*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, November 29, 2011

மனப்புலம்பல்...

தமிழ் உணர்வோடு இந்த வாரம் முழுதும் நம் மாவீரரோடு இணைந்திருந்த அத்தனை உறவுகளுக்கும் தமிழன்னை சார்பின் மனம் நெகிழ்ந்த நன்றி.

நடுநடுவே பெயரில்லாமல் யாரோ ஒருவர் சின்னக் குழப்படி.இவரும் புலம்பெயர்ந்து வாழ்பவர்தான் என்றே நினைக்கிறேன்.பாவம்.ஏதோ மனதால் பாதிக்கபாட்டிருக்கிறார்.ஆனாலும் நம் நாட்டுப் போர்ச்சூழல்தான் வெளிநாட்டில் இருத்தியிருக்கிறது.உழைத்து வீடு கட்டி,அக்கா தங்கைக்குச் சீதனம் கொடுத்து,அப்பா அம்மாவை வெளிநாடு வரவழைத்து....இப்பிடி எல்லாமே செய்து வாழ்வை உயர்த்தியிருப்பார்.ஆனால் அதற்காகப் போராடியவர்கள் அவருக்குக் கேவலமாகப் போய்விட்டார்கள்.ஏனென்றால் அவர்கள் வாழத்
தெரியாவர்கள்.பணமில்லாதவர்கள்.படிப்பில்லாதவர்கள்.காடு மேட்டிலே அலைந்து ஒளிந்து சாப்பாடில்லாமல் மக்களுக்காக தங்களை தங்கள் உறவுகளை வாழ்க்கையை சந்தோஷங்களை கழுத்தில் கட்டிய சயனைட்டோடு கட்டித் தொங்கவிட்டவர்கள்.இளிச்சவாயாய்த் தெரிபவர்கள்.இவர் மட்டுமே புத்திசாலி !

உண்மையில் நம் நாட்டுப் பிரச்சனையைத் திட்டுபவர்கள்மேல் எனக்குக் கோபம் வருவதில்லை.அவர்கள் ஏதோ ஒரு வழியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டவர்கள்.அதன் பாதிப்பே "ஏன் இந்தப் போர்..."என்கிற நிலைமையைத் தோற்றுவிக்கிறது.உதாரணமாக அவர்கள் குடும்பத்தில் யாராவது இயக்கங்களினாலோ இராணுவத்தினராலோ மரணமடைந்திருக்கலாம்.இடம்பெயர்ந்து பொருளாதாரச் சேதம் ஏற்பட்டிருக்கலாம்.இதுபோல எத்தனையோ.நானும் என் வாழ்வின் ஒரு பக்கத்தையே இந்தப் போரினால் தொலைத்தவள்தான்.ஆனால் எனக்கு இன்னும் கோபமும் வேகமும் அதிகரித்ததே தவிர,விடுதலைக்காய் போராடிய அது எந்த இயக்கமாக அல்லது நாற்றுப்பற்றாளர்களாக இருந்தாலும் சரி எவரிலும் வெறுப்பில்லை.எமக்குச் சிங்களவர்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்கிற உத்வேகம்தான் என் இழப்புத் தந்து போனது.ஒன்றை இழக்காமல் ஒன்று கிடைத்துவிடாது.அழிவில்லாமல் ஆக்கமில்லை.சுகமாய் கால் நீட்டிச் சாய்ந்திருக்க விடுதலையைக் கதவு தட்டிச் சிங்களவன் தரமாட்டான்.புரிந்துகொள்ளுங்கள்.

போராடியவர்கள்,எழுத்தால் பேச்சால் வாதாடியவர்கள் என அத்தனை பேரும் உங்களை எங்களைப்போல வெளிநாடுகளுக்கு வந்திருக்கலாமே.சரி தலைவர் முள்ளிவாய்காலில் தொலைந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்வோம்.ஏன் அவர் ஒருவருக்கு மட்டுமே எமக்கு விடுதலை வேண்டும் என்கிற எண்ணம் இருக்கவேண்டும்.அவருக்கு மட்டுமா தலைவிதி.அவருக்கு மட்டுமா விடுதலை தேவைப்பட்டது.நான் நீங்கள் எல்லோருமே தமிழர்கள்தானே.

இதோ பெயர் சொல்லாமல் "அரிப்பு" என்று எழுதும் நீங்களும் ஒரு தமிழன்தானே.அவர் தொடக்கிவிட்டிருக்கிறார்.60-65 வருடங்களாக நம் முன்னவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு எம் உரிமைகளுக்காக எழுத்திலும் பேச்சிலும் வாதாடிக்கொண்டிருந்தாலும்,இலங்கை/ஈழம் என்கிற ஒரு தேசமும் அங்கு தமிழன் என்கிற இனமொன்று வதைபடுவதையும் உலகம் பேசவைத்தவைத்தவர்கள் ஆயுதம் ஏந்தித் தங்கள் உரிமைகளைக் கேட்டவர்கள்.எங்கே அவர்கள் விட்ட இடத்திலிருந்து தொடரலாமே.எமக்குத் தேவையானதைக் கேட்க எனக்கும் உங்களுக்கும் துணிச்சலும் வீரமும் வேணும்.அது அவருக்கும்,அவரோடு அங்கு வாழ்ந்த மக்களுக்கும்,ஆயுதம் ஏந்திய அத்தனை போராளிகளுக்கும் இருந்தது.ஓடி வந்த நாங்கள் கோழைகள்.பேச அருகதை அற்றவர்கள்.உங்களாலும் எங்களாலும் முடிகிறதா சாவை கழுத்தோடு கட்டிக்கொண்டு அலைய.சாவுக்குத் திகதி வைத்து எங்களை நாங்களே வெடிக்க வைக்கமுடிகிறதா.தயவு செய்து மாவீரர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

