*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 28, 2009

வேண்டும் ஒரு சிற்பியும் ஒரு உளியும்...

கணங்கள் சுருங்கி
மனதை வறுத்தெடுக்கிறது உயிர்.
கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

அன்றும் கூட அப்படித்தான்
இழுத்தெடுக்கையில் ஒரு விரல்
அகப்படும் ஒரு முகம்
அது தெரிந்து அறிந்ததாய் கூட
முனகிக் கொண்டிருந்தது.
என்றாலும் பேய்கள் துரத்த
வேகமாய் ஓடிக்கொண்டே இருக்கிறது அவலம்.

தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி
பயத்திற்கே தைரியம் சொல்லிக்கொண்டு
தீவின் கரைகள் எங்கும்
நாட்டின் நரம்புகள் எங்கும்
மிருகங்களைச் சிநேகமாக்கியபடி
பசியும் ,தாகமும்,தூக்கமும் ,படிப்பும்
பாசமும் தூரமாகி...அந்நியமாகி
அம்மா...அண்ணா என்கிற ஏக்கங்களை
மூட்டை கட்டி விட்டு
மூச்சுவிடச் சுதந்திர உலகம் தேடி
இழந்த உயிர்களுக்கும் உறவுகளுக்கும் ஈடாய்
ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்ளலாம்
என்கிற நப்பாசையில்.

நாலு பக்கமும் கடல் சூழ
நடுவில் ஒரு சிரங்கை மண்ணுக்குள்
மண்ணுக்காகவே உயிர் பலிகள்.

கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.
குண்டுகளும் ஆயுதங்களும்
துளைத்து உடைக்கிற கற்களா தமிழன்!
இறுகிக் கிடக்க வேண்டியதாயிற்று.
எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!

ஹேமா(சுவிஸ்)

19 comments:

அப்துல்மாலிக் said...

//கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.
//

மனதை பிழிந்த வரிகள்.. சொல்ல வார்த்தையில்லை

அப்துல்மாலிக் said...

//தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி
பயத்திற்கே தைரியம் சொல்லிக்கொண்டு
///


படிக்க படிக்க முறுக்கேரும் வரிகள்

வேதனையின் பிடியில் இந்த உயிர்கள்... என்று தணியும் இந்த தாகம்....

அப்துல்மாலிக் said...

மனக்குமுறல் வரிகளில் வடித்திருக்கிறீர்கள்

இதைதான் நம்மால் செய்ய‌ முடியும்

புதியவன் said...

உதிரம் கொட்டும் வார்த்தை கொண்டு எழுதப் பட்ட வரிகள்...

ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறேன் ஹேமா...

//எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!//

உள்ளத்தை உளி கொண்டு துளைத்த வரிகள்...

S.A. நவாஸுதீன் said...

கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

என்ன சொல்ல எதை விட. மனது வலிக்கிறது ஹேமா. இரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள். விரக்தியால் வீணாகிப்போன உணர்ச்சிகள். பிணம்தின்னும் கழுகுகள் ஒருபக்கம், விட்டகுறை தொட்டகுறையாய் வியாக்கியானம் பேசும் பெருசுகள் ஒருபக்கம், வலியால் வழி மறந்த என் மக்கள். இறைவா என்று பிறக்கும் இவர்களுக்கு விடியல்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வேதனையும் வலியும் நிறைந்த கவிதை..:-(

ஆதவா said...

இதேமாதிரியான கவிதையொன்றை இன்னும் எளிய வார்த்தைகளில் நட்புடன் ஜமால் கொடுத்திருந்தார். ஒரு எண்ணத்தின் உதிர்வுதான் கவிதையாக இருக்கிறது. தமிழ் மக்களுக்கு உணர்வுகளும் கவிதையாக்கும் வல்லமை உண்டு என்பதை அறிவேன்,/

வலி நிறைந்த கவிதை என்றுமட்டும் சொல்லிவிட்டு சென்றிடலாகாது. வலி போக்க இனி கவிதைகளைத் தவிர வேறு வழியைத் தேட வேண்டும்...

