*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, May 31, 2014

அவன்...அவன்தான்...

அவன் வாசனை வருகிறது
வந்திருக்கிறான் போலும் என் தேவன் இன்று
நேற்றே கனவில் புள்ளி வைத்தவன்....

அன்றுபோலவே
காய்த்த கைகளில்
காயாத பூவரசம்பூ கொண்டு வந்திருப்பான்...

கூரைபிய்த்திறங்கி
ஒற்றை இறகில் தன்னை அறிவித்தவன்
பிரபஞ்சம் தாண்டிய குருதிக்காடுகளில் வாழ்பவன்
தொலைத்தேன்....தொலைந்தேன்
மிக மிகத் தொலைவில்
இப்போ தலைப்பிரசவம்
அவனின் பெயரால் முத்தமிட வந்திருக்கிறான்
முத்தப்பிசாசவன்...

என்னோடு வாழ்ந்த
காட்டு வாழ்க்கையின் நிமிஷங்களைக் குறுக்கியவன்
ஒரு சிறகு தந்தவன்
நொண்டியா(க்)கி மறுசிறகோடு பறந்தவன்...

வானொலிப்பூச்சியவன்
ஒற்றைச் சிரிப்பில் உலகோடு கதைத்தவன்
இதழில் இளையராஜா பாடல் சொன்னவன்
அர்த்த ராத்திரியில்
சாந்தனின் பாடல்களைக் கேளடியென உறுக்கியவன்...

குண்டுகளையும் கோள்களையும் சேமித்த
சமகாலத்தில்
மின்னியலுக்குள் மேகம் புதைத்தவன்...

இன்னும் வாசனை அவன் புகைந்த மனதில்
தேடிக்கிடைத்த பொருளவன்
இன்னும் தொலையாமல்...

தேவதைகளை ஆள்பவன்
இந்தத் தேவதையை
கண்ணி வைத்தே கருக்கொண்டவன்...

ஓ....வேர்க்கிறதவனுக்கு
விசிறிவிடுகிறேன் அவன் வாசனைக்கு...

இன்னும் ஆள்கிறான் காதல் சாம்ராஜ்யத்தில்
வானுக்கும் மேகத்துக்குமிடையில் நம் கோட்டை
வாழ்த்துங்கள் மனமிருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 29, 2014

ஒரு அரூபியும் ஒரு மீனும்...


புசுபுசு பூனைகளைத்தான்
நேசித்திருந்தேன்
ஒருபொழுதில்...

நெய்யும் கடலையும்
தின்று கொழுத்த பூனைகள்
என்னைத் தின்றபொழுதில்
முக்காடிட்டு
முள்வேலிகளே கிரீடங்களாய்
வடிவான அரூபியானேன்.

அறிவிக்கவிரும்பவில்லை
சமூகத்திடம் என்னை.

வெறுப்பின் இதயம் காடழித்தது
அன்போ அணைத்தணைத்து
பிரபஞ்சம் அளந்தது
ஆனாலும் போதவில்லை
கண்மூடிப் புத்தன்களுக்கு
அரூபிகளின் அலறல்.

வால் சுழற்றும் சிற்றசைவில்
உயிருள்ளதாய் நடிக்கும்
நெகிளிச் செடியென
இல்லா உயிரை
இழுத்து
மூச்சிட்டு வாழும்
தங்க நிற மீன் நான்.

சொண்டில் நிறமப்பி
தொட்டிக்குள்
உயிர் வாயுவை
விழுங்குவதுபோல
பசப்பி
குமிழிக்கனவோடு இறப்பேன்
மஞ்சள் நிறத்தோலுடன்.

தூக்கிப்போடுவார்கள்
பிளந்த போதிமர
வேர்களுகளுக்குள்
ஆயுதம் களைந்து
அப்போதும் என் முகம்
அரூபமாய்த்தான்
முள்முடியுடன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 26, 2014

அச்சில்...

