*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, June 13, 2013

அன்பான செல்ல ஹிட்லருக்கு...

என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....

சுகம் சுகம்தானே.சுகமாய்த்தானிருப்பாய் என்றாலும்...... கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !

உன் வியர்வை வாசனையோடு உன் நீண்ட பல கடிதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன் மினுங்கும் மஞ்சள் பை ஒன்றில்.சில சமயங்களில் உன்னோடு கோவப்பட்டு உன் முன்னாலேயே சில கடிதங்களை எரித்துமிருக்கிறேன்.சாம்பலாகிய கடிதங்கள் ஒரு போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை தெரியுமா !

காதலில் சில நியாயங்கள் உறுதிப்பாடானது.உலகின் எந்த நியதிகளுக்குள்ளும் அடங்காதது.தனக்காகச் சில விதிகளை எழுதிக்கொள்ள காதலால் மட்டுமே முடிகிறது.காதலின் தீர்மானங்கள் முடிச்சாகும் இடங்கள் அதிசயமாயும் அதிர்ச்சியாயும் நம்பமுடியாமலும் இருக்கும்.காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது தன்னைத்தானே.இதில் நானும் நீயும் விதிவிலக்கா என்ன !

எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.நான் என் வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம் செலவழிக்கிறேன்.சந்திக்கும் நேரங்களிலும் நாம் கதைத்துக்கொண்ட நேரங்கள் மிக மிகக்குறைவே.சில சமயம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்கலாமோ !

இருந்தும்.....

உன்னை நினைத்துக்கொண்டே உன அருகாமையை அணைத்துக்கொண்டே உன் ஆயுதம் கொஞ்சம் தள்ளி வைத்து என்னில் பொய்க்கோபம் கொள்ளும் உன் கண்களைச் சரிப்படுத்தவோ,உன் புன்சிரிப்பை இலகுவாக்கவோ,எம் ரகசியங்களை தவிர்க்கவோ, பக்க இருக்கைகளை உறுதி செய்யவோ இந்தக் கடிதம் இப்போ உனக்கும் எனக்கும் தேவைப்படுகிறது !

இது நம் இடைவெளிக்கான ஒரு நேசிப்புமடல் மட்டுமே.நாம் சந்தித்துக் கனநாளாயிற்று.காணும் நிகழ்வொன்றுக்கான காலத்தை அனுமதி கொடுத்து அனுப்பிவிடு செல்லா.ஏங்கி இடைமெலிகிறேன் என்பதைச் சொல்ல வெட்கமாவும் இருக்கிறது !

பிரியங்களைக் கடந்து போதல் கடினம்தான் என்றாலும் அது கைவிடுபவர்களை விட்டு நீங்குவதில்லை.நினைவுகளைக் கரைக்கமுடியாக் கண்ணீரும் தோற்றுப்போய் இறுகிவிட்டது என்னோடு !

எந்த எதிர்பார்ப்புகளுமற்ற ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசாக அனுப்பிவிடு நீ சுவாசிக்கும் கந்தகக் காற்றுவழி.என்னை நிராகரித்து சட்டைசெய்யாது தாய் தேசத்தின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உன்னிடம் காலம் முழுதும் தன்னையும் தன் மொத்த அன்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறாள் இங்கொருத்தி காதல் கிளியென !

ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்ட குகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள் ஹிட்லரிடம்.நானும் கண்டிருக்கிறேன் அதே ஹிட்லரான உன்னிடம்.காதலின் புன்னகை ஒன்று உனக்காக மட்டுமே உன் வானில் நிலவாக வாழ்ந்துகொண்டிருப்பதை என்றும் நினைவில் கொள் !

என் உடலுறவுக்கும் ,உண்மைக் காதலுக்கும் உரிமையானவனல்ல நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது.விரைவில் ஒரு முறை உன் கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு உறங்கிக்கொள்கிறேன் !

சந்திப்போமடா....என் செல்ல ஹிட்லரே !

