*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, May 23, 2012

உறவுகள்...

அள்ளமுடியா
அமில மழை
தூறித் துமித்து முடிய
அடித்த பேய்க்காற்றில்
மூடிய கதவுகளை
அரித்துக்கொண்டிருக்கிறது
ஆக்ரோஷக் கறையான்கள்
பாறிக்கொண்டிருக்கிறது
நிலைப்படியோடு
கதவும் உறவும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 18, 2012

மே 18- 2012...

நமக்கான கனவுகள்
எங்களுக்கேயானவை
சதுரங்கச் சுழிகளிலும்
பாம்பு துரத்தி ஏறும்
ஏணிகளின் உச்சியிலும்
அவை காத்திருக்கும்.

எம் கனவுகள்
வேர்கள் இறுக்கி வைத்திருக்கும்
நீரைப்போல் ஈரமானவை
பாலைவன நீரைப்போல
மண் உறிஞ்சிக் காய்ந்து
அடையாளம் தொலைக்காது.

என் பிணம் காவி வரும்
என் தாய்
தன் குறியையும்
காக்கவேண்டியிருக்கிறது.

என் தேசத்தின்
ஒவ்வொரு துகள் மண்ணிலும்
என் மக்களின் குருதி
காய்ந்த சருகுகளின் அடியில்
தொலைந்து போன
என் உறவுகள்
எப்போதும் அவர்கள் பற்றிய
எம் கனவு பற்றிய
நினைவுகளை அழிக்க
எவராலும் ஆகாது.

தீயும் போரும்
செல்லப்பூனை எமக்கு
இறப்புப் பற்றிய பயம் அற்று
கனவு நுரைகளை நீர்க்கவைத்து
எமக்கான கனவுகளைத் தொடரும்
காலடித் தடங்களுக்கு
அடையாளம் காட்டும்
நாம்........மிதிப்பட்ட
குருதி வழிகாட்டல்.

நமக்கான தரிசல் காடுகளிலாவது
எம் கனவுகள்
கத்தரிப்பூ நிறத்தில் காத்திருக்கும்
கனவுகளைச் சீராக்க வரும்
இளம் காலச் சூரியர்களுக்காக!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 15, 2012

நேர்மையின் காத்திருப்பு...

மூட்டைப்பூச்சியின்
இருப்பிடமென
ஒதுக்கப்பட்டிருந்தாலும்
கண்களுக்குள்
அலார மிரட்டலோடு
பழைய கதிரையொன்று.

சுருங்கிய முக ரேகைக்குள்
நேர்மை நிரம்பிய புன்னகை
அனுபவங்கள் அழுத்திய ஆட்சி
அந்தரத்து ஆரவாரமாய்
தாங்கிய நினைவுகள்.

நேற்றைய முடிவுகளே
நாளைய தீர்மானமாய்
வைக்கோல் நுழைந்து
உறிஞ்சும் புழுவென
வழியும் எச்சில் நேர்மை
வேண்டாம் வேண்டாம்.

நேர்மை பற்றி அறியும்
சுவர்களும்
யன்னல் சீலைகளின்
நுனிகளும்கூட இங்கு
கட்டிய வேட்டிக்குள்
சீழ்பிடித்த மனிதரும்
நுழைவார் இங்கே.

கைகாட்டும்வரை
என்னை...
அகற்றாதிருக்கட்டும்
மூட்டைப்பூச்சிகளோடு
சாட்சியாய் இங்கு நான்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 12, 2012

அம்மாவாய் அருகில்...

பத்திரமாய்....
பாவாடை நாடாவாய்
இறுக்கிக் கட்டி வைத்தாலும்
என் அசந்த தருணங்களை
சாதகமாக்கிக் கொள்கிறது
அந்தக் குட்டிச்சாத்தான்.

அடிக்கடி
பக்கத்துத் தெருவில்
பூந்தோட்ட மர உச்சியில்
சமையலறை மேடையில்.....

பிடி...பிடியென
துரத்திப் பிடித்துத் தூக்கி
கக்கில்....
இடுக்கிக் கொள்கிறாய்
அடிக்கடி குழந்தையாகி
உன் இடுப்பில் நான்.

அம்மாவாய்...
அடிவயிற்றுக்குள்
இடுக்கிக்கொள் என்னை
உன் மார்பிலும் பால் சுரக்கும்.

அம்மாவின் தினத்தில்
அம்மாவாய் அருகில் நீ!!!

ஹேமா(சுவிஸ்)

"தாயுள்ளம் படைத்த அனைவரையும் நினைப்போம்...வாழ்த்துவோம் !"

Sunday, May 06, 2012

அன்புள்ள ....க்கு !

சிறந்த குறிப்புக்களோடுதான்
இசைத்துக்கொண்டிருந்தேன்
என் கனவுகளுக்கு
மெட்டுப் போட்டுத் தருவதாய்
அடம்பிடித்து
வாசித்தும் காட்டினாய்.

இதே ’வைகாசி’ மாசத்து
ஒரு நீண்ட இரவில்தான்
’சங்கீதத் தோழி’யென்றும்
செல்லப் பெயரிட்டாய்
’நினைவு’ வலிக்க.

காதல் போல ஏதோ ஒன்றை
உன்னிடத்திலும்
என்னிடத்திலும்
’கண்டுகொண்டேன்.’

சங்கீதத் தோழி
நான் பாடத்தொடங்க
நீயோ...
மௌனித்துக்கொண்டாய்.

ஒவ்வொரு இரவிலும்
உரக்க இசைக்கிறேன்
மௌனத்தை உடைக்க
உடைகிறது காதலும்
கனவின் மெட்டுக்களும்.

உன்னால்
உரத்துச் சொல்லப்பட்ட
மூன்று வரிகள் இவை
’ஊரெல்லாம் உறக்கத்தில்
உறங்காமல் நான்
உறங்கவிடாமல்
உன் நினைவுகள்’.

மெட்டுப்போட வரமாட்டாயெனத்
தெரிந்தும் காத்திருக்கிறேன்
நம்பிக்கையோடு.....

இப்படிக்கு அன்போடு........
உன் சங்கீதத் தோழி!!!
 
ஹேமா(சுவிஸ்)

Thursday, May 03, 2012

சில முடியாதவைகள்...

பாசம் பணம்
இரண்டுக்குமான தூரத்தை
சொல்லி முடித்த அவன்
எதையோ இடக்கையில்
எழுதிக்கொள்கிறான் .

பணம் பற்றிச் சொல்ல
கலைந்த அமைதி
வலச்சுழியில் லயித்திருந்த
சின்னவன்கூட விழித்தான்.

சொல்லிடறிய பாசம்
பாவம்....
ஊடாடும் உயிரோடு
துணிகிறது கொல்ல
முடியாதென்கிறான் சின்னவன்.

புழுங்கும் வெப்பம்
இடக்கை மை உருகி வழிய
மல்லுக்கட்டமுடியா
பலனற்ற இரவொன்றில்
நுழைகிறான் கல்லறைக்குள்
தலைமுறைத் தோல்வியோடு.

இடக்கையில் என்னதான்
எழுதிக்கொள்ள
முனைந்திருப்பான் பாவம்!!!

ஹேமா(சுவிஸ்)