*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, September 26, 2008

அண்ணா திலீபா...

உணர்வு கலைந்து
உயிர் உருகும் வேளையிலும்
யாழ் கோட்டைத் திசை
கை அசைத்துஇ
"புலிக்கொடி பறக்கும் ஒரு நாள் பார்"
என்ற பார்த்திபனின்
நினைவின் நாள் இன்று.

கலங்கித் தவிக்கிறோம் திலீபா.
வா ஒரு கணம்...
எம் முன்னால்.

திருத்தப்படா தேசம் திருத்த
நேசம் கொண்டு உன்னையே இழந்த
சிநேகிதனடா நீ.
தன் இனம் சுவாசிக்க
சுதந்திரமாய்
தன் சுவாசம் நிறுத்திய
நாயகனாய் நல்லவனே.

சித்தார்த்தன்
எழுதத் தவறிய போதனைகள்
பார்த்திபனால்
திருத்தி எழுதப்பட்டதாய்.

காந்தீயம் மறந்த பாரதம்
மீண்டும் ஒரு முறை
அகிம்சையை அசை போட
பறை தட்டிய அறிவாளியாய்.

உலகம் அழியும் முன்
அழிக்கப்பட்டவனாய்.
ஈழம் தளைக்க...முளைக்க
தானே
முன் விதையான சத்யவான்.

நம் மண் நனைய
முகிலோடு உரஞ்சிய சிரஞ்சீவியாய்.
முத்தாய் உருவாகச்
சிப்பிக்குள் துளியான
தியாகி திலீபன்.

மரணம் துரத்த தூரதேசம் பறந்த
நாங்கள் எங்கே...
நீ எங்கேயடா!
விந்தைக் குழந்தையடா நீ.

ஈழத்து வானின்
விடிவெள்ளியாய் வடிவானவன்.
யாழ் மக்களின்
செல்லப் பெடியன் அவன் சின்னவன்.
மரணத்தையே மலர் தூவி வரவேற்று
வாகனத்தில் ஏற்றி வலம் வந்த
வீரத் தாயின் தமிழன்.

சட்டங்கள் சரி செய்ய
தானே சரிந்த செம்மல்.
வல்லரசுக் களத்தினிலே
வாளாய் மாறிய சிறுத்தை.
சுதந்திர வேட்கைப் பசிக்கு
தானே உணவான உத்தமன்.

தமிழ் ஈழம் சமைக்க
தன்னைத் தானே
சமைத்துக் கொண்ட சூரியன்.
தாயகம் காக்க
துணிவையே ஆயுதமாக்கித்
தீயாகித்...தீபமான தங்கமகன்.

பொய் அரசியல்
பேசிப் பேசியே
காலம் கடத்திய கயவருக்குள்ளும்
சரித்திரமாய் வாழும்
புத்தகமான அற்புதன்.

இயமனுக்கே
நாட் குறித்துக் கூப்பிட்ட
நாட்டுப் பித்தனாய் சித்தார்த்தன்.
தன் நோய் மறந்து
தாய் தேசம் நினத்த
தாயாய் திலீபன்.

எங்கே....எங்கே
இருபத்தொரு வருடங்களாய் அவன்?
நல்லூர்க் கந்தன் காலடியில்
மயிலான மாயன்
அவன் எங்கே?
மன்னன்...மாவீரன்
மருத்துவப் பீடத்து
மருந்தான போராளி.

யார் சொன்னார் இறந்தானென்று?
இறந்தால்தானே பிறப்பொன்று.
ஈழம் பிறக்கையிலே
இன்னொரு பக்கத்தில்
பூத்திருக்கும்
கார்த்திகை மலராய்
பக்கத்திருப்பனாய்
பார்த்திபன்
எம் திலீபன்.

மறவோம் நாம்
மறவோம் நல்லவனே.
வாழும்
உன் நினைவோடு
உன் புகழும்.
தமிழன் என்றொரு
இனம் வாழும் வரை!!!

21 ம் ஆண்டு திலீபனின் நினைவோடு

ஹேமா(சுவிஸ்)

Monday, September 22, 2008

உறவுகள்...


நீ....
தந்த ரணங்களை மாற்றாமலேயே
இன்றைய ரணங்களோடு
புன்னகைத்தபடி
என் பயணம்.

சில ரணங்கள்
ஞாயப்படுத்தத் தேவை இல்லாதவை.
சில ரணங்கள்
ஞாயப்படுத்த முடியாதவை.

உறவுகள் மறக்கப்படுபவை அல்ல.
சிலசமயங்களில்
மறுக்கப்படுபவை மட்டுமே.

கண்ணாடி மனமதில்
நீ...எறிந்த கல்
என் கைகளுக்குள் வலியோடு.

மலையில் இருந்துகொண்டு
கல் உடைப்பதாய் நீ புலம்ப
இல்லை...இல்லை
மலையையே உடைப்பதாய்
நான் வாதாட
வேண்டாமடி விடு.

எல்லோருமே
ஞாபகங்களோடுதான்
உண்டு...உறங்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பூமியின் வேகத்தோடு
விரைவாகச் சுற்றினாலும்
சற்று நிறுத்தி...
உன்னைத் திரும்பிப் பார்க்காத நாள்
எனக்கில்லை.

மறக்காது பெருமரம்
தன் கிளைகளை இலைகளை பூக்களை.
என்றாலும்...
வேண்டாமடி விடு.

தூசு தட்டித்
திரும்பவும் கிளற விரும்பாத
பழைய எதையும்
மறக்க முடியாத மனதோடு நான்.