ஹேமா(சுவிஸ்)

19 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கடிதம் அருமை. "திடம கொண்டு போராடு " சீனு நடத்தும் போட்டிக்கு இந்த கடிதத்தை அடனுப்பி விடுங்கள். கவிதைத்தனம் கலந்த கடிதம். வித்தியாசமான சிந்தனைகள்.

ராஜி said...

கதை அருமை காதலும், வீரமும் கலந்து அருமை

Anonymous said...

ஹிட்லரில் அவ்வளவு அன்பா?வித்தியாசமான சிந்தனைகள் வித்தியாசமான நடை .நன்று

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான கடிதம் அருமை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கீதமஞ்சரி said...

\\அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது\\

நெகிழ்த்திய வரிகள். கடமையின் பெயரால் காணாமற்போனவனுக்கு காதலின் பெயரால் எழுதப்பட்ட இக்கடிதம் கைகளில் சேருமாயின் காற்றாய்ப் பறந்துவந்துவிடமாட்டானா என்ன?

பால கணேஷ் said...

கடைசி இரண்டு பாராக்கள் மனதை நெகிழச் செய்தது. கடிதம் அருமையாக ரசனையின் உச்சமாக வந்திருக்கிறது! சூப்பர்ப்!

வெற்றிவேல் said...

சீக்கிரம் சந்திப்பீங்க ஹேமா....

ஹிஷாலி said...

என் உடலுறவுக்கும் ,உண்மைக் காதலுக்கும் உரிமையானவனல்ல நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது.விரைவில் ஒரு முறை உன் கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு உறங்கிக்கொள்கிறேன் !

அக்கா ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் கூறகிறது அதிலும் கடைசி வரிகள் முற்றிலும் உண்மை வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இப்படியெல்லாம் கடிதம் எழுதுவார்கள என்று இன்று தான் அறிந்துகொண்டேன்

சசிகலா said...

ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்ட குகைவெளி மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள் ஹிட்லரிடம்.நானும் கண்டிருக்கிறேன் அதே ஹிட்லரான உன்னிடம்.காதலின் புன்னகை ஒன்று உனக்காக மட்டுமே உன் வானில் நிலவாக வாழ்ந்துகொண்டிருப்பதை என்றும் நினைவில் கொள் !
இந்த வரிகளைத் தாண்டி வர வெகு நேரம் தேவையாய் இருந்தது தோழி. அருமை .

Tamizhmuhil Prakasam said...

"எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கிறது.நான் என் வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம் செலவழிக்கிறேன்.சந்திக்கும் நேரங்களிலும் நாம் கதைத்துக்கொண்ட நேரங்கள் மிக மிகக்குறைவே.சில சமயம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்கலாமோ ! "

கனவிலும் கற்பனையிலும் காதலிடம் ஆயிரமாயிரம் கதை பேசி மகிழும் மனம்,ஏனோ நிஜத்தில் மெளனத்தையே ஆடையெனக் கொண்டு விடுகிறது.

அருமையான கவிநயம் நிறைந்த காதல் கடிதம்.வெற்றி பெற வாழ்த்துகள் தோழியே !!!

Prem S said...

உயிர்ப்பான கடிதம் வாழ்த்துக்கள் அன்பரே

அப்பாதுரை said...

/காதல் நேசித்துக்கொண்டிருக்கிறது தன்னைத்தானே
மிகவும் பாதித்த வரி.

காதல் உணர்வு சிலருக்குக் குருதியில் கலந்து சிந்தையில் வடிகிறது. நீங்கள் அந்தச் சிலரின் தலைவியோ என்றுப் பல நேரம் தோன்றும்.

இது போட்டிக்கான கடிதமா? அடுத்தவங்களுக்கு பரிசு கிடைக்கட்டும் என்கிற தியாகமா? இல்லையெனில் கலந்து கொள்ளுங்களேன்? :)

அப்பாதுரை said...

ஹிட்லரிடம் மலர்வனம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன் சசிகலா அவர்களே.. மனிதத்தை நேசிக்கத் தெரியாதவன் மனதை நேசிக்கவா போகிறான்?