தினக்குரலில்...17.06.2012
தினத்தந்தியில்...20.01.2013
கல்கி யில்...24.05.2014

யாழ் ’உதயன்’ சஞ்சிகையில்...


கல்கி தீபாவளி மலர் 2014...

Friday, May 23, 2014

சுவாமி...


வண்தமிழ் விறலோன்
கொற்றத்து மாறா
புண்கொண்ட மனதோள்
பறைதட்டி வேண்டுவது....

பூந்தண் பொறைப்புகழ் வேண்டா
நண்ணார் வானுரை வேண்டா
விண்கடல் விடர்ச்சிலை வேண்டா
வெண்குடை சாமரம் வேண்டா

உண்ணத் தமிழ் தா
பண்ணொடு பாக்கள் தா
கொண்ட நன்கல உலகு தா
நாண்டு சாவும் நேர்மை தா
கண்புகும் ரௌத்திரம் தா
விண்ணேகும் வரமும் தா

நீலமேனி வாலிழை பாகத்து
பனிமுல்லை மலரோனே
அருள் தா எனக்கு
நின் நிழற்கீழ் திருவடி நீழலில்
இருதாள் அமர!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 22, 2014

குட்டிப் ‘பூ’...

விலகி வழிவிடுங்கள்
வேலைகளுண்டு எனக்கும்.

பூக்கள் வளர்க்கிறேன்...

வண்ணம் தீட்ட
கடனாய் தந்தான்
இறைவன்
இரண்டு பென்சில்.

சீவிக்குறைத்த
பென்சிலுக்காய் கோபித்து
சண்டையிட்டு
பின்னிருந்து கண்கட்டி
சொல்லு நான் யாரெனக் கேட்கும்
சூரியனுக்கும்
சந்திரனுக்கும்
முத்தம் கொடுத்து...

பூக்கள் எடுக்கலாம்
முத்தம் போட்டு
எச்சில் உண்டியலுக்குள்
முட்டும் பூக்களின்
வண்ணம் ஒட்டினால்
பொறுப்பும் நானில்லை.

வேகமோடும் தெருச்சூரியனாய்
இறப்பும் பிறப்பும் ஒன்றாய்
கையேந்தும் கைகளுக்கு
சில்லறை எறியக்கூட
நேரமற்ற உங்களுக்கு
நானும் பூக்களும் ....??? !!!

Photo Barbara Graf-Weinland's Son from Germeny

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 20, 2014

பூக்களைக் கிள்ளாதீர்...


நிலைப்பாட்டைக் குறிக்கும்
பிரார்த்தனைகள்
நிறைவாகவே என்னிடம்.

அன்பைத் தவிர
இல்லையென்று ஏதுமில்லை
கையேந்தலும்
இறைஞ்சுதலும்
கெஞ்சுதலும் 
நினைவில்லை இதுவரை.

எத்தனை தரம்தான்
துரத்தமுடிகிறது
அவர்களால்
வாலை ஒட்ட
வெட்டிவிடுங்களேன் எனக்கு
நாயென நான் ஆட்டாமலிருக்க.

இயற்கை அசைவில்
அன்பின் அழைப்பு
கை கோர்த்தலில்
இளஞ்சூட்டின் பரவசம்
நாடியோடும் குருதியில்
குமிழுடைத்த நர்த்தனங்கள்
மார்தழுவலில் தேவரகசியம்.

மரத்தைக் காதலித்து
செடிகளுக்கு நீரூற்ற
சிலிர்க்கிறது பூக்களாய்.
மென்னீரத்தின்
நிர்ச்சலனத்தோடு.

கொய்தழிக்காமல்
வாடமுன்
காண்பிக்கிறேன்
என்னை நேசிப்பவர்கள்
யாராவது இருந்தால்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 18, 2014

மே 18...


இப்படியொரு வானம்
பார்த்திருக்கிறீர்களா
என் பூமியின் வானம்
இப்படித்தான்.

