*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, February 14, 2013

கருத்த இரவிலொரு காதல் சிதறல்...




மழைபிடித்திருந்தாலும் குடை பிடித்து நடக்கையில் தவறுதலாய்த் தொட்டு விழும் தூறல் துளிகளை ஏதோவொரு திரவமெனத் துவாலையால் துடைத்து எடுத்துவிடுவதுபோல சுலபமாய் முடிந்துவிடுவன அல்ல அவன் நினைவுகள்.

ஒரு மழைக்காலத்தில் என் வீட்டில் கூரை பிய்த்தெறிந்த காற்றின் ஈரலிப்போடு புகுந்த அவன் தேகத்தின் தத்துவங்களை ரசித்திருந்தேன்.வாழ்வு ஒரு அணுவென்றால் அதன் எல்லாத் துகள்களையும் உணர்ந்துவைத்திருந்த அமைதி அந்த முகத்தில்.

நேற்றைய போதை தீர இன்றும் கொஞ்சம் போதை தேவைப்படுவதுபோல இப்போதெல்லாம் தினம் தினம் தேவைப்படுகிறது போதையான அவன் நினைவுகளைத் தூங்க வைக்கக் கொஞ்சம் சிவப்புத் திராட்சைரசம்.போதையேறினால் தூக்கம் கண்ணைக் கட்டுமென்பார்கள்.எனக்கோ அப்போதுதான் அவன் மடிதேடித் தூக்கம் தொலைந்து கலைகிறது.


நீ....சொல்லாத
ஒற்றைச் சொல்லுக்குள்
பெருஞ்சுழியென
விழுந்தும்
அமிழ்ந்தும் மிதந்துமாய்
குமிழிகள்
விடத்தொடங்குகிறதென்
கற்பனை
ஏதாவது
சொல்லியிருப்பாயோ
என்னோடு பேசியிருந்தால்
இன்று......நீ !



செல்லா......இப்போதெல்லாம் முன்னைவிட அதிகம் நினைக்கிறேன் உன்னை.அதிகமான கவிதைகளுக்குள் உன் ஞாபகம் ஒரு சொட்டாவது சொட்டி கவிதையை அழகுபடுத்தியிருக்கும் நம் காதல்.....இல்லையில்லை உன் காதல்.காதல் ஒரு பொதுமறையென்பார்கள்.உன்னை நினைத்து நான் எழுதத் தமக்கானதாய்ப் பலர் பொருத்தியும் கொள்கிறார்கள்.உன் பெயரைப் பலமாதிரியும் திரித்தெழுதப் பழகிவிட்டிருக்கிறேன் யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி நான்.ஆனால் எழுதும்போது உயிராய் நீ என் எண்ணம் இறுக்கி வலித்து கண்வழி கசிவதும் உன் குரலைக் காற்றுப்பிரித்து நான் தேடுவதும்.......யாருக்குத் தெரியும்.உனக்காவது.....சொல்லாமல் போன உனக்கு உணர்வின் அவஸ்தை புரியுமா என்ன.உணர்வுகளை தேசக்காட்டில் பரப்பிவிட்டல்லவா என்னைத் தொலைத்திருந்தாய்.மன்னிப்பேயில்லா பாவக்காரன் நீ...!

பறத்தலும் இருத்தலும் எனக்கேனோ இயல்பாயில்லை.இயல்பாயிருந்தாலும் உள்நிற்கும் நீ என் எழுத்துவழி என் இயல்பைப் பறித்தபடி.நீ என்கிற வட்ட வடிவத்துள் அடைத்துப்போய்விட்டாய் என் சந்தோஷங்களை.பலதரப்பட்ட சமூகச் சதுரத்துள் நான் திணிக்கப்பட்டாலும் உனக்கான வட்டத்துள் வாழ்வதே பிடித்திருக்கிறது எனக்கு.



நீ....
அப்படியே இருந்துவிடு
முறைத்த முகம்தான்
உனக்கழகு
கலைக்கும் நான்
கிராதகியாகவும்
தெரியலாம் உனக்கு.
 

இல்லை....
இல்லாமல் இருப்பதுதானே
அதன் நிறைவு
சபிக்கப்பட்ட
சில விஷயங்கள்
அப்படியே இருப்பதுதான்
சௌகரியம்
அப்படியே இருந்துவிடு
நீ....!


