*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, December 31, 2008

புதியவன் தந்த"பட்டாம் பூச்சி"

சும்மாதான் கிறுக்கினேன்
புத்தாண்டுப் பரிசாய்
"பட்டாம் பூச்சி"விருது.
Get a Sexy, Colorful and Cute Comment from Commentsdump.com TODAY!
சும்மாதான் கிறுக்கினேன்
எழுத்துக்கள் கவிதையாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சுமைகள் சுளுவாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சொந்தங்கள் கூடியதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கனவுகள் சுகமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
தனிமை தொலைந்ததாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
சிநேகிதங்கள் நெருக்கமாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
உணர்வுகளின் சேமிப்பாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
இயலாததையும் சொல்வதாய்.
சும்மாதான் கிறுக்கினேன்
கோபங்களைக் கிறுக்கல்களாய்.

இன்னும்...இன்னும்
சும்மாதான்...சும்மாதான்
என்றாலும்,
வலிகளின் ரணங்களாய்
வாழ்வின் வரைபடமாய்
காதலின் தூதாய்
சந்தோஷங்களின் இறக்கைகளாய்
சமூகத்தின் சாட்டையாய்
சொந்தங்களின் பகிர்வாய்
என் தேசத்தின் ஏக்கமாய்!!!
பிறக்கிற தையில்
வயது ஒன்றாய்
பூத்தவள் குழந்தைநிலா.
அதற்குள் தட்டிய விருதோ மூன்று.
சேவியர் அண்ணா ஒருமுறை.
மலேசியா விக்கி ஒருமுறை

வியப்போடு நானிருக்க
புன்னகைக் குழந்தையாய்
புதியவன் ` இப்போ
"பட்டாம் பூச்சி"விருதாய்.
சிறகு முளைக்காத குறைதான்
ஆனாலும்...
பறக்கிறேன்...பறக்கிறேன்
புதியவன் தந்த விருதே சிறகுகளாய்.
சிறகு முளைத்ததாய்
ஒரு ஞாபகத்தோடு
பறக்கிறேன்... பறக்கிறேன்.

பகிர மனமில்லை.
எனக்கே எனக்காய்
புதியவன் தந்த பட்டாம் பூச்சி இது.
என்றாலும் பகிர்கிறேன்.

நூறாவது பதிவின் திளைப்பில் இருக்கும்
கடையம் ஆனந்த்
அக்கினிக் குஞ்சுகளாய் தரும்
எங்கள் மெல்போர்ண் கமல்
தமிழில் தத்தித் தவழ்ந்து
விழுந்து எழும்பும் இரவீ.
பகிர்ந்து கொள்வார்கள்
இனி அவர்கள் பதிவின் பக்கத்தில்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, December 26, 2008

சுனாமியும் ஓர் பெண்ணும்...

கை நிறையத் தந்த கடல்
நுரை கக்கி
கையோட அள்ளிப்போட்டுது
என்ர பிள்ளையை.
கண் நிறைஞ்ச புருஷனையும்
கருப்புக் காலன்
கொண்டு போட்டான்.
கடலுக்குள்ள தொலைச்சுப்போட்டன்
என்ர வாழ்க்கையை.
காத்திருக்கிறன் இப்பவும்தான்.
வருவினமோ இரண்டு பேரும்.

வானம் தொலைச்ச நிலவைப்போல
தேடுறனே நித்தம் நித்தம்.
நிறைய உயிரைக் குடிச்ச கடல் எண்டா
"உம்"எண்டு உறங்குதெல்லோ
கல்லுளி மங்கன் போல.
கரையில ஒதுங்குவினமோ
கடலுக்குள்ளேயே புதைஞ்சிட்டினமோ
காணேல்லையே.

வருஷமும் நாலாச்சு
காத்த வழியிலயும்
பூவும் பூத்திட்டுதே.
வந்திட்டுப் போங்கோவன் ஒருக்கா
பாவம்தானே பாவிப் பெட்டையும்.
பொட்டும் அழிக்கேல்ல.
பூவோட காத்திருக்கிறன்.

அம்மாளாச்சி சொன்னவ கனவில
காலம்புற வருவியள் எண்டு.
கனக்கக் காலையும் கடந்தே போச்சு.
பொய்யும் சொல்லிட்டா அவ.
போகமாட்டன் இனி அவவிட்டயும்.