மகரந்தச் சேர்க்கையால்
இனம் மாறும் பூக்களின் நிறம் போல்
சகோதர பாசமும்
மாறச் சந்தர்ப்பங்கள்
ஒரு பருவத்தின் பின்.

யதார்த்தத்தின் இயல்போடு
வாழ்வை....
வலம் வரப் பழகிக் கொள்வோம்.

திசைகள் வேறானாலும்
வீசும் காற்றும்
உறவும் ஒன்றுதானே!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, September 17, 2008

ஈழம்...


ஈழமண்ணில்...

மூலைக்கு மூலை
மொழிக்கலவரம்.

இண்டு இடுக்கெல்லாம்
இனக்கலவரம்.

தெருக்கள் காயாத
இரத்த ஆறு.

காற்றில் பரவிப் பறக்கும்
பிணவாடை.

காலி வயிற்றோடு உலவும்
எலும்புக்கூட்டுக் குழந்தைகள்.

இருந்தும்...
தெய்வங்களோ
மூலஸ்தானத்தில்
மிக அமைதியாக!

இடையில்...
எதையுமே கண்டுகொள்ளாமல்
நிறையப் பேசியபடி
அரசியல்வாதிகள்!

மக்கள்?????

ஹேமா(சுவிஸ்)

Sunday, September 14, 2008

தொடரும்...

வானம் உடைந்ததாய்
ஒரு கனவு.
கலைந்த கனவோடு
மீண்டும் ஒரு நிமிடம்
படுக்கையோடு போராடி
கனவுக் கருவுக்குள்
இருளும் ஒளியுமாய்
பல முகங்கள்.

புன்னகை நிரவி
அழுகை துடைத்து
அடம் பிடிக்க
அமளி துமளியாய்
அடங்கும்
ஆணவ இரகசியங்கள்.

அடிமைப்பட்ட விலங்குகளின்
சத்தங்கள் இன்னும் செவிப்பறையில்
வலி கொண்டதாய்
அந்த வாசகம்.
வெளிச்சம் காணா
மஞ்சள் புற்களின் ஏக்கம் போல

வெளிறிய மனங்களாய்.
காலை மாலை ஊர்ந்து
கசிந்து பரவும் ஒளி பட்டுக்
கண்கள் வெட்கப்பட
இருந்தும் மறைந்தும்
இருந்தும் மறைந்தும்
மறைவாய் இருக்கும் அது.

மீண்டும் முயற்சி
சிறு தூக்கத்திற்காய்.
மறுப்பது கண்களா....மனமா!
குழந்தையின் பிடிச்சிராவித்தனமாய்
சீ....போ....

பொழுதை விரிக்கும்
பகலைப் பிடிக்க
இரவுப் படுக்கையை
மூலையில் நிறுத்தி
இன்றைய அலுவல்களையும்
சேர்த்து எடுத்துகொண்டு
நேற்றைய மிச்சத்திலிருந்தே
தொடங்கும் இன்றைய பயணம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, September 11, 2008

கானம் இழந்த ஈழம்...

கானம் இவன் கண் மூடினான்.
மூர்த்தியோடு ஜோதியாகினான்.

கானம் ஒன்று கண் மூடியது.
நாதம் ஒன்றை ஈழம் இழந்தது.
தோடி தொட்ட நாதஸ்வரம்
மூர்ச்சையுற்றுப் போனது.
குழலுக்குள் மூச்சைக் கொடுத்து
உலகையே மகுடியாய் மயக்கியது.

இன்று...

ஊரே கலங்கி நிற்க
ஊமையாய் உறங்கியது.
நாதக் குழலின் காற்றும்
திசை மாறிப் பறந்தது.
குன்னக்குடிக்குச் சோடியாய்
இறைவனடி வாசிக்க
இருவராய் விரைவோம் என்று,
திரும்பாத தேசம் ஒன்றில்
மேடையும் கண்டு பிடித்தது.

பெரிய அண்ணாவாய்...தந்தையாய்...ஆசானாய்
என்னை வளர்த்த என் அண்ணாவுக்கு,
பூத்தூவி என் கண்ணீரோடு என் இதய அஞ்சலி.
என்றென்றும் மறவோம் நாம்.
தூரம் இருந்து தவிக்கிறோம் அண்ணா.
நாதஸ்வரத்துள் நாதம் வாழும் வரை
நீங்களும் எங்களோடு.
அண்ணா...அண்ணா...அண்ணா!!!

(நாதஸ்வர வித்வான் கோண்டாவில் V.K.கானமூர்த்தி)

அன்புத் தங்கை ஹேமா(சுவிஸ்)

Tuesday, September 09, 2008

இசைக்கு இதய அஞ்சலி...

ஊரும் உறவும் உருண்டு புரள
சொந்தமும் பந்தமும் சோர்ந்து போக
பெற்ற பிள்ளை பிதற்றி அழ
உற்ற நண்பன் உயிர் துடிக்க
தூரத்து நண்பன் துவண்டு விழ
தொலை பேசி அலறி அடிக்க
மின் மடல்கள் நிறைந்திருக்க
உற்றவர்கள் ஓடி வர
பக்க வாத்யங்கள் பரிதவிக்க
ஸ்வரங்கள் ஸ்தம்பிக்க
திருநீறும் குங்குமமும் நெற்றிக்காய் ஏங்க
தாளமும் பாவமும் தடம் புரள
ஊமையாய் மூலையில்
அவர் விரல் தொட்ட
வயலின் மாத்திரம்!!!!

இசைமேதை குன்னக்குடி அவர்கள்
காலத்தோடு என்றும்
இசையாய் வாழ்வார்
எம்மோடு.
கலங்கும் இதயத்தோடு கண்ணீர் அஞ்சலி.

ஹேமா(சுவிஸ்)