*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, February 14, 2015

அநேகன் அவன்...


சிறகொடித்துச் சிறகு தந்தவனே....

மீண்டுமொரு காதலர் தினம்.காத்திருப்பாய் நிச்சயமாய் என் விளங்கா மொழியில் கவிதைபோலுள்ள வார்த்தைப் பொட்டலத்தோடு போராட.பிரபஞ்சப் பெருவெளி கடந்தும் என் வாசனையைச் சேமித்து வைத்திருக்கும் உன் நாசிக்குடுவை வாசனைக்கோடு கிழித்து வழிகாட்டித் தரும் வந்துவிடு என்னிடம்.

ஒரு பொக்கிஷம் போன்றவன் நீ
ஆயுதம் தாங்கிய என் காவலன் நீ
உயிர்க் காதலன் நீ
என் திசைகாட்டும் முள்செடி நீ
தமிழின் உயிர் நாக்கு நீ.

கன்னமுரசி நீ தந்த கணங்கள்தான் என் கவிதைகளின் கரிசனப் பெருவெளி.வாழ்வின் கூழாங்கற்களை உருட்டிக்கொண்டே கடந்தும் சமப்படுத்தியும் நீட்டியும் செல்லும் தோரணம் கட்டிய வசந்தப்படிக்கட்டு.

வார்த்தை ஜாலங்களோடு மனம் குடைந்த துவாரம் மறைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன் வாழ்க்கைப்பட்டுப் போகாத குடியேறிய இந்த ஐரோப்பிய நாட்டில்.குளிர்சாதனப் பெட்டியில் பலமாதம் பச்சை தொலைக்காமல் வாழும் காய்கறிகள்போல எப்போதும் புதிதாகவும் அழகாகவும் இன்னும் இருக்கிறேன் கரதலம் பற்றிய உன் நினைவுப் போர்வை போர்த்திய காதல் நினைவுகளோடு.

நிஜமான அந்தப் பயமான உக்கிரமான....ஆனால் நமக்குச் சுகம்தந்த அந்த நாட்கள் எத்தனை சுகமானவை.உனக்காகச் சமைத்தபொழுதில் கீறிய கத்தியைத் திட்டிக் காய்த்து மரத்த உன் கையால் தடவிவிட்ட பொழுதில் காயத்தைவிட உன் கை தொட்ட வலி சொல்லாமல் நான் சுகமாய் அத்தடவலை ரசித்து மயங்கிய பொழுதில்தான் முடியாமல் மூச்சிறைத்து உன் மடி சாய்ந்தேன்.அந்த நேரத்தின் மங்கலில் நீ வலுவிழந்தாய்.உன்னை உலுப்பி முதுகில் குத்தி சாத்தான்களும் தாடிவைத்த பூனையுமென கதை சொல்லியாய் நானப்போ.

ஆட்டமும் பாட்டமுமாய் பெருவெளிச்சமுமாய் நம் தெருக்கள் களை கட்டிக்கிடந்த காலமது தேவனே.அந்தக்காலத்தின் என் தோள் தொட்ட உன்னையும் அந்தக் காலத்தையுமே காதலித்தபடியே இருக்கிறேன் இப்போதும் மறந்துவிடமுடியாமல்.அந்த நாட்களின்மீது பேரவா பேயாசை எனக்கு.அதை இன்னும் கடக்காமல் முழங்காலில் தவழ்ந்து கொண்டிருக்கிறேன் உன் குழந்தைக்காதலியாக.உன்னை வரவேற்க அதே பூவரசு மரமும்,பெயர் மறந்த உதடொட்டும் தேரடிப் பழமரமும் நானும் இன்னும் அங்கு.

என்னை....என் உடலை எனக்குப் பிடிக்கவில்லை காயமானவனே.
மௌனத்தின்மீது கல்லெறிவதை அறிவாயா நீ.எனக்கான வாழ்விலிருந்து நான் விலகுவதைப்போல எப்பொழுதும் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கப்பண்ணுகிற இந்த புறச்சூழலும் அதற்குண்டான நிறங்களும் பெயர்களும் குணங்களும் என்னை இயல்பிலிருந்தும் சம நிலையிலிருந்தும் தள்ளி விழுத்துகின்றன.உன் வயிற்றோடு சரமாய் வளைந்து செருகிக்கிடந்திருப்பேன் நீயிருந்தால். இத்தகவல்களொன்றும் எனக்கானதாயிருக்காது.இப்போது நானே சரப்பாம்பாயும் நானே அதன் வாயின் உணவாயும்.என் விஷம் நீக்கும் கருடக் கல் நீதானே.

போதும்...இது போதுமென்ற வார்த்தை என்னிடமிருந்து வரும்வரை காத்திருக்கப்போகிறாயா செல்வனே.என்னை அறியாதவனா நீ அறிவானவனே.தற்காலிக இறகு தந்து நீ காத்த உயிர் எடுப்பாயெனக் காத்துக்கிடக்கிறேன் தாயாவனே.இறுகிக் கிடக்கிறேன் இப்பனிக்காட்டில்.பத்திரமாய்ப் பெயர்த்தெடுத்து உன் நெஞ்சின் இளஞ்சூட்டில் கரைத்தே என் முகம் காணவேண்டிவரும் நீ.அத்தனை கொடுமைக்குள் வசிக்கிறேன்.கொண்டு செல் என்னை.