மீன் சந்தையில
சந்தடிக்க கதைக்கினம்.
பேச்சியின்ர பெடியனும்
பத்தைக்க கிடந்தவனாம்
பதினைஞ்சு நாளா உயிரோட.

அப்பிடியெண்டாலும் வந்திடுவியள்
எண்டெல்லோ
பரதேசி நான் பாத்துக் கிடக்கிறன்.
ஏமாத்த மாட்டியள் நீங்கள் எப்பவும்.
இப்பவும் வந்திடுவியள்.

கொல்லைக்க நிக்கிற கிடாயும்
கூட்டுக்குள்ள
கொப்பர் தந்த கொண்டைச் சேவலும்
தேடுகினமெல்லோ.
கிடுகுப் படலையும் அசையுமெண்டு
அசையாமல் கிடக்குது மனசும்தானே.

குசினிக்க சிலந்தியும்
கூடு கட்டிப் படுத்திருக்கு.
சாராயம் உன்னை எரிச்சிப்போடும் எண்டு
கள்ளு வாங்கி வச்சனான்.
பூஞ்சணமும் கட்டிக்கிடக்கு அதில.

கொம்மாவும் புலம்பினபடி.
கொப்பருக்கோ விசர் பிடிச்சிட்டுது.
கொக்காத்தை கதைக்குதே இல்ல.
எப்பத்தான் வருவியள்
இரண்டு பேரும்.


சொல்லிட்டுப் போயிருந்தால்
கலண்டரில கணக்குப் பாப்பேன்.
வருத்தம் வந்து போனாலும்
விதி எண்டு வெந்திடுவன்.
"தேத்தண்ணி வை வாறன்"
எண்டுதானே போனியள்.
திரும்பவேயில்லையே.


காசு பணம் கனக்க இல்ல.
உழைப்பும் கொஞ்சம்தான்.
அப்பரும் தரேல்ல சீதனம்.
எண்டாலும்...
நாலு றால் போட்டு
கஞ்சி காச்சினாலும்
பகிர்ந்தல்லோ குடிச்சம்.


கொண்டு வாறதை
பொத்தித் தருவியள் கைக்குள்ள.
சில்லரையை அப்பிடியே கொட்டிப்போட்டு
சிரிக்குதடி காசும் உன்னைப்போல
என்று ரசிப்பியள்.
சின்னக்குட்டியும்
உங்களோட சேர்ந்துகொண்டு
கையை ஆட்டும்.
பசியும் பத்தும் பறந்தே போகும்.

கண்ணுக்குள்ள வச்சுக் காத்துப்போட்டு
இப்போ...
கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ள
விட்ட மாதிரியெல்லோ தவிக்கிறன்.
கேள்விக்குறியை நிரப்பிக்கொண்டு
காத்திருக்கிறன் வருவியள் எண்டு.
நம்பிக்கையோட
நானும் தேய்ஞ்சு போறன்.

நாலு வருஷமும் பறந்து போச்சு.
மூச்சு முட்டி நிக்கமுந்தி வந்திடுங்கோ
இரண்டு பேரும்.
இல்லாட்டி...
என்னையும் கூட்டிக்கொண்டு
போங்கோவன் வந்து!!!

ஹேமா(சுவிஸ்)

1)என்ர-என்னுடைய 2)எண்டெல்லோ-என்றெல்லோ
3)வருவினமோ-வருவார்களோ 4) கனக்க-நிறைய
5)கதைக்கினம்-பேசுகிறார்கள் 6)கொல்லை-பின்பக்கம்
7)தேடுகினம்-தேடுகிறார்கள் 8)காலம்பற-காலையில்
9)கொப்பர்-அப்பா 10)கொம்மா-அம்மா
11)கொக்காத்தை-அக்கா 12)விசர்-பைத்தியம்
13)படலை-வாசல் கதவு 14)குசினி- சமையல் அறை
15)வருவியள்-வருவீர்கள்

சுனாமியான கடல்....

தொலைத்துவிட்ட உறவுகளை
மீண்டும் காணவே முடியாது
என்று தெரிந்தபோதும்,
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
அடித்துக் கொள்(ல்)கிறது மனம்.

ஞாபகங்களைக் கிளறி
கோடு கிழிக்கும் நண்டாய்
சொந்தங்களில் சிரிப்பலைகள்.
கரை ஒதுங்கும் நுரையாய்
வந்து மறையும்
அவர் முகங்கள்.
பங்கருக்குள் காத்த உயிரை
நொடிக்குள் பறித்தாயே.