என் இனத்தின் இரத்தம்
நம் காணிகள் தெருக்கள்
ஒழுங்கைகளெங்கும்
ஓடி உறைந்து
மிச்சத்தை உறிஞ்சியிழுத்த வானம்
அன்று.....
இப்படித்தான் சிவந்து கிடந்தது.

'யாழ் உங்களை வரவேற்கிறது'
சுடுகாட்டின் திசைகாட்டி
வடக்கையே காட்டி நின்றதப்போ.

ஒட்டுமொத்த உலகமே வஞ்சித்து
தமிழனைக் கஞ்சியாக்கி
நந்திக்கடலில்
கொதிக்க விட்ட நாளிது
மே 18.....

வருடம் ஐந்தாகியும்
அழியாமல் கண் நிறையும் நாளிது
பொய்யுரைத்து வன்மம் சூழ் வானரங்கள்
அழித்த ஈழம் செங்குருதியாக
இயற்கையே சொல் பிறழ்ந்து
எம் வாழ்வே குருதியிழந்து
இரக்கமற்ற இறைவனும்
சிறு குஞ்சுகள் குருமான்கள் என்ற பேதமற்று
அறுத்துக்கொண்டிருந்தான் உணர்விருக்க.

ஏதுமற்றவரானோம்
பனை தென்னைகளின் மூழறுத்த பிசாசுகள்
மிஞ்சிய காக்கா குருவிகளின்
கூடுகளைக்கூட விடவில்லை.

பசித்தோரை வயிறு நிரப்பிய பரம்பரை
தெருவோரம் நாறிக்கிடந்தும்
அனுமதியில்ல
எரிக்கவோ புதைக்கவோ அன்றெமக்கு
உம்மைத் தாண்டியல்லவா
கேடுகெட்ட இவ்வுயிர் காத்தோம்

குருதிக் குளமாய் நந்திக்கடல் மாற
தாகம் தீர்த்துக்கொண்டது தர்மப்போர்
புத்தனின் செங்காவி மூடிக்கொண்டது
என் நிலத்தை
மூச்சிழந்தது முள்ளிவாய்க்கால்
கண்களை மூடாமலே அணைந்து போனது
ஆயிரமாயிரம் தமிழ் உயிர்கள்
அவர்களின் கனவோடும் வாழ்வோடும்.

காட்டிக்கொடுத்தவனும்
கற்பழித்தழித்தவனும்கூட
கலங்கியிருக்கலாம் அக்கணம்.

அவிழும் திரைக்குள்
ஆயிரம் ஏக்கக் கண்களை
ஏந்திநிற்கிறது இப்பௌர்ணமி
கொடுப்பதற்காய் ஏதுமில்லை
இப்போதும் எம் கைகளில்.

நீங்கள் வருவீர்களென்றுமட்டும்
தெரியுமெனக்கு
அசையாத் தீபமொன்றை
ஏற்றுகிறேன்
உங்கள் முகம்காணவும்
திரைகள் அவிழவும்.

மன்னியுங்கள் கண்கண்ட தெய்வங்களே
நீங்கள் செப்பனிட்ட வழிகளில்
இன்னும் பூண்டும் புல்லும்
செதுக்கியெடுக்க இன்னும் கைகளில்லை
அத்தனை கைகளுமே எடுக்கப்பட்டு
பொம்மைக் கைகளாகிப் போனோமே.

காத்திருக்கிறோம்
சூரியக் கதிர்கள்கொண்ட
காத்திரமான கையொன்றிற்காக.

இன்று குற்ற உணர்வில்
கூனிக் குறுகுவதைவிட
வேறு வழியில்லை செம்மல்களே
எம்முயிரில் கலந்த காவல் தெய்வங்களே
மன்னிக்கவில்லையா சொல்லுங்கள்
இத்தீபம் கொண்டே
மூண்டு எரிந்துகொள்கிறேன்
உங்கள் முன் .

அதற்கும்
தலை குட்டி அணைத்துச் சிரிப்பீர்கள்
அறிவேன் நான்.

