய் காற்றாய் காதலாய் நீ!

அடித்த பெருமழையில்
வீடு திரும்பா குழந்தையை
எதிர்பார்க்கும்
ஒரு தாயின் தவிப்பாய்
உன் இசை.

தேசத்திற்காய் வந்தே மாதரம்
அமைதிக்காய் வெள்ளைப்பூக்கள்
உணர்வோடு தமிழா தமிழா
எல்லாம் ஒன்றானவனாய் ரஹ்மான்.

இசைத்தங்கம்
மனிதநேயத்தின் மாதிரி
உன் வாய் உதிர்வு
கண் ஒளிர்வு
காலின் பதியங்கள்
தெய்வங்களின் நடைபாதையாய்.

இசையின் சகாப்தமே
சலாம்.
என் இதயத்தின் சலாம்.
எனக்குள்ளும் காதல்
உன் மீதும்
உன் இசையின் மீதும்.

உன்னைப்போல்
ஒருவன் கிடைக்க
எத்தனை ஜென்மத்தின்
தவங்கள் தேவை
இந்தத் தேசத்திற்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, February 23, 2009

சிவராத்திரி

படைத்தவனிடமே தொடக்கம்
நீயா... நானா?
இல்லையில்லை
நானேதான்
இறுமாப்பின் எதிரொலி.
ஆளுமை...
உரிமை மறுப்பு...
தனியாட்சி...
ஆட்சி மோதல்...
பொய்ப்பிரச்சாரம்...
போர்....
இன்னும் இன்னும்...

படைத்தல் கடவுளாம் பிரமனுக்கும்
காத்தல் கடவுளாம் விஷ்ணுவுக்கும்
நீயா...நானா வாக்குவாதம்.
சர்ச்சை தீர்க்க வந்த
ஈசனோ....
தான்தான் ஆள்பவன்.
தன்னை விட்டால்
யாருமே உயர்ந்தவர் உலகில்
இல்லையென்று தீர்ப்பு.

தன்னைக் காத்துக்கொண்டு,
அவர்களே அடிபட
ஆயுதமும்... யுக்தியும்
அருள்கிறாராம்.
"தேடிப்பிடியுங்கள்
என்...
அடியையும் முடியையும்
முடிந்தால்".
எத்தனை அகம்பாவம்
இறைவனுக்கே.

இவர் கூட்டணியில்
அவர்கள் மட்டும்
குறைந்தவர்களா என்ன?
பிரம்மன் அன்னப்பறவையில்
ஈசனின் முடி தேட
விஷ்ணு பன்றியில்
அடி தேடி ஓட,
இங்கே ஆரம்பம்
அரசியல் ஊழல் பொய்.

தாழம்பூவைச் சாட்சியாய் வைத்து
"ஈசன் முடி கண்டேன்.
சூடியிருந்த பூவும் பார்"பிரமன் கூற,
தாழம் பூவும்
ஆட்டியதாம் தலையை.
தீர்ப்பின் முடிவில்
ஆதிமூல நாயகனே
முதலானவன்.

பிரமனுக்குத்
தனிக் கோவிலில்லை.
தாழம்பூவோ
ஒவ்வாது பூஜைக்கு.

கல்கி யுகத்தில்
தர்மத்துக்கு மூன்றே காலம்
வெற்றிக்கு வேகம் குறைவாம்.
ஒரு கால் கொஞ்சம் நீட்டி
மூன்று கால் மடித்திருக்கும்
நந்தி சொல்லும்
கதையும் இதுவாம்!!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, February 21, 2009

தூரமாய் ஒரு குரல்...

நண்பனே,
ஆதாரமில்லாத
கொத்திக் குதறும்
கழுகுகள் நடுவில்
கதறும் உனக்கு
நான் என்னதான்
செய்யமுடியும்!

என் கண்களும்
என் கைகளும்
உன் திசை
கவனித்தபடியேதான்.

எனினும்
எங்கோ தொலைவில்
புதைந்து கொண்டிருக்கும்
பூமியில்
கந்தகப்புகை நடுவில்
நின்று நீ

கூக்குரலிடும்
உன் குரல்

காற்றில் அடிபட்டு
என் செவிப்பறையில்
அறைந்தபடி.