போர்க்காலங்களில் அதிகமாகச் சந்திப்பதுகூட முடிவதில்லை.4 - 5 மாதத்திற்குப்பிறகு நீ வந்திருப்பதாக அறிந்து கோழி தூங்கும் இரவு எமக்காய் இன்னும் கருகியிருக்க வந்தேன்.அதுவும் ஒரு காதல் மாதம் முடியும் தருணம்தான்.மணல் குவித்த கடைச்சல் பட்டடை முற்றத்திற்கு.இரவு 11 ஐத் தாண்டியிருந்தது.உன்னைச் சுமந்து பறக்கும் வாகனம் சாய்த்து வைத்திருந்த அடையாளத்தில் உன்னை நெருங்கினேன்.நீயோ கையைத் தலையணையாக்கிக் பயண அலுப்பில் கொஞ்சம் அசந்துமிருந்தாய்.எழுப்ப மனமில்லாமல் உன் தலையை என் மடி மீது அணைத்துக் கிடத்த.....வந்துவிட்டதைத் தெரிந்துகொண்டே என்னை இறுக்கிவிட்டு மீண்டும் தளர்த்தித் தொடர்ந்தும் உறங்கிவிட்டிருந்தாய்.

15 நிமிடத்தின் பின்.....

ஏனப்பா அலுப்பாயிருந்தால் வந்திருக்கவேணாமே என்றேன்....

வராவிட்டால் இந்த தலை கோதும் சொர்க்கமும் இந்த மடிமீதான நித்திரையும் கிடைச்சிருக்குமோ.அதுதானே என்னை இங்கு இழுத்து வருகிறதென்றாய்.

தொடர்ந்து.....இப்பிடித்தானடி சொல்லுவாய்.வராவிட்டாலும் காதலர் தினத்துக்குத்தான் வரவுமில்ல தரவுமில்ல.பிறகெண்டாலும் வந்திருக்கலாமே எண்டும் கோவிச்சுக்கொள்ளுவாய்.எனக்குத் தெரியாதோ உன்ர குரங்குக் குணத்தை......

அப்ப....அப்ப நான் குரங்கோ.எனக்காகத்தான் வந்தனீங்களோ.உங்களுக்காக இல்ல......எனக்காக மட்டுமெண்டா இனி வராதேங்கோ.....

என்ன சொன்னாலும் முட்டையில என்னமோ பிடுங்கியெடுக்கிறமாதிரித்தான் நீ.....உன்னை.....உன்னை.....

என்ன என்ன....இப்ப என்ன....கொஞ்சம் கையைக் காலை அந்தந்த இடத்தில ஒழுங்கா வச்சிருங்கோ சொல்லிப்போட்டன்.....

சரி நேரமாகுது.சாப்பிட்டும் இருக்கமாட்டீங்கள் என்றபடி நான் கொண்டு வந்திருந்த உணவைக் குழைத்துக் கொடுக்க குழந்தைபோல ஆ...... என்கிறாய் ஊட்டிவிடும்படி.ஊட்டும்போது வேண்டுமென்றே கையில் மெதுவாகப் பல் படக் கடித்து இருட்டிலும் கொஞ்சிச் சிரிக்கிறாய்.

அச்சூஊஊஊஊஊஊஊஊஊஊ...........சாப்பாடு தந்தால் பேசாமல் சாப்பிடுங்கோ பாப்பம்.அதுக்குள்ள ஒரு சேட்டை உங்களுக்கு.ஆளைப்பார் ....என்கிறேன் நான்.

இந்தக் கரிசனத்துக்காவும் கையைக் கடிக்கவும்தானே இவ்வளவு நேரம் இந்த மணல்ல தவம் கிடந்தன்.வரம் தரும் தேவதையடி நீ என்கிறாய் நீ.

நாளைக்கே போறீங்களோ என்கிறேன்....

ம்ம்ம் என்கிறாய்.....

ம்ம்ம்............

எதுக்கு இந்த ம்ம்ம்ம்ம்.......

சரி அப்ப வெளிக்கிடுங்கோ.நல்லா நேரமாச்சு.கொஞ்சம் அமைதியா வீட்ல போய்ப் படுங்கோ என்கிறேன்.

போகலாம் பொறு என்றபடி அணைத்து என் தலைகோதி நெற்றியில் ஒரு முத்தமும் இடுகிறாய்......ஒரு கவிதையடி நீயெனக்கு என்றபடி.

அடிக்கடி என் பிறவிப் பயனை நினவுகொள்ள வைத்தாய் உன் அன்பால்.உன் தோள் சாய்ந்தபடியே புளியமரத்தடிச் சந்திவரை வருகிறேன் உன்னோடு.என் வலது கையில் பத்து விரல்கள் இருந்து அப்போது.