அகோரப் பசி தீர்ந்து
அமைதியாக நீ இப்போ.
அன்றிலிருந்து
அமைதி கலைந்த உறவுகளை
அறிவாயா நீ.
போற்றிய வாயாலேயே
தூற்றும் பொல்லாதவராய்
நாம்தான் உன் முன்னால்.

ஆறி மறக்கக்கூடிய நிகழ்வையா
நடத்தி மறைந்தாய் நொடிக்குள் நீ.
வெள்ளைச் சேலையில் அக்கா
அப்பாவைத் தேடும் குழந்தைகள்
மனம் குழம்பிய ஒருவர்
அனாதையான பாலகன்.

ம்ம்ம்.....
காணும்போதெல்லாம்
சபிக்கப்படுவது நீதானே.
கடல் சூழ்ந்ததால்
அழகானது எம் நாடு.
அதே கடலாலே
அழகிழந்தோர் ஆயிரம் ஆயிரம்.

மீன் வாங்கக் காத்திருந்த நாங்கள்
பிணங்களுக்காய் காத்திருந்தோமே.
கிளிஞ்சல்கள் பொறுக்கிய நாங்கள்
ஒதுங்கிய பிணங்களப் பொறுக்கினோமே.

மரணத்தை மொத்தமாய்
கூட்டி வந்த
கடலே...பேரலையே
மறவோம் உன் கோபத்தையும்
எம் உறவுகளையும்!!!
ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 23, 2008

அவலம்...

மானுடம் மரித்து
மீண்டும்...
மரம் தாவுவதாய் ஒரு பதட்டம்.
நாகரீகம் எல்லை தாண்ட
யுகங்கள் கோடி தொட்டுஇ
நெருப்புத் துண்டங்களை
தன்னுள் புதைத்துக் கொண்டு
காற்றிலே சாவரி செய்பவனாய்.

முகப்புண்ணை
கைத்தடியால் விறாண்டியபடி
சீழ் வடிய வடிய.
மறந்தே போயிற்று அவனுக்கு
தாலாட்டுப் பாடலும்
அவன் வளர்ந்த திசையும்.

கூடு கட்டிப் புளு வளர்த்து
சிறகு முளைத்த சித்திரவதைகள்
தவற விட்ட கணங்கள்
புரியாத தவிப்புக்கள்.

தேவை என்பதற்காய்
மூன்றாவது காலும்!
தேவையில்லை என்பதற்காய்
சில சமயம்
காலே இல்லாமலும்!

சொர்க்கமோ...நரகமோ
வேண்டும் என்றாகிவிட்டால்
தலை கீழாகவோ
முட்டி மோதியோ
அடுத்தவனை வீழ்த்தியோ
சுதந்திரம் தரிசிப்பவனாய்.

காலம் தாழ்த்திய குரலில்
பணிவாய்...
கேட்டதெல்லாம் செய்வேன்
என்று சத்தியம் செய்தால்
நிர்வாணமே மிஞ்சுவதாய்.

வானரக் கொடியில் காய்ந்து
மனிதனாய் உலர்ந்த பின்னும்
பரம்பரை மறக்காமல்
செயல்களில்
சாயலாய் தனைக்காட்டி.

திசைகளைத் தவறவிட்டு
தொலைவு நீள
முழு நிர்வாணத்தோடு
கூச்சம் சிறிதுமற்றவனாய்.

முற்றுப்புள்ளி திட்டுமென்று
வெற்றுக் கடதாசி எங்கும்
கீறியும் எழுதியும்இ
தொடரும் என்பதால்
வெல்லவே முடியாது
சில நிரந்தரங்களை.

காற்றும் புயலும்
சுறாவளியும் வருமுன்
இறுக சாரளங்களைச்
சாத்திக்கொளவதே நல்லது.
மீண்டும் குரங்காக மாறி
மனிதனை இம்சிக்க முன்.

ஏனென்றால்...
சில மனிதம் நிறைந்த
மனிதர்களும்
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இது!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 15, 2008

என்னடா நீ...!

அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
ஒன்றுமே தெரியாதவன்போல்
அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
கதைபேசியபடி நீ.
பிறகு எதற்கு நான் உனக்கு.
கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
உன்னை நான்.

