*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, September 22, 2008

உறவுகள்...


நீ....
தந்த ரணங்களை மாற்றாமலேயே
இன்றைய ரணங்களோடு
புன்னகைத்தபடி
என் பயணம்.

சில ரணங்கள்
ஞாயப்படுத்தத் தேவை இல்லாதவை.
சில ரணங்கள்
ஞாயப்படுத்த முடியாதவை.

உறவுகள் மறக்கப்படுபவை அல்ல.
சிலசமயங்களில்
மறுக்கப்படுபவை மட்டுமே.

கண்ணாடி மனமதில்
நீ...எறிந்த கல்
என் கைகளுக்குள் வலியோடு.

மலையில் இருந்துகொண்டு
கல் உடைப்பதாய் நீ புலம்ப
இல்லை...இல்லை
மலையையே உடைப்பதாய்
நான் வாதாட
வேண்டாமடி விடு.

எல்லோருமே
ஞாபகங்களோடுதான்
உண்டு...உறங்கி
ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பூமியின் வேகத்தோடு
விரைவாகச் சுற்றினாலும்
சற்று நிறுத்தி...
உன்னைத் திரும்பிப் பார்க்காத நாள்
எனக்கில்லை.

மறக்காது பெருமரம்
தன் கிளைகளை இலைகளை பூக்களை.
என்றாலும்...
வேண்டாமடி விடு.

தூசு தட்டித்
திரும்பவும் கிளற விரும்பாத
பழைய எதையும்
மறக்க முடியாத மனதோடு நான்.

மகரந்தச் சேர்க்கையால்
இனம் மாறும் பூக்களின் நிறம் போல்
சகோதர பாசமும்
மாறச் சந்தர்ப்பங்கள்
ஒரு பருவத்தின் பின்.

யதார்த்தத்தின் இயல்போடு
வாழ்வை....
வலம் வரப் பழகிக் கொள்வோம்.

திசைகள் வேறானாலும்
வீசும் காற்றும்
உறவும் ஒன்றுதானே!!!

ஹேமா(சுவிஸ்)

23 comments:

Anonymous said...

//பூமியின் வேகத்தோடு
விரைவாகச் சுற்றினாலும்,
சற்று நிறுத்தி...
உன்னைத் திரும்பிப் பார்க்காத நாள்
எனக்கில்லை.
//
Mikka mikka arumai.
What a wonderful line........!
Heema,
ungal varikal enkalathu ranathirku marunthittu selkirathu. Unkal sevai thodarattum.Konjam nalaka valaiyathiku varamaikku varunthukiren

thamizhparavai said...

சகோதரிக்கு....
என்ன நான்கு நாட்களாய்க் காணவில்லை...? கவலையோ, களிப்போ களைப்பென்பது கவிமனத்திறகல்ல என்பது எனக்குத் தெரியும்...
சற்றுத் தள்ளி வந்தாலும் கவிதை,சற்று முன் தள்ளியே நிற்கிறது (தங்களின் சமீபத்திய கவிதைகளுள்)...
எல்லா வரிகளுமே அருமை ஹேமா....
[உறவுகளால் மிகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனத் தெரிகிறது அல்லது உறவுகளை மிக அதிகமாக நம்பி இருந்திருப்பீரகள் எனத் தெரிகிறது]

//திசைகள் வேறானாலும்
வீசும் காற்றும்
உறவும் ஒன்றுதானே!!! //
ச‌ரிதான்.... எதிர்பார்க்கையில் எதிர்த்திசையிலும், உத‌றித்த‌ள்ளுகையில் உட‌ன் வ‌ருவ‌திலும் வீசும் காற்றும்,உற‌வும் ஒன்றுதான்.

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா,
தூரமிருந்தாலும் மனதைச் சரியாக எடை போட்டிருக்கிறீர்கள்.

கொஞ்சம் வேலைப்பளு.
"ஈழம்"கவிதையின் உணர்வு சிலருக்குச் சங்கதி சொல்லிச் செல்லத் தங்கிச் சொல்லட்டும் என்பதற்காகவும்,

அடுத்து அண்ணா,வருகின்ற சனிக்கிழமையிலிருந்து மூன்று வாரம் நான் விடுமுறையில் அப்பா அம்மாவை இரண்டு வருடங்களின்பின்...என் நாட்டுச் சூழ்நிலை காரணமாக ஈழத்தில இல்லாமல் சிங்கப்பூரில் சந்திக்கப் போகிறேன்.அண்ணாவின் மறைவு இன்னும் நிழலாடிக் கொண்டிருந்தாலும்,அப்பாவின் அணைப்பும் அம்மாவின் மடியும் மூன்று வாரம் கிடைக்கப்போகுதே என்கிற சந்தோஷத்தில் இருக்கிறேன்.

மூன்று வாரங்களுக்கு என் இணைய நண்பர்கள்....குழந்தைநிலா...?யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஹேமா said...

நன்றி நிர்மலகுமார்.அடிக்கடி வாருங்கள்.யார்தான் அமைதியாக இருக்கிறோம்.ஏதோ ஒரு வேதனை மனதை நெருடியபடிதானே!

thamizhparavai said...