இறகானவனே.....

நம் அரசியலும் வாழ்வும் மாறிக்கொண்டுதான்.இறப்பும் பிறப்பும் இயல்பாய் சந்ததிகள் போராடிக்கொண்டும்தான்.அவர்களுக்கு நீ விட்டுப்போன நம் கதைகளை நாம் சொல்லிக்கொண்டும்தான்.

என் இப்போதைய மனநிலை வெறுப்பாயும் குழப்பமாயும் திருப்தியில்லாமலும் வெறுமையாயும்.இந்த என் வெறும் நாட்களை பகிர்ந்துகொள்கிறேன் பெருவெளி இணையத்தளத்தில்.ஏதோ எங்கோ ஒரு முத்தச்சொட்டு உன்னைக் கண்டடையும் என்கிற மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் இறுமாப்போடும்.

வயதாகிறது எனக்கும்.ஆனால் சொல்லவே மாட்டாய் புருவம் சுருங்கிய உன் ரசனையில் நான் குழந்தைக் காதலிதானே.
அதானால்தான் நாம் வாழா மிச்ச சொச்ச வாழ்க்கைக்காகக் காக்க வைத்துப் போனாயோ மாயவனே மீண்டு வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்.

நானும் ஒற்றை இறகோடு காத்திருக்கிறேன்.பொய்யென இயற்கை உணர்த்தினாலும் மனம் சலித்தாலும் உன் மீதான காதல் உன் பெயர் சொல்லும் என் இதயத் துடிப்பின் ஓசையில் பொய்யில்லா உன் வார்த்தையாலும் காத்திருக்கிறேன் கள்வனே என் திமிரோடும் துணிவோடும் நீ என் பின் கழுத்திலிட்ட முத்தத்தோடும்.

வீரனே..... என் இதய வானொலியே....ரசனைக் கிழவனே..... வந்துவிடு இறுதி மூச்சின் சில இரவுகளோடும் ,பகல் நேர முத்தங்களோடும், நிறையக் கதைகளோடும் ,நாடா கோர்ப்பதாய் எடுத்துப்போன என் பாவாடையோடும் ,சாபங்களற்ற நம் நிர்வாணக் காதலோடும்.ஐந்து புலன்களின் அழகனே,என் ஆண் பூவே இன்று நமக்கான நாளாம் சொல்கிறார்கள் இவர்கள் என்றுமே இளமை மாறா நம் நாட்களைக் காணாதவர்கள்!!!

ஒரு வளைவான
சூரியன் பட்டுத்தெறிக்கும்
தங்க நிறக்குவளையில்தான்
சிறை வைத்திருக்கிறேன்
நேசித்தலின்
தயார்ப்படுத்தலாயிருக்கும்
உன் ஒற்றை இறகை.

அது காட்டும் திசைவழி
உன் அழகிய
சின்னக் கண்ணின் ஒளிவீச்சு
அதன் பேச்சில் நிதர்சனக்கீற்று
அதன் மொழிபெயர்ப்பில்
எப்போதுமே தோற்றுப்போகிறது
என் தமிழ்.

நீ சொன்ன
அந்த ஐந்தாவது மலைபோல்
அற்புதம்
உன் வசீகர நினைவுகள்.

அன்பின் சதிகாரா....

நம்பி நிறைந்திருந்திருக்கிறது
என் நாட்கள்
உன்னைப் பற்றுதலுக்கான
தழுவலுக்கான
தருணங்களுக்களுக்காய்.

வந்துவிடு
அடுத்த காதலர் தினத்திற்குமுன் !!!


அதே காதலுடன் மாறா நினைவுகளுடன் உன்  *ஹேமா*

8 comments:

துபாய் ராஜா said...

காதல்...காதல்..காதல்.
கரை புரண்டு ஓடுகிறது
கவிதை வரிகளெல்லாம்...

அப்பாதுரை said...

காதல் நன்றி சொல்ல வேண்டும் உங்கள் எழுத்தில் சிக்கிய இனிமைக்கு.

அப்பாதுரை said...

எத்தனை முறை படித்தாலும் சலிக்கவில்லையே!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசனை உள்ளபடி காதலை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அப்பாதுரை said...

மறுபடி படித்தேன். உடனே ஏதாவது எழுதும் வேகம் வந்து வந்துவிட்டது :-).

'பரிவை' சே.குமார் said...

கவிதை நடையில் காதல் கரைபுரண்டு ஓடுகிறது...
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

அப்பாஜி.... மிக்க மகிழ்ச்சி உற்சாகத்துக்கு !

ராஜா ,ரூபன் , குமாருக்கும் என் அன்பும் மகிழ்ச்சியும் !

தனிமரம் said...

அருமையான காதல் ராகம் நினைவுகள் அபாராம்!

Post a Comment