உன் குரலை நசுக்கி
அழுத்தும் விரல்களை
முறிக்க முடியா
எட்டாத்தூரத்தில்
அகதித் தொலைவாய் நான்.

மீட்டு இழுத்துவர முடியாமல்
காற்றுவழி
கண்ணீர் கயிறு கட்டி
உன்னை இழுக்க
மனது நினைத்தாலும்
மூளை மறுக்கிறது.

அகதித் தொலைவும்
அன்னிய தேசமும்
வேண்டாம் உனக்கு.

ஒரு உண்மை தெரியுமா
தோழனே உனக்கு.
நானும்
சுதந்திரப் பசியோடுதான் இங்கு.

ஒற்றைப்

பருக்கை கிடைக்காமல்
யாரும் தராத
ஏக்கத்தோடு அகதியாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 17, 2009

கூட்டாஞ்சோறு உறவு...

ஞாபகத்தில் இருக்கிறது
அழகாய் நிழலாய் ஒரு முகம்.
ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை.
அலையும் நீரில்
அலைவதாய் அது.
வயது தொலைந்து
வாழ்வின்
எல்லையின் தனிமையில்
இளமையை
அசை போட்டபடி.
நிறைவாய் ஒரு
நீ.........ண்ட
ஞாபக உறவு.
வாழ்வு
இயல்பாய் நகர்ந்தும்
அம்முகம் அடிக்கடி
வரும்... மறையும்.

கொல்லைப்புறத்துப்
பொட்டு வேலிதான்
அவனது போக்கு வரத்து.
பனம்பாத்தியடியில்
கிளுவங்குச்சி முறித்துக்
கொட்டில் கட்டி,
குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி
மரப்பாச்சி பொம்மையும் செய்து,
கொட்டாங்குச்சியில்
சோறும் காய்ச்சி,
தொட்டாச்சிணுங்கி இலையும்
தேங்காய்ப்பூக் கீரையும்
கறிகளுமாய்.

அம்மாவின்
சோட்டிக்குள் நானும்,
அப்பாவின்
வேட்டிக்குள் அவனுமாய்.
கூட்டாஞ்சோறு ஆக்கி
பூவரசமிலையில் போட்டுப்
பக்கத்தே மூக்குப்பேணியில்
தண்ணியும் கொடுப்பேன்.

இறப்பில் சொருகியிருக்கும்
தாத்தாவின் காம்புச்சத்தகமும்,
குத்தூசியும் களவு போகும்.
கம்மாலை வளவு
கலா அம்மாதான்
சின்னச் சுழகும்,
கொட்டாம்பெட்டியும்,
திருகணியும்
நீத்துப்பெட்டியும்
இழைத்துத் தந்தா.

சிலசமயம்...
நாவலடி,வேம்படி
அத்தியடி,புளியடியும்
எம் அடுப்படியாய்.
தும்பிக்கு வால் கட்டினாலும்
பிள்ளைப் பூச்சிக்குக்
குளறியழுவான்.
மண்ணுளிப்பூச்சி
இலங்கைப் படம் கீறுதென்பான்.
சுடலை என்றாலும்
பறைச்சத்தமும் பயம் அவனுக்கு.

கரப்பைக்குள்ளும,கடகத்துக்குள்ளும்
கூடத்துக் கள்ளுப்பெட்டிக்குள்ளும்
கோழியாய்
ஒளித்துப்பிடித்து விளையாட்டு.
கிளித்தட்டும்
கிட்டிப்புள்ளூம் எட்டுக்கோடும் கூட.
துலாக்கல்லடி,ஆட்டுக்காலடி
கப்பிக் கிணத்தடி,
துளசி மாடத்தடி,
கடைச்சல் பட்டறைப் பத்தியடி,
அம்மியடி,மாட்டுத்தொழுவத்தடி
மகிழமரத்தடி மாவடி அத்தனையும்
எங்களுக்கு அத்துப்படி.