இழந்தோம்.....இழந்தோம்

எல்லாமே இழந்தோம்
இல்லையெமக்கு இனி நீங்கள்
சதி சதி......என்று தெரிந்தும் விதி நொந்து
உள்ளுக்குள் கொதிகொண்ட பொழுதுகளோடு
இன்றும்..இப்போதும்..எப்போதும்...!!!

உங்கள் நினைவுகளுடன்.......அகதித் தமிழச்சி ஹேமா சுவிஸ்லிருந்து !

Friday, May 16, 2014

நிகழ் பறவை...


சுழியச் செய்
மீதியுள்ளது சேடம்
சுரக்காத அன்பின்
சுவடிகளுக்குள் புத்தன்.

தொழு இல்லை
தொம்பைக்கூடு சேர்
தேடாத கடவுளின்
தொழும்பன் இவன்
இன்னும்பிற
வார்த்தைகள் வரா
தொல்வரவின்
சலிக்கும் தொணதொணப்பாய்.

படபடக்கும் போதி மரத்தின்
பாதிக்கிளைகள் போலும்
பௌத்திரனின் அரசன்.

போகுதலாகும்
இறப்பு
தட்டத்தனியிருப்பு.

வீடுபோதல்போல்
பக்கச் சிறகு முளைத்தல்
மாலோன் சித்திரங்களில்
மாரியுடைக்க
எச்சமிட்டுப் பறக்கும்
விரிசிறகில்
மாண்டு
திடுமென
மூதலிக்கும் உலகம்
வரகதி தரும்
வான்வெளி கிழித்து!!!


தொம்பைக்கூடு -(மூங்கிலால் செய்யப்பட்ட தானியக்குதிர்)
தொழும்பன் -(அடியவன்)
பௌத்திரன் -(மகனுடைய மகனாகிய பேரன்)
வரகதி தரும் -(மேலான கதி)


ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 14, 2014

இறுதிப் பாடல்...

பாடத்தொடங்கியிருந்தது
பறவையொன்று
நீண்டதொரு பாடலை
ரசிக்கும்
இரவின் நடுப்பகுதியிலிருந்து.

ஆலாபனை எது
ஆரோகணம் எதுவென
என்னவன்
இதழ்மொழிய
நானும் இரவும்
தலையசைக்க...

வெள்ளமென
ஒரு இசைநதி
அதன்
விழிவழி வழிந்து
குளிரவைக்க...

நீலக்கடலுக்கும்
கடலில் முங்கியெழும்
தென்னை மரத்திற்குமாய்
முத்திட்டு நாம்
பிரிந்தும் இணைந்துமாய்....

தழுவிய தென்றல்
புயலாய் மாற
பாறத்தொடங்கியது
தென்னை
தின்னத்தொடங்கியது
பறவையைக் கடல் ...

என்னவன்....என்னவன்

பிந்தையநாளில்
எலும்புகள் சோதித்தவர்கள்
குற்றமென்றார்கள்
காற்றையும்
கடலையும்...

பாவிகளே
மீட்டிடுங்கள் எலும்புகளை
பறவையும் அதன் பாட்டும்
அகப்பட்டிருக்கும்...

என்னவனும்!!!

Monday, May 12, 2014

யுகங்கள் வெல்லுமொரு யுத்தம்...


என்னைக்
கொலை செய்த நேரமாவது
ஞாபகமிருக்கிறதா உனக்கு
அன்றைய இரவில்
சுவரொட்டிகூட கண் விழித்திருந்ததே
ஒரு வியாழக்கிழமை சரியாக இரவு 1.47

என்னைக்கொன்ற நீ
களைப்போடு போர்வைக்குள் நுழைய
முற்பட்டுக்கொண்டிருந்தாய்
அந்தப் பல்லி உரைத்த ஒரு சொல்லில்
எதையோ நினைத்தவனாய்
தண்ணீர் குடித்து
வானொலியில் ஒரு பாடலை
இசைக்க விட்டிருந்தாய்

