*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 03, 2012

அழைப்...பூ !


தள்ளிக்கொண்டேயிருக்கிற
மனதையும்
நெருங்கிக்கொண்டேயிருக்கிற
என்னையும்
அதட்டிக்கொண்டே
இதை எழுதுகிறேன்.

நான் ஆறிய
ஆடிய மகிழமரம் நீ...
வார்த்தைப் பூக்களைப்
பரப்பிவிட்டு
பிடித்தவற்றைப்
பொறுக்கியெடுவெனச்
சாபமிடுகிறாய்.

குழந்தைகளாய்
அள்ளியெடுக்கிறேன்
நீ தந்தது
நான் தந்தது
இதில்...
எதை விட
எதை அணைக்க.

நம் எண்ணங்கள் கருவுற
பெற்ற குழந்தைகளை
வளர்க்க
என்னிடமே தந்திருக்கிறாய்.

நீ தந்த
வார்த்தை வாரிசுகளை
என்னோடு கட்டியணைக்க
ஒருமுறை...
ஒரே ஒருமுறை வா
வந்துவிடு
இன்னும்....
கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே
அந்த வாய்ப்பும் உனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 30, 2012

வித்தை கற்றவளின் கனவு...

கனவுகள் போர்த்திய பகல்
குறைந்த வெளிச்ச இரவு
வகிடெடுத்து
வளைந்த தேவதையாய்
என்றும்
வாயில் சின்னப்புன்னகை கீறி
பூக்களையே பாரமென்று
சுமக்கும் பாவைச்சித்திரம்.

நாடு வீடு
நகரும் நகரம்
நரகமாகும் கனவு
சுற்றுச் சுழல் காற்றில்
நாற்றமடிக்கும் சமூகம்
உடைந்த மனத் துகள்களில்
எண்ணங்களை கிறுக்கும் அவளுக்கு
வெற்றுச் சோற்றுக் கோப்பையாய்
அச்சித்திரம்
பாவங்களை கண்ணோடு நிறுத்தியபடி.

கல்வி மறுத்து
தனிமை வெறுத்து
காதலித்த காதலையே கொன்று
தனக்குத்தானே
சிம்னி விளக்கில்
சவப்பெட்டி செய்து
படுத்துக்கொள்ளும் அவளை
இழுத்து வைத்து மூடி
ஆணியடிக்கும் பல கைகள்.

அதே குறைந்த வெளிச்ச இரவு
வகிடு வளைந்த புன்னகையோடு
இன்னும் சித்திரம் அப்படியே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, August 26, 2012

காதல் துளிகள் (2)...

பார்வையால்
பசிக்க வைப்பவன்
காதலைத் தருகிறான்
'தின்' னென்று !

உன் சபித்தல்கூட
வரமாய்த்தான்
வந்தணைக்கிறது என்னை
எதற்காகவோ
யாருக்காகவோ
நீ...சிரித்த சிரிப்பை
எனக்கென்று ஏற்றுக்கொண்டு
இன்றைய நாளை
நிறைத்துக்கொள்கிறேன் !

ஏன்....
என்னை விலக்கினாயென்று
புரியவில்லை
இன்று விலகியிருக்கும்
இந்த
மூன்று நாட்களில்தான்
உன்னைக் கூடுதலாக
நினைக்க வைக்கிறது
நீ சொன்ன...
பாட்டி வைத்தியம் !

பூமியாய் குளிர்ந்து
உறைந்து கிடக்கிறேன்
காரணத்தோடு
செயற்கைச் சூரியன்கள்
உருக்கமுடியா
சூரியகாந்தி நான் !

பூட்டியிருக்கும்
வீட்டின் பூட்டை
யாரோ
இழுத்தசைக்கிறார்கள்
நாசித்துவார இடுக்கில்
என்னவனின் வாசனை
அவன்...
இப்போ...
இங்குதான்...!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, August 23, 2012

இற்ற சருகிலும் நீ...


பச்சையம் தொலைக்கும்
மஞ்சள் இலைகளுக்குள்
கூடொன்று கட்டி
தந்துவிட்டு
போயிருக்கலாம்
நீ....
சருகாகினாலும்
கூட்டுப்புழுவாய்
ஒட்டியிருந்திருப்பேன்
இறகு தர
வருவாய் என்கிற
நப்பாசையோடு.

இப்போதும்
அங்கொன்றுமான
இங்கொன்றுமான
உன் நினைவுகளை
சேர்த்தெடுத்து
இற்றுத் தளர்ந்து மடியும்
அதே சருகின்
நரம்புகளில்
ஒட்டிக்கொண்டுதான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 20, 2012

அப்பாவின் அழகு பொம்மை...

அப்பா...
நிறைய அழகு பொம்மைகளைச்
சேர்த்து வைத்திருப்பதாக
சொன்னார்.

ஒரு பொம்மையை மட்டும்
கொஞ்சம் துப்புரவாக்கி
கொஞ்சம் அழகாக்கி
அடுக்களையில்
வைத்திருப்பதாகவும் சொன்னார்.

அம்மாவைத்தவிர
எதையும் எவரையும்
கண்டதில்லை நான்
அடுப்படியில்.

சும்மாதான் கேட்டுப் பார்த்தேன்
ஒரு பொம்மை
விளையாட வேண்டுமென
கை காட்டினார்
அம்மாவின் பக்கம்.

இப்போ...

அப்பாவும்
அவர் பொம்மைகளும்
இல்லாமல் போயிருந்தன.

அப்பாவின் அறையில்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறாள்
அம்மா புறுபுறுத்தபடி.
வேறும் சில பொம்மைகள்
இருக்குமோ
அப்பாவின் அறையில்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, August 17, 2012

வா...வா !

எதிர்பார்ப்புக்கள்
இன்றைய தருணங்களை
பூச்சியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ....எங்கோ
யாரோ ஒருவரிடம்
கைகுலுக்கிக்
காதல் சொல்லும்
ஏமாற்றம் வேண்டாம்
என்பதற்காகவே
கனவின் துளிகளைப்
பகிர்ந்துகொள்வோம்
நாளைய தருணங்கள்
நிறைவைத் தரக் கேட்டு !

அப்பப்போ
நாம் பரிமாறிக்கொண்ட
சொற்களைச் சேர்த்தொரு
அன்புக் கோட்டை
தகர்த்தெரியாத
உன் அன்பு மழைக்காக
உன் செல்லப் பூனையோடு
இனி நானும்!!!

ஹேமா(சுவிஸ்)