உங்கள் ஆதங்கத்திற்கு நன்றியும், நெகிழ்வும்...

அன்புடன்
ஆதவா

sakthi said...

ணங்கள் சுருங்கி
மனதை வறுத்தெடுக்கிறது உயிர்.
கால் தாண்டும் பிணங்கள்
பார்த்த முகங்களா
என்று கூடக் கவனிக்க
சுரணையற்று
நேரமற்று
இரத்தச் சகதிக்குள்
புதைத்த கால்களை
இழுத்தெடுத்துக் கொண்டு.

ayyo ninaithu parkave valikindrathu

ஆ.சுதா said...

கவிதை வலி கொள்ள வைக்கின்றது,
ஆதவாவின் கருத்தை நானும் வலியுருத்துகிறேன்.

மேவி... said...

வலி நிறைந்த கவிதை

கீழை ராஸா said...

//தீபாவளிக்கு வெடி கொளுத்தினால் கூட
பயந்த எம் சரீரம்,
பென்னாம் பெரிய குண்டுகளையும்
வெடிச் சத்தங்களையும் சுமந்தபடி//

வேதனை… வேதனை

உமா said...

//அம்மா...அண்ணா என்கிற ஏக்கங்களை
மூட்டை கட்டி விட்டு
மூச்சுவிடச் சுதந்திர உலகம் தேடி//

நினைக்கையிலேயே துடிக்கிறது நெஞ்சம்.
புதியவன் அவர்கள் சொன்னது போல் //ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் கிடைக்காமல் தேடிக் கொண்டிருக்கிறேன் ஹேமா...// உண்மைதான்.

உங்கள் வலைப்பதிவை இன்னும் சிலரும் பார்க்க வேண்டும், நல்ல எண்ணம் கொண்டோரின் பிரார்த்தனைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு மாற்றத்தைக்கொண்டுவராதா என்ற ஏக்கத்தோடு, உங்களுக்கு பட்டாம் பூச்சி விருது கொடுப்பதன் மூலம் அது நிறைவேரலாம் என்பதால் தங்கள் வலைக்கு தொடுப்பும் கொடுத்துள்ளேன்.பெருந்தன்மையோடு ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
நட்புடன் உமா.

சொல்லரசன் said...

//கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.//

என்ன செய்ய? தமிழனாக பிறந்துவிட்டோம்.

Muniappan Pakkangal said...

Sirpiyum uliyum kandippaha undu.Ithu kaalathin kattaayam.Plz visit my blog for Vazhakkolintha pazhakkangal now online.

KADUVETTI said...

:(((((((((((

தேவன் மாயம் said...

கேட்டது கிடைக்கவில்லை.
கிடைப்பதோ திருப்தியில்லை.
குண்டுகளும் ஆயுதங்களும்
துளைத்து உடைக்கிற கற்களா தமிழன்!
இறுகிக் கிடக்க வேண்டியதாயிற்று.
எங்களைச் செதுக்க ஏன் ஆயுதங்கள்.
கை தேர்ந்த ஒரு சிற்பியும்
கூரிய ஒரு உளியும் போதாதா !!!
///

அய்யோ! உணர்வுகளைக் கொட்டுவதில் உங்களுக்கு நிகர் இல்லை!!

NILAMUKILAN said...

கூர்மையான பதிவு. ஈழ தமிழனின் அவல நிலையை பொட்டில் அறைந்தார்ப்போல் சொல்கிறது கவிதை. வாழ்த்துக்கள். பல நாட்கள் கழித்து உங்கள் சினிமா தொடரின் கேள்விகளையும் என் பதில்களையும் பதிந்திருக்கிறேன். நேரம் இருந்தால் வந்து பார்க்கவும்.

Anonymous said...

ரொம்ப நாளா பதிவு பக்கம் ஆளே காணும்?

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க கவிதை.

Post a Comment