மகிழ்ச்சியான செய்தி சகோதரி... சென்று வாருங்கள்.எனது நலம் விசாரித்தலை தங்கள் பெற்றோரிடம் தவறாது கூறவும். ஈழத்தில் மகிழ்வோடு சந்திக்கும் நாளை எதிர்பார்த்திருப்போம் ஆவலோடு...
[அண்ணாவிற்கு என்னாயிற்று...? கேட்கத் தவிக்கையில், கேட்டு மேலும் சோகத்தைக் கிளறவேண்டாமென எண்ணிக் கேட்கவில்லை எனினும்...]

மூன்று வாரங்கள்... பொறுத்திருக்கிறோம்...(சனிக்கிழமைக்குள் எப்படியும் நான்கு நினைவுச்சின்னங்களை(கவிதைகளை) விட்டுச்செல்வீர்கள் அல்லவா..?)
குழந்தை நிலா சற்று இளைப்பாறிக்கொள்ளட்டும் பெற்றோரோடு...

ஹேமா said...

தமிழ்ப்பறவை அண்ணா இன்னும் தூங்கலியா?

செப் 11ம் திகதி என் பதிவு நீங்கள் பார்க்கவில்லைப் போலும்.

நன்றி அண்ணா,நிச்சயம் காண்பிப்பேன் உங்கள் வாழ்துக்களை என் பெற்றோருக்கு.

முடிந்தால் கவிதைகள் பதிவிடுகிறேன்.
இல்லையேல் குழந்தைநிலாவுக்கும் ஓய்வுதான்.

Unknown said...

கவிதை அருமை ஹேமா,

//மறக்காது பெருமரம்
தன் கிளைகளை இலைகளை பூக்களை
என்றாலும்... //

பெருமரமும், சுற்றி வளரும் கொடிகளும் என்றதுமே டிபி விஜேதுங்க நினைவுக்கு வந்து சென்றார்.

தமிழன் said...

மகிழ்ச்சி தங்கள் பெற்றோரை காண செல்லும் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.திலீபன் அவர்கள் நினைவுநாளில் தங்களின் உருக்கமான கவிதையை தங்களிடம் எதிர்பார்கிறேன். இதையும் அரசியல் ஆக பார்க்காமல் தியாக சுடர் அவர்களின் புகழ் பரப்புங்கள்.

ஹேமா said...

வாங்க ஈழவன்.காக்காக்கு கனவிலும் .....என்கிற மாதிரி நான் எதையோ எழுத நீங்கள் அதை அரசியல் ஆக்கிட்டிங்களே!(ம்ம்...சும்மா)

ஹேமா said...

திலீபன் நன்றி.கவிதைக்குக் கருத்து இல்லையா?பிரபா சுகம்தானே.
நிச்சயமாக திலீபனுக்காய் கவிதை இணைப்பேன்.

தமிழன் said...

கவிதைக்கு கருத்து சொல்ல வந்து தங்கள் குடும்பத்தை பார்க்க செல்வதை அறிந்து அதை மட்டும் மறுமொழியில் கூறிவிட்டேன். உங்கள் கவிதை எல்லாம் அருமை எனக்கு புரியவில்லை என்றால் மறுமொழி கண்டிப்பாக கூற மாட்டேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்கு உள்ளது ஹேமா... தொடருங்கள்...

ஹேமா said...

என்ன திலீபன் கவிதை புரியவில்லை என்றுவிட்டீர்களே!

ஹேமா said...

வாங்க விக்கி.கருத்தை நாலு சொல்லில் முடித்துவிட்டீர்களே!

Anonymous said...

நீங்கள் உங்கள் பெற்றேhரை பார்க்கும் அந்த இனிய தருணம் சந்தோஷமாக அமைய வாழ்த்துகிறேன் ஹேமா. அந்த சந்தோஷமான நிகழ்வுகளை கவிதையாகி தருவீர்கள் என்று நம்புகிறேன். சென்று வாருங்கள்.

தமிழன் said...

தவறு உங்கள் கவிதை எனக்கு புரியவில்லை என்றால் கண்டிப்பாக அன்று மறுமொழி கூற மாட்டேன் என்று சொல்ல வந்தேன்.

அப்புச்சி said...

தங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.விடுமுறையை சந்தோசமாக கழியுங்கள்


விம்பம்

ஹேமா said...

ஆனந்த் நன்றி.
கண்டிப்பாய் கவிதை வரும்.

ஹேமா said...

வாங்க...வணக்கம் அப்புச்சி.எனக்கு நீங்க உண்மையா போய்ட்டு வாங்கோ எண்டு சொல்ற மாதிரி தெரியேல்லையே.என்னமோ பகிடி பண்ற மாதிரி இருக்கே!

thamizhparavai said...

சகோதரியின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்....

காரூரன் said...

\*\உறவுகள் மறக்கப்படுபவை அல்ல.
சிலசமயங்களில்
மறுக்கப்படுபவை மட்டுமே \\*

தேவைகளுக்குத்தான் உறவுகள் என்றில்லாமல்,
உறவுகளும் தேவை என்றால் தான் உறவு நிலைக்கும்.

எனது கிறுக்கலிலிருந்து....

http://akathy.blogspot.com/2007/10/blog-post_13.html

ஹேமா said...

காரூரன் உறவுகள் என்றுமே தேவை.அதை ஒரு பக்கம் மட்டும் நினைத்தால் போதாதே.தேவைக்கு மட்டும்தான் உறவுகள் என்றால் அப்படியான உறவுகள் தேவையே இல்லையே.அதைவிட ஒரு நாய்க்குட்டி போதும் உறவு சொல்ல.

thamizhparavai said...

well said hema...

Post a Comment