*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, July 17, 2009

அம்மா....அப்பா

அம்மா ...
வாழ்வின் துயர் நெடி வழி நெடுகிலும்.
உன் மடி கடந்தபின்
புன்னகை மறந்து
போரும் வருத்தமும்,
பசப்பும் பொய்யான பருந்துகள் நடுவில்
நானும் நடிப்போடு.
நடிக்கும் வல்லமை
இல்லை என்றாலும் நடிக்கிறேன்.
முன்னால் நிற்பவர்
என்னைவிட நடிகனாக இருப்பதால்.

அம்மா சுகம்தானே...அப்பா எப்படி ?
இனிப்பானவர் என் அப்பா.
சீனியம்மா சீனிஐயா
என்று அழைத்ததாலோ என்னவோ
அளவில்லாச் சீனியாம் உடம்பில் இப்போ.
அப்பாவின் கையில்
நாளுக்கு முப்பதிற்கும் குறையாத சிகரெட்டுக்கள்.
ம்ம்ம்...சீனியாவது சர்க்கரையாவது அவருக்கு.
சொல்லப்போனால்"சும்மா போம்மா"என்பதோடு சரி.

அம்மா நேற்றைய கனவில் அம்மம்மா வந்தா.
இடுப்புச் சேலையில் ஒளித்து வைத்த மாம்பழத்தோடு
எங்கட மண் திண்ணையில இருந்தா.
என்னவோ தெரியவில்லை
இன்று நினைவு முழுதும் நீங்கள் இருவரும்தான்.

என்றும் இப்படி இருந்ததில்லை.
எந்நேரமும் நினைக்காவிட்டாலும்
காலில் கல் இடறும்போது
தலை வலிக்கும்போது
வேலை முடிந்து அசந்து வந்தபோது
அம்மா...என்று தலையணை தேடி
அப்பா...என்று போர்த்தியபோது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான் !!!

ஹேமா(சுவிஸ்)

28 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

எங்கள் நாட்டு மண் வாசனையோடு அழகான கவிதை. எங்கள் எண்ணங்களை அங்கே இழுத்துச் செல்கிறது ஹேமா .

அப்துல்மாலிக் said...

நானும் திரும்பிப்பார்கிறேன்

பெற்றோர்களின் பிரிவு ஒரு வகையான வலியே

தாங்கள் வரிகள் அதை உணர்த்தியது

நேசமித்ரன் said...

அருமை தொடருங்கள்..!

உங்களின் நடை அற்புதம் ..!

நட்புடன் ஜமால் said...

காலில் கல் இடறும்போது
தலை வலிக்கும்போது
வேலை முடிந்து அசந்து வந்தபோது
அம்மா...என்று தலையணை தேடி
அப்பா...என்று போர்த்தியபோது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான் !!!]]

சரியா சொன்னீங்க ஹேமா!

Arasi Raj said...

என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான் ////

அற்புதம்

Unknown said...

அழகான குடும்பம்...

அழியா தேன்கூடு.........!!



என் வாழ்த்துக்கள்....

என்றும் அன்போடு.......!!!

நிலவன் said...

இலங்கை பதிவர்களுக்கு தனிக் களம் அமைக்கும் நோக்கோடு,உருவாக்கப்பட்டுள்ள “நிலாமுற்றம்” சிறப்பு திரட்டியில் உங்கள் படைப்புக்களையும் இணைத்துள்ளோம்.

http://www.nilamuttram.com/

நட்புடன்
நிலவன்

kanagu said...

அழகான கவிதை ஹேமா :)

நசரேயன் said...

நல்லா இருக்கு

Admin said...

அன்பின் ஹேமா....
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html

Admin said...

பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

சத்ரியன் said...

//அம்மா...என்று தலையணை தேடி
அப்பா...என்று போர்த்தியபோது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான் !!!//

அவர்களின்றி நாம் எப்படி...? அதுதான் சோர்வான எப்போதும் அவர்களின் நினைவு நம்மோடு.

ஹேமா, உங்கள் பதிவுகள் மிகமிக கனமானவைகள்.படிக்கும் போதே வரிவரியாய் மனதின் அடியாழத்தில் அமிழ்ந்துக் கொள்கிறது.

சி.கருணாகரசு said...

வலியில் குளித்த வார்த்தையால் ஓர் கவிதை. சுடுகிறது நெஞ்சை.

தேவன் மாயம் said...

அம்மா நேற்றைய கனவில் அம்மம்மா வந்தா.
இடுப்புச் சேலையில் ஒளித்து வைத்த மாம்பழத்தோடு
எங்கட மண் திண்ணையில இருந்தா.
என்னவோ தெரியவில்லை
இன்று நினைவு முழுதும் நீங்கள் இருவரும்தான்.
///
மாம்பழம் அங்கே கிடைக்குதா!!

S.A. நவாஸுதீன் said...

காலில் கல் இடறும்போது
தலை வலிக்கும்போது
வேலை முடிந்து அசந்து வந்தபோது
அம்மா...என்று தலையணை தேடி
அப்பா...என்று போர்த்தியபோது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான்.

எனக்கு அவர்களின் அவசியம், அவர்களுக்கு என்னுடைய அவசியம் இருந்த சமயத்தில் அவர்களை இழந்த அபாக்கியசாலி நான். என்னை பெரிதும் பாதித்தது இந்த கவிதை ஹேமா.

Muniappan Pakkangal said...

Nalla petror kavithai Hema.

ஹேமா said...