சொல்...முதலில் சொல்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
ஒரு போதுமே சொன்னதில்லை
இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
முத்தத்தின் சத்தத்தால்
என் அறை நிரப்பும் உனக்கு
என் செவிப்பறை புகுந்து
அன்பே என்று சொல்ல மட்டும்
தயக்கம் ஏன்?

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
முட்டி மோதி...முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முனையும் அலையாய்
மனதைத் தந்தவன் நீதானே!

கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
வார்த்தைகளில் பார்த்ததில்லை.
வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
என்றபோதும்...நீ
என்னை விட்டு விலகியதும் இல்லை.

காதலின் மொழி தெரியாத
மூடனா நீ...முட்டாளா நீ.
அன்பே...
நீ மட்டும்
இதய இருட்டறைக்குள்
தனியாய் பேசிக்கொண்டால்
எட்டுமா என் செவிவரை.

இனியவனே சொல்.
இனியாவது சொல்.
என் செவியோடு ஒரு முறை சொல்.
நீயே என் இதயம் எனச் சொல்.
நீயே என் உயிரடி என்று சொல்.
சொல்லிவிடு என் செல்வமே.

இதயக் கூட்டைவிட்டு
என் பிராணன் பிரியும் முன்
சொல்லிவிடு.
பிரியமானவனே காத்திருக்கிறேன்.
காத்திருப்பின் அவகாசங்களும்
சில சமயம் தூரமாக முன்!!!

(இப்படி மிரட்டிக் கேட்ட பிறகும்...இந்தக் கவிதைக்குக் காரணம் ஆனவர் அன்பாய் செல்லமாய் என்னோடு பேசத் தனக்கு வெட்கமாய் இருக்காம்.சொல்லுங்கோ...எங்க போய் நான் முட்டிக்கொண்டு அழ!)

ஹேமா(சுவிஸ்)

Friday, December 12, 2008

ஏன்...

சுமந்து சுமந்து
முதுகுதான் கூனியதே
தவிர....
காவுதலும்... இறக்குதலும்
குறைந்தபாடாயில்லை
களைத்துவிட்டேன்.
இனியும் முடியாது.
ஓடுதலும்... ஒளிதலும்
எத்தனை காலங்கள்தான்
இப்படி?

யார் கலைக்கிறார்கள்
ஏன் ஓடுகிறோம்
என்று தெரியாமலேயே
ஓடுதல் மட்டும்
சிலசமயம்
ஆமையாகவும்...
சிலசமயம்
முயலாகவும்...

சம்பந்தமேயில்லை
எனக்கும் அரசியலுக்கும்.
விடிந்தால்
வேலை.....கூலி
அன்றைய வயிற்றுப்பசி
என் பிழைப்பு.

குண்டும் குழியுமான
எங்கள் தெருக்கள்
போல
நீண்டு கொண்டே
நகர்கின்றன
வருடங்கள்.
தவிர...
எம் அரசியல் மட்டும்
பேச்சோடும்
வார்த்தையோடும்
மட்டும்தான்
எப்போதும்.

எப்போது....
காவுதலும்... இறக்குதலும்
ஓடுதலும்... ஒளிதலும்
இல்லாமல் போகும்.
களைப்பாயிருக்கிறது.
இன்னும் நான்
புரியாமலேயே
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)21.01.2007

Tuesday, December 09, 2008

மீண்டும் பிறந்தால்...

நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பு என்பதில் எனக்கு
நம்பிக்கையே இல்லை.
ஆயினும்
கேள்வியோடு துளைத்து
நச்சரித்தபடி நீ.
விட்டு வைக்க விரும்பாத
ஆதங்கமாய் அது
கேட்டுக்கொள்.
உனக்குள்ளும் பதில் இருந்தால்
எடுத்து வை.

மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.

பாரம் சுமந்த உன்னை
நான் சுமக்கவும்,
உன் மடி சேர்ந்த நான்
உன்னை
என் மடி சேர்க்கவும்,

மிதிபட்ட பாதங்களிடை
முரட்டுத்தனமாய்
இழுபட்ட என்னை
சிறகுகளாய் ஆக்கிய
கைகளுக்குள்
காத்த உனக்கு,

வயிற்றுக்கு வெளியில்
கருவறை கட்டி,
காயங்களைக் காயப்படுத்த
கல் எறிந்தவரைத் தூரவிரட்டி
போர்த்தி அணைத்த உனக்கு,
பண்டமாற்றாய் பகிர்ந்து தர
எதுவுமேயில்லை என்னிடம்.