பாடலில் என் கொலை
மொழிபெயர்க்கப்பட்டிருந்தது


நீ கன்னத்து முடி தள்ளிப் பதித்த முத்தமும்
உதடு கடித்துப் துப்பிய குருதியின் மணமும்
கொலை செய்யமுன் புணர்ந்த ஒரு காட்சியும்
தொப்புள் நிரப்பிய விஸ்கியில்
உன் நாவிட்டு உறிஞ்சிய சத்தமும்

எப்படிச் சாத்தியமானது

மீண்டுமொரு முறை
அதே வரிசைப்படுத்தலில்
என்னைக் கொலை செய்
இன்னொருமுறை
உன் ஆக்கிரமிப்பின்
ஆளுமைக்காக....!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, May 09, 2014

ஆணிகள் தொலைப்பவன்...


திவலைகளைக் கலைத்து
திரவமாக்கி
ஓட்டைக் கலயத்திலிடும்
முயற்சியில்
உன் ஆராய்ச்சி.

ஆணவம்...அது....நீ...

உரிமையில்
தெருட்சியற்ற தவறொன்றில்
சாத்தான்கள் ஆரத்தியுடன்
ஆரம்பமாகிறது
நமக்கான சண்டை.

உடைத்து
நொருக்கி
பின் இணைக்கையில்
தொலைந்துவிடுகிறது
பிணைச்சல்களின்
சிறு துண்டுகள்

இறுதிச் சொல்வரை
ஆட்டம் கண்டு
இனி இல்லையென்றானபின்
என்னதான்
மிஞ்சிக்கிடக்கிறது
இயலாமையோடு
முனகித் திரும்பும்
என் இயல்பு தவிர.

நீ....நீயாய்த்தான்...

மீள மீள
உயிர்த்தெழும்
ஆசைகளை

நிராயுதபாணியாக்கி
கொன்றொழிப்பதுதான்
சரி இனி!!!

ஹேமா(சுவிஸ்

Thursday, May 08, 2014

உள்ளங்கைக் காடொன்றில்...


பூண்டுகள் பூத்து
ஆந்தைகள் உறங்கும்
பகல் பொழுதில்
தோட்டாக்கள் தீர்ந்த
துவக்கிலுள்ள தாகத்தின்
உன்மத்தம் ஊடுருவ...

உப்பின் தூவலாய்
சிறுமழைத் தூரலில் மிதக்க
புரவி முதுகில்
சுருண்ட வண்டென
பெருவனம் புகுந்த கடல்...

இயலாத இராணுவமாய்
ஆரம்பிக்கிறாய் மீண்டும்
உன் தோட்டாக்கள்
இல்லாத துவக்கோடும்
உவ்விடத்திலேயே
ஊசி அபகரித்த
கதுப்புப் பழங்களோடும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 05, 2014

பருவ ஆடை...


மெல்லக் கலைகிறது
குளிர்காலம்
தளிர்விடும்
மொக்குகளிடமிருந்து !

கையுறைகளும்
காலுறைகளும்
இனிப் பதுங்கிகொள்ளும்
பருவ வெயில்
நகரா ஊர்திகளில்!

ஒற்றைநாள்
பருவவெயில்
போதுமாயிருக்கிறது
கைகொடுத்து
தூரமாய்க் கடக்கவைக்க
பறவைகளையும்
பார உடைகளையும் !

சங்கடங்கள் தொடரும் இனி....

முக்கால் வருட அவதி
போதுமென
உலவிடும்
குட்டை உடைகள்
கண்கள் குளிர !

நானோ....

பார்த்துப் பார்த்து
சேமித்து வைத்திருக்கிறேன்
பத்துப்பதினைந்து
பனியுதிர்த்த
பழைய இலைகளை
பாட்டிக் கதைகள் சொல்ல !!!

ஹேமா(சுவிஸ்)