எல்லோருமே அப்பா அம்மா ஞாபகங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று அத்தனை பின்னூட்டங்களுமே சொல்கிறது.நன்றி அன்பான உள்ளங்களுக்கு.

தேவா மாம்பழம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்.தேவா,ஊரில் மரத்தில் உடனடியாகப் பறித்துச் சுவைத்த ஞாபகத்தை மனதில் வைத்துக்
கொண்டு மாம்பழக் காலங்களில் மாம்பழம் என்று ஒன்று பெட்டியில் அடைபட்டு வரும்.ஒரு மாம்பழத்திற்கு கிட்டத்தட்ட
2,000 ரூபா கொடுத்து வாங்கிச் சாப்பிடுவோம்.

சேவியர் said...

சகோதரி.. அருமை. நல்ல கவிதைகள் சிலவற்றை தனிமடலில் தாருங்கள். பத்திரிகைகளில் போட முயற்சிக்கலாம் :)

sakthi said...

உங்களுக்கே உரிய கவித்தன்மையுடன் கூடிய அழகான கவிதை

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான கவிதை ஹேமா,
நாட்டிலிருந்து கூப்பிடும் தூரத்தில்தான்
இருக்கிறீர்கள்..பாரம்பரியாமனவற்றை
காப்பதில்,கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது
இங்கிருந்து போன உங்களும், எனதுமான
நம் தேசம்-முக்கியமாய்-தாய் தந்தை அன்பு!
வாழ்த்துக்கள் ஹேமா!

NILAMUKILAN said...

துக்கமான கணங்களில் அம்மா அப்பாவை பற்றி நினைக்காமல் இருந்ததில்லை. அவர்கள் இல்லாத வெறுமையை உங்கள் கவிதை மூலம் உணரமுடிகிறது என்னால்.

Anonymous said...

கண்ணீரை வரவழைக்கும் சக்தி எதுக்கு இருக்கிறதோ இல்லையோ உங்கள் கவிதையில் இருக்கிறது ஹேமா.

உங்கள் கவிதையை படிக்க வருபவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியே செல்வார்கள். அந்த அளவிற்கு உருக்கம் உங்கள் கவிதையில் உண்டு.

பலருக்கு மாற்றங்களையும் உங்கள் கவிதை அளித்து இருக்கும்.

அம்மா, அப்பா பற்றிய இந்த கவிதையும் நெஞ்சை உருக்குகிறது.


பெற்றேhர்களை பார்த்துக்கொள்வது நம்முடைய கடமை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. அவர்கள் சந்தோஷம் தான் நம்மை வாழ வைக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

சுட்டியை சுட்டுங்கள்
வாங்க விளையாடலாம்.. விருது கொடுக்கின்றோம்..(ஊக்கப்படுத்தும் வலைப்பதிவு விருது)

ஆதவா said...

வணக்கம் சகோதரி, நலமா?

அம்மா, அப்பா, அல்லது எந்த ரத்த உறவுகளும் ஏதாவது ஒரு சமயத்தில் இம்சிக்காமல் செல்வதில்லை..

மனம் நெடுகவும் ஊறிப்போயிருக்கும் அவர்களது அன்பு, வாழ்வுக்குப் பின்னரும் துளிர்த்துக் கொண்டேயிருக்கும் அமிர்தம் போன்றது.

அம்மா, அப்பாவுக்கு இது ஒரு நல்ல கடிதம்!!

அன்புடன்
ஆதவா

ஆதவா said...

குறிப்பாக இறுதி வரிகள் நன்றாக இருந்தன.

தவறுதலாக, நம்மை நாம், அல்லது நாம் வருந்தும் பொழுது, அம்மாவைத் தவிர, வேறெந்த கடவுளையும் அழைக்க முடிவதில்லை!!

ஹேமா said...

நன்றி சேவியர் அண்ணா.ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கீங்க.நீங்கள் சொன்னதை மனசில் எடுக்கிறேன்.நன்றி அண்ணா.

நன்றி சக்தி உங்களுக்கும்கூட.

ஹேமா said...

நன்றி பா.ராஜா.அப்பா அம்மா அன்பு...அற்புதமான ஒன்று.
இருக்கும்போதே அனுபவித்துவிடவேண்டும்.

நன்றி முகிலன்.தூரத்தே இருக்கும்போதுதான் அவர்கள் அருமை புரிகிறது.

நன்றி ஆனந்த்.அப்பா அம்மாவை மறந்தால் நாம் வாழ்வில் நல்லாவே இருக்கப்போவதில்லை.அவர்களின் மனநிறைவான் வாழ்த்துக்களும் எண்ணங்களும் என்றும் எமக்கு வேணும்.தூரத்தே இருந்தாலும் கண் காணும் தெய்வங்கள் அவர்கள்தான்.

ஆனந்த்,எதையாவது எழுத என்று நினைத்தால் கண் கலங்கித்தான் நானும் எழுதி முடிக்கிறேன்.மாற்று வழி தெரியவில்லை.

ஹேமா said...

வாங்க ஞானசேகரன்.ஆசிரியப் பணிக்குள்ளும் எங்களுக்கு விருது தரும் பணியையும் சேர்த்திருக்கிறீர்கள்.என்னையும் ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி உங்களூக்கு.

வாங்கோ...வாங்கோ ஆதவா.
சுகம்தானே ! எங்க போய்ட்டீங்க.நான் வந்து பார்த்தபோது நீங்க கமல் கவும் கலை யாருமே இல்லை.ரொம்ப கவலையாப் போச்சு.மீண்டும் சந்தித்ததில மகிழ்ச்சி.

Post a Comment