இந்தக் கடிதக் கவிதையின் மிகப் பெரிய பலவீனம் ஹிட்லர் எனும் சொல்.

Manimaran said...


இத வெறும் காதல் கடிதம் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை... காதலைவிட தன் மண்ணின் உரிமைக்காக போராடும் ஒரு போராளியின் வேட்கையை எந்த விதத்திலும் தன் காதல் தடுத்து விடக்கூடாது என்கிற தவிப்பில் எழுத்தப்பட உணர்ச்சிக் காவியமாக இது தெரிகிறது... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கடிதமே கவிதையாவது உங்களால் மட்டுமே முடியும் ஹேமா. தனித் தனியாக பாராட்ட முடியாமல் பல வரிகள் மறுபடி மறுபடி படிக்க வைக்கின்றன. அருமை ஹேமா. வார்த்தைகள் வசப்படுகின்றன உங்களுக்கு.

@ அப்பாதுரை : ஹிட்லரிடம் மலர்வனம்,மனம் இல்லாவிட்டாலும் அவனைக் காதலித்த பெண்ணுக்கு இருந்திருக்கலாமோ?

ந.குணபாலன் said...

தம்மை அடக்கியாண்ட ஆக்கிரமிப்புச் சக்தியான பிரித்தானியாவை நடுங்க வைத்தவன் என்பதால் ஹிட்லரை இலங்கை, இந்திய மக்கள் ஆக்கிரமிப்புச் சக்திக்கு எதிரான ஒரு முன்னுதாரணமாகக் கொண்டனர். அது அந்தக் காலம். தகவல் தொழில் நுட்பம் வளராத காலம். இன்றும் இலங்கை, இந்தியாவில் வாழும் மக்கள் பலர் சரிவரத் தகவல்களை அறியாது இருக்கக் கூடும். ஆனால் ஐரோப்பாவில் வாழும் நாங்கள் ஹிட்லரைக் கொடியவனாகக் காட்டுவது மேற்குலகக் கண்ணோட்டம், கருத்து என்பதை விடுத்து ஞாயமான வகையில் சிந்திக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது பல தருணங்களில் பொருந்தாது. ஹிட்லர் தோற்கடிக்கப் படாது அவனது கொள்கையைப் பின்பற்றுபவரின் பிடியில் ஐரோப்பா இன்று இருந்திருக்குமானால், ஆரியர் அல்லாத நாம் இங்கு அடைக்கலம் தேடி இருக்க முடியாது. இலட்சக் கணக்கான யூதர் மட்டுமின்றி ரோமானிய நாடோடிகள், ருஸ்சியர்கள், ஆக்கிரமிப்புக்கு எதிரான சகல இன மக்கள் பலரின் கொடூரமான சாவுக்குக் காரணமானவர்கள் ஹிட்லரும் நாசிகளும். ஆனதினால் தயவு செய்து எக்காலத்திலும் ஹிட்லரை ஒரு உயர்ந்த மனிதனாகக் காட்ட வேண்டாம். அதுவும் மனித தெய்வங்களுடன் ஒப்பிடுவது ஏற்க முடியாதது.

ஜீவன் சுப்பு said...

கடிதம் ரெம்பப்பிரமாதம்ங்க ...!

Ranjani Narayanan said...

'அன்பான செல்ல ஹிட்லருக்கு...'
ஹிட்லர் யாருக்காவது செல்லமாக இருந்திருக்க முடியுமா என்று தோன்றினாலும், நீங்கள் உங்கள் காதலனை அப்படி அழைக்க காரணத்தை உங்கள் கடிதம் சொல்லுகிறது.
//எந்த எதிர்பார்ப்புகளுமற்ற ஒரு கடைக்கண் பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசாக அனுப்பிவிடு//
உணர்ச்சிகளை மிகவும் மென்மையாக சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்!

VOICE OF INDIAN said...

நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில் உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது

பாராட்டுக்கள்!

Post a Comment