உள்ளதெல்லாம் தொலைத்து
முற்றும் அற்றுப்போய்
குட்டப்பட்டு...குற்றப்பட்டு
கூனிக்குறுகி நின்றபோது
அன்பின்
நிழலாகினாய் நீ.

நெருங்கிக் கேள் அன்பே!
எனக்கென்னவோ
நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பில்.
வேண்டவும் வேண்டாம்
மீண்டும் பிறப்பு ஒன்று.

என்றாலும்
இனிமை தரும்
பருவத்துக் காதலன்
என்கிற பருவம் தாண்டி
என் உயிர் காவலன்
உனக்காய்
உன் அன்பின் நிறைவோடு
நான் பிறந்தால்
மீண்டும் பிறந்தால்...
தாயாய் ஆவேன்
உனக்காய் மட்டும்
உன் தாய் நானாய் ஆவேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, December 01, 2008

கரம் கொடுத்தீர்....நன்றி.

தமிழின் தாயகமே...
தாய் தமிழின் தேசமே...


நீ...
எங்கள் ஈழத்தாய்
முகவரி தேடி வந்துவிட்டாய்.
"பாரதமே கொஞ்சம் கைகொடு"என
நீட்டிய கைகளுக்குள்
நம்பிக்கையின்
கரங்களையே தந்துவிட்டாய்.
சோர்வின் கற்களைத் தகர்தெறிய
படையோடு திரண்டுவிட்டாய்.
அண்ணணாய் தம்பியாய்
இணைந்துவிட்டாய்
இனி எதற்கும் அஞ்சோம்.

ஓ...
யுகம் யுகமாய் காத்திருந்த
உங்கள் கரங்களின் பெருமிதத்தோடு
ஈழத்தாய் இப்போதே
சுதந்திரமாய் மூச்சு விடுவதாய்
ஒரு உணர்வு.

ஆருடம் பார்த்துப் பார்த்துக்
களைத்த வேளை,
காத்திருப்பின் காலம்
களைத்த வேளை,
"வந்தோம் இனி இருப்போம்
என்றும் உம்மோடு"என்று
களைத்துவிட்ட உடலுக்குள்
உந்துசக்தியாய்
மனதோடு உரசியபடி நீங்கள்.

கடந்த காலத்தின் சோகங்கள்
சொடுக்கும் கணத்தில்
விட்டுப்போனதாய்.
அவலங்களே சுகங்களாய் மாறி
குயிலின் கீதமாய்.

பதுங்கு குழிகள்
தேவையில்லை இனி எமக்கு.
பூக்களோடு புன்னகை வளர்ப்போம்
இனி அதற்குள்.

வானமெங்கும்...
சந்திரனும் சூரியனும் நட்சத்திரங்களும்
குந்தியிருந்து கூடிக்குலவும் சத்தங்களும்,
சந்திக்க வரும் பறவைகளும் தவிர
வேறு பறப்புக்கள் கிடையாது இனி அங்கு.

ஓ...
வார்தைகள் கூட வலி மறந்து
இறக்கைகள் முளைத்தனவாய்.
எத்தனை தசாப்தங்கள்
எத்தனை எத்தனை இழப்புக்கள்
எம் தேசத்தில்.
அத்தனையும்
எம் தசை நார்களோடு
பின்னிப் பிணைந்தவையாய்
மறக்கவே முடியாத
உறவுகளின் பதிவுகளாய்.

இனி அஞ்சோம்...இனி அஞ்சோம்.
உங்கள் கூட்டுக் குரல்களின்
அதிர்வு இடிக்கு
அசையவே வேண்டும்
எந்த ஒரு வானகமும்.
ஆயுதம் தூக்காத
அதிர்வின் ஆர்ப்பாட்டம் உங்களது.

அப்பாவுக்கும்...அம்மாவுக்கும்
அண்ணணுக்கும்...அக்காவுக்கும்
நன்றி சொல்லத் தயாராயில்லை நாம்.
சோழனும் ஈழவனும்
இணைந்துவிட்டான்.
இனி...!!!!

ஹேமா(சுவிஸ்)