ஞானவைரவர் ஒழுங்கை தாண்ட
ஒரு குச்சொழுங்கையில்தான்
அவன் வீடு.
நானும் போய்
ஊஞ்சல் ஆடியிருக்கிறேன்.
அவன் பாட்டியின்
அழகான நாச்சாரம் வீடு
நடுவில் ஒரு ஓட்டையோடு.
நாயனமும் வாசிப்பார் தாத்தா.
பினாட்டும் தந்து
குடுவையில் தேனீரும் வரும்.
பிலா இலையில் பிளா செய்து
கூழும் சிலசமயம் முற்றத்தில்
மூக்கு உறிஞ்ச உறிஞ்ச.

வயதும் வந்ததால்
வாழ்வில் தூரமானான்.
திரும்பவும் காண ஆவலோடு.
இவ்வளவையும்
பகிர்ந்து கொள்ள
அவனால்....
மட்டும்தானே முடியும்!!!!

(மறையும் தமிழ் சொற்களுக்காகவே செதுக்கிய கவிதை)
கொல்லைப்புறம்-வீட்டின் பின்புறம்
வேலிப்பொட்டு-வேலியில் போகவர சிறு புகுவழி
பனம்பாத்தி-பனங்கிழங்குக்காக பனங்கொட்டைகளை
முளைக்க விட்ட மண்மேடு
குரும்பட்டி-தென்னம்(பாளை)பூவில் தேங்காயின் ஆரம்பம்
கொட்டாங்குச்சி- சிரட்டை
சோட்டி-அம்மா வீட்டில் அணியும் உடை
மூக்குப்பேணி-மூக்கு வைத்த தேநீர் கோப்பை
இறப்பு-வீட்டுக் கூரையின் கீழ்ப் பகுதி
காம்புச் சத்தகம்-சிறிய கூரான கத்தி
கொக்கச் சத்தகம்-உயரத்திலிருக்கும் மரக்கிளைகளை
முறித்தெடுக்கும் கத்தி (பெரிய நீண்ட தடியில் இணைத்திருப்போம்)
குத்தூசி-முற்றத்து இலை குழைகளைக் குத்தியெடுக்கும் கம்பி
கம்மாலை-(தச்சு) மரத்தொழில் செய்யும் இடம்
கொட்டாம்பெட்டி-ஓலையால் (பின்ன)இளைக்கப்பட்ட சிறு பெட்டி
திருகணி-சமையலின்போது சூடானவற்றை இறக்கி வைக்க
ஓலையால் பின்னப்பட்ட வட்டமான தாங்கி
நீத்துப்பெட்டி-ஓலையால் பின்னப்பட்ட புட்டு அவிக்கும் கூரான பெட்டி
மண்ணுளிப் பூச்சி-மண்னை உளுது போகும் சிறு பூச்சி
சுடலை-மயானம்(எம் இறப்பின் பின் எரிக்கும் இடம்)
பறை-தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி
அடுப்படி- சமையல் அறை
கரப்பை-கோழி அடைக்கும் மூங்கிலால் செய்த கூடு
கடகம்-பனை ஓலையால் செய்த பெரிய பெட்டிகள்
கூடம்-வீட்டில் கூடியிருந்து கதைக்கும் அறை
துலா-கிணற்றிலிருந்து நீர் அள்ள உதவும் நடுப்பகுதி
கப்பி-கிணற்றில் நீர் அள்ள உதவும் இன்னொரு முறை
கள்ளிப்பெட்டி-மரத்தாலான பெரிய பெட்டகம்
கடைச்சல் பட்டறை-இரும்பு வேலை செய்யும் இடம்
நாச்சாரம் வீடு-பழைய வகை வீட்டு அமைப்பு.
(சுற்றிவர அறைகளும் நடுவில் நிலா முற்றமும் இருக்கும்)
நாயனம்-நாதஸ்வரம்
பினாட்டு-பனம் பழத்தைப் பிசைந்தெடுத்து பாயில் பரப்பித் தகடுபோல எடுத்த உணவு.
குடுவை-தேநீர் குடிக்க மரத்தால் செய்யப்பட்டது
பிளா-கூழ் குடிக்கப் பிலா இலையைக் கோலி எடுத்துக்கொள்வது
மரங்கள்-கிளுவை,பூவரசு,மகிழமரம்,மா,நாவல்,வேம்பு,அத்தி,புளி
தொட்டால் சிணுங்கி,தேங்காப்பூக் கீரைச்செடி

ஹேமா(சுவிஸ்)

Saturday, February 14, 2009

கொஞ்ச மறுக்கும் காதல(ன்)ர் தினம்...

