*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, February 02, 2014

காதல் துளிகள் (12)

பார்வைக்கு
மெல்லிய ஆடைகளை
பெட்டியில்
அடுக்கி வைத்துவிட்டு
என் பார்வைக்கு
மாத்திரம்
முரட்டுப் போர்வைகளையே
போர்த்துகிறாயே ஏன் ?!

நீ...
கிழக்கில் உதிப்பவன்
என்னை மேற்கிருத்தி
விட்டுப்போன இடத்திலேயே
இன்னும் இருக்கிறேன்
மேற்கு கிழக்காக
மாறும் விரதம்
சொல்லித் தராமல்
போனதுதான்
எனக்கான
கவலை இப்போ !

வெற்றிகள்..
சந்தோஷங்கள்..
துணிவு..
நம்பிக்கை..
தைரியம்..
அத்தனையும்
சரிந்து
தொலைந்து
மடிகிறது..
உன்
ஒற்றைப் ப்ரியத்தில் !!

பகலும் இரவும்
எனக்கானதாய் விடிய
தனக்கானதாய்
ஆக்கிவிடுவதில்
வல்லவன் அந்த வில்லன்
இன்று பகல்....
சருகற்ற தெருக்களில்
ஓடிவரும் சிறுமியோடு
ஒரு சிறுநாய்க்குட்டி
அவன் பெயர் சொல்லியே
தெருவைக் கூட்டிவிடுகிறது !

வட்டப் பரிதியின்
சுற்றளவையும்
தாண்டுகிறது
உன் நினைவு
ஓ.....
இன்று நீ
இல்லாமல் போன நாளோ !

துளும்பும் தாரகை
அளித்த தாழிசை
சில நிழல்களோடு
விளக்கமில்லா
ஒரு நீண்ட பொழுது
வழியனுப்பி வைக்கலாம்
சில குறிப்புக்கள்
போதும்
சேடமிழுக்கும் மனதிற்கு !

சுழலும்....
காதலின் கால்களை
இறுகக் கட்டினேன்
சொற்களுக்கு
வளைவுகள் தருவதாய்
ஒருவன் சொல்லிப்போனான்
கைகளையும் இறுக்கிக் கட்டி
காத்திருக்கிறேன்
சுகம் !

உன் குரல்
நிலவெழும் நேரத்தில்
முகம் திரும்ப
நிலவுதான் கையசைக்கிறது !

ஹேமா(சுவிஸ்)

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று நீ இல்லாமல் போனதும், கைகளையும் இறுக்கிக் கட்டி காத்திருப்பதும் மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

ஆத்மா said...

ரொம்ப நாளைக்குப் பிறகு வந்ததில்
நல்லதொரு கவிதை கிட்டியது

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ரசிக்க வைக்கும் கவிதை... அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 2வத வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விச்சு said...

காதல் துளிகள் ஒவ்வொன்றும் தேன்..

Post a Comment