குழந்தைபோல எனைச்சுற்றியிறுக்கி அழாமல் இருக்கவேணும்.நேரம் கிடைச்சால் ஓடி வந்திடுவன் என்ர செல்லத்தைப் பார்க்க........ என்று சொன்னாலும் குரலில் தளர்வு விளங்கியது எனக்கு.இருவருமே அழுதுவிட்டோம் ஒருவருக்கொருவர் தெரியாமல்.

அணைத்தபடி சமைந்திருக்க பூவரசு உரசி எம்மை நேரம் பார்க்க வைத்தது.

அமர்ந்திருந்த மணல்மேடுகூட எமைப்பார்த்து ஏங்க எம் காதலை அம்மணலுக்குள் அப்போதைக்குப் புதைத்துவிட்டு பிரிந்துபோனோம்.

அதன் பிறகு....



சூன்யத்துள் வாழ்வதாகப் பரிகசிக்கிறார்கள் சிலர் என்னை.இல்லை......காலம் இப்போதும் என்னை எடுத்துச் சென்றுகொண்டுதானிருக்கிறது என்னுள் படர்ந்திருந்த உனக்கான தீ அணையாமல்.பற்றிக்கொண்ட சுடர்கள் எங்குமிருக்கிறது.எங்காவது சில உருவங்களின் திருப்பத்தில் உருமாற்றங்களோடு சந்தித்துக்கொள்கிறேன்.என் சுவாசம் தொலைத்த உன்னை எப்போதாவது காணாமலா இறந்துவிடுவேன்.நீ வளர்த்த தேசத்துக் காற்றில் கலந்த காவலன் தானே நீ....கண்டு கொள்வேன் உன்னை என் காவலனாய் காதலனாய்...........!!!


இன்னொரு நிழல்
உன் போல
இந்தா பிடி...
பிடியென
உன்னோடு
ஒளித்தோடி
பார்வைகள் மறைத்து
தேடுவதும்
தொலைப்பதுமே
வாழ்வாகிறது எனக்கு
கண்
மாற்றிக் கட்டுகிறாய் நீ
வாழ்வின்
அத்தனை கனவுகளையும்
வலிகளையும்
கட்டிக்கொள்கிறேன்
உனக்காக நான் !


நட்புக்கள் அனைவருக்கும் என் இனிய அன்பான காதலர் தின வாழ்த்துகள் !

ஹேமா(சுவிஸ்)

11 comments:

Seeni said...

ஏக்கம்!
ஆசை!

பிரிவு!
தயக்கம்!

சபலம்!!
செள்ளகொபம்!

அப்பப்பா...!

என்ன சொல்லசொல்ரீங்க..!

எழுத்து துவைத்து விட்டது-
என்னை....

ஆத்மா said...

ஹையோ காதலர் தினத்தில் இப்படியொரு பதிவா என்று என்னத் தோன்றுகிறது...
விடுதலையைத் தேடி விடுதலையோடு ஒன்றித்து பின் காத்திருப்பவளுக்காய் விடுதலையெடுத்து சேவல் கூவும் பொழுதில் காதலர் மாநாடு நடத்தி.....

அந்த நினைவுகளை ஒருபோதும் மறக்கமுடியாமல் இருக்கும்

இளமதி said...

சபிக்கப்பட்ட
சில விஷயங்கள்
அப்படியே இருப்பதுதான்
சௌகரியம்.....

நூறுவீதம் உண்மையானது... வலிமிகுந்தது...

வாழ்த்துக்கள் தோழி!

மே. இசக்கிமுத்து said...

வாசித்து கொண்டே வந்தேன், என்ன அதற்குள் கடைசி வரிக்கு வந்து விட்டேனா???

மிகவும் உணர்வுபூர்வமான அருமையான பதிவு ஹேமா...

ஸ்ரீராம். said...

காதலர் தினத்துக்கு இவ்வளவு ஸ்பெஷல் கவிதையா? அட!

மாதேவி said...

காதல் சிதறலில் அமிழ்ந்து மனம்வலித்து நிற்கின்றோம்.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உணர்வின் வெளிப்பாடு! அழகான பகிர்வு! நன்றி!

Unknown said...

கவிதையைத் படித்தேன்! மனதில் ஏதோ ஒரு சுமை! இறக்கிட இயலாது உம்மால்!மறக்க இயலாது எம்மால்!

Anonymous said...

காதலர் தின வாழ்த்துகள் ஹேமா...

பிலஹரி:) ) அதிரா said...

கவிதையா?, மடலா? உணர்வா? கற்பனையா? புரியவில்லை, ஆனால் நெஞ்சை இறுக்கிவிட்டது ஹேமா....

Anonymous said...

வணக்கம்
ஹேமா (அக்கா)
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையா உள்ளது பதிவு
பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_24.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment