"இந்தக் கட்டையைஎன்ர மண்ணிலேயே எரிச்சிடு பிள்ளை"
அம்மாவின் அடிமன ஆசை அது.
வாழ்வின் யுத்தங்கள் முடித்தவளாய்
வாழ்வின் பொருள் பரிசளித்தவள்
கிளை விட்டெழும் பறவையாய்
இலையசைத்து
பிரிந்துவிட்டாள் பின்னொருநாள்.
அனுப்பிவிட்டேன் பக்குவமாய்.
படுக்கை....
அம்மாவின் சேலை
வாசனை கலைக்க விரும்பாதவளாய்.
அக்காதான் பேசினாள்.
"சவம் வந்திட்டுது
பொறுப்பெடுத்து ஊருக்குக் கொண்டு போறம்.
இடது கால் சொக்ஸ்க்குள்ள இருந்த காசும்
பாவாடை மடிப்பில இருந்த சங்கிலியும்
றவுக்கைக்குள்ள இருந்த
அம்மான்ர காப்பும்
நீ சொன்னபடி நானும் தம்பியும்
பிரிச்சு எடுத்துக்கொள்றம்.
செத்தவீட்டை
குறையொண்டும் இல்லாமல்
வடிவா வீடியோ எடுத்து அனுப்புறன் நான்
கவலைப்படாமல் இரு என்ன."
வாழ்வு வரிசையின் ஒழுங்குமுறை
அம்மாவின் குரலில்
"என்னடி லட்சணம் இது"
என்று கேட்படி!!!
நேற்றைய "எங்கள் புளொக்"ல் சிறுகதை
ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்திய தாக்கம்.
நன்றி ஸ்ரீராம்.
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||