Valentines

கால் நொடிந்த காத்திருப்புக்கள்
க(கா)த்திருப்புக்களாய் குந்தியபடி.
ஆற்றாமைகள் ஆமையாய்
கைகளையும் கால்களையும்
முடக்கிக்கொண்டு.
கோபமும் சோகமும் சந்தோஷமும்
ஒன்றையொன்று முறைத்தபடி.


உன் பார்வைப் புகையால்
கண்களுக்குள் காளான் விதைகள்.
என்னதான் நினைக்கிறாய் நீ?
நீயேதான் என்கிறாய்
வந்தாலோ...
முள்வேலி போட்டல்லவா
பொத்திப் பாதுகாகிறாய்
இதழை.
காலங்களும் கேலி செய்ய
காத்திருக்கிறேன் பார்
உன் உதட்டோரம்.
நீ என் பெயர் சொல்வதும் இல்லை.
என்னை நெருங்க விடுவதும் இல்லை.
முகத்தில்
நெருஞ்சி முள் வளர்த்து
நெருக்கம் குறைக்கும் கிராதகன் நீ.
இங்கே பார்...
ஒற்றை நரைகூட
எட்டிப் பார்த்து நகைக்கிறது.


மெழுகு தோய்த்த உன் முத்தங்களில்
எச்சில்கள் அழுத்தமாய் பட்டதில்லை.
பேசிக்கொள்கிறார்கள்
எங்கள் ஊரின் A9 பாதைகூட
திறப்பதற்கு ஆயத்தமாம்.
உன் பாதை திறக்க
தவமல்லவா இருக்கிறேன்.
கொஞ்சம் திறந்துதான் விடேன்
இந்தக் காதலர் தினத்திலாவது.
நீ என்ன இலங்கை இராணுவம் போல
முத்தக் காவலனா
இல்லை என் காதலனா.


பொறுமை எருமையாய் மாறும்.
முள்வேலி பிய்த்து எறியும்.
நீ ஒரு நாள் தூங்கும் காலம்
என் கத்தரி தூங்காது.
வேலி வெட்டித் தறிக்கும்
மீட்டு எடுப்பேன்
என் முத்தத்தை நானே!!!


                                        மீசைக் காதலன்...
மலர்கள் மகரந்த மடல் கீறிக்
காத்திருக்கின்றன
சூரியனின் முத்ததிற்காய்.
மண்ணும் காத்திருக்கிறது
மழை முத்தத்திற்காய்.
இரவின் முத்ததிற்காய்
பனித்துளி காத்திருக்க
நான் தனிமையின் ஒரு ஓரமாய்.


என் ஊரில்
திருவிழாக்காலமும்
இல்லை இப்போ.
தொலைந்தாலாவது தேடி எடுத்து
துளி முத்தம் தருவாய்.


காற்று நிரவிய பலூனாய் பார்
உன்னைச் சுற்றியே என் பறப்பு.
பைரவக் கடவுளின் நாய்போல
காவலுக்கு
மீசை வளர்த்த பைரவன் நீ.
வெட்கம்,சிணுங்கல்,ஊடல்,கூடல்
அணைப்பு,ஆதரவு
ஆசையாய் இல்லையா அறிய .
காதலே கடவுளாய் கதை நான் எழுத
நீயோ
முற்றும் துறக்கும் முனிவன்
கதைக்குள் மூழ்கியபடி.


முத்தப்போர் முடிக்க
ஆயுதம் களைந்து வா.
காலியாய் விடு கொஞ்சம்.
இதழ் சுற்றி
இதமாய் ஒரு வேலி அமை.


காத்திருந்து...காத்திருந்த
அலுத்த எனக்கு
கன்னத்தில் ஒரு முத்தம்
கயவனடா நீ.
கன்னத்தில் முத்தம் தர
ஆயிரம் பேர் இருக்க
கவிதையாய்
ஒரு முத்தம் இதழோரம்.
மீசை குத்தாமல்
இந்தக் காதலர் தினத்திலாவது!!!


ஹேமா(சுவிஸ்)