விடுதலை கேட்பதும் பெறுவதும் சுலபமல்ல.எத்தனையோ சரித்திரங்கள் சொல்லும் பலகதைகள்.அது கைமாறிக் கைமாறி ஒ......ரே குறிக்கோளோடு போய்க்கொண்டேயிருக்கும் முழுமையாகக் கிடைக்கும்வரை.பெயர் சொல்லாத ஐயாவே.....தலைவர் பிரபாகரன் இடத்தை இனி நீங்கள் வகித்தால் நாங்கள் உங்களுக்கும் அதே மரியாதை நீங்கள் விடுதலைப் பாதை வகுத்தால் அதன் வழி நாங்களும் நடக்கிறோம்.நல்லது செய்ய யார் என்கிற கேள்வில்லை.நீங்கள் தொடர்கிறீர்களா ?

இதற்காகத் தலைவர் புகழ்பாடுபவள் இல்லை நான்.ஆயுதம் எடுத்து ஈழத்திற்காய் போராடிய அத்தனை இயக்கங்கள் போராளிகள் எல்லோருமே வீரமறவர்கள்தான்.ஆனால் தலைவர் தொடர்ந்து வழிநடத்தினார்.உள்பூசல்கள் எனக்குப் பெரிதாகத் தெரியாது.அவ்வளவு அரசியல் பேச நான் வரவில்லை.ஆனால் குழப்பமும் முரண்பாடுகளும் இல்லாத மனிதன் இல்லை.சரியும் பிழையும் எங்குமுண்டு.இங்கு யாரும் 100% முழுமையானவர்கள் அல்ல.

ஆனையிறவு,மாங்குளம்,அநுராதபுரம் வென்ற நேரம் இதே நாங்கள்தான் குதித்து மகிழ்ந்தோம்.ஏதோ தமிழர்களின் கஸ்டகாலம் எத்தனயோ நாடுகளின் சதியில் மாட்டி எம் போராட்டம் மழுங்கிக்கிடக்கிறது.ஆனால் மனங்களில் விடுதலைத் தீ எரிந்தபடிதான்.எப்படி உங்களைப் போன்றவர்களால் இப்படிக் கேவலமாகப் பேச முடிகிறது.அல்லது அடிமைப்பட்டே வாழ்வை வாழப் பழக்கிக்கொண்டீர்களா.சனல் 4 க்கு இருக்கும் உணர்வில் ஒரு துளிகூட எம்க்கு வேண்டாமா.சிங்களவன் ஆயிரம் கட்சிகளில் இருந்தாலும் தமிழனுக்கு ஒரு துளியளவுகூட உரிமை கொடுக்ககூடாது என்பதில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறான்.எம் போராட்டப் பின்னடதலுக்குக் காரணமும் உங்களைப்போன்றவர்களின் இடறி ஒற்றுமையில்லாத தன்மையும்கூட.

நம் தலைமுறையின் எதிர்காலம் என்ன.நம் மண் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.சிங்களவர்களின் நிரந்தரக் குடியேற்றத்தால் எமது பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது.
போதைவஸ்துக்கள் ஆசை காட்டி கல்வியை அழிக்கிறார்கள்.எங்களது தமிழ்ப்பிரதேசங்களில் புத்தர் கோயிகள் முழத்துக்கு முழம் வளர்ந்துகொண்டிருக்கிறது.ஈழத்தில் தட்டிக் கேட்க ஆட்கள் இருந்தவரை இதெல்லாம் நடந்ததா.சொல்லுங்கள்.இதையெல்லாம் ரசித்தபடி ஒருசொட்டுக்கூட யோசிக்காமல் "பிரபாகரனின் தொலை நோக்கு முள்ளிவாய்காளில் கோடாறி அடி பட்ட போது உலகமே விய்ந்தது. அதுவும் சிங்களவன் காலில் விழுந்து சரணாகதி ஆகி கோடாறி அடி பட்ட போது அவரின் சிந்தனைகள் சிரித்தது.தொலை நோக்கு தகர்ந்தது."என்று சொல்கிறீர்கள்.

நிச்சயமாய் உங்களில் மட்டும் என் கோபம் இல்லை.உங்களைப்போலச் சிலர் இருக்கிறார்கள்.போராளிகளுக்காக மட்டுமில்லை போராளிகள் தினம்.எமக்காக மரணித்த பொதுமக்கள் தொடக்கம் பூச்சி புழுக்கள்வரைதான்.இதில் பிரிவு பேதம் வேண்டாம்.இப்போகூட தலைவர் இருக்கிறார் இல்லை என்கிற பிரிவு.இருக்கிறார் இல்லை.நம்புவோம் நம்பவில்லை.அவர் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்ட பணியைத் தொடராமல் பிரிந்து நின்று சண்டை போடுகிறோம்.எமக்கே வெட்கமாயில்லை.சிங்களவன் பார்த்துச் சிரிப்பான்.எங்கள் பலஹீனம் அவனுக்கு பலம்.

"சுவிஸில் சுகமாக இருந்து கதைத்து கொண்டு பிரபாகரன் வருவான் புலி அடிக்கும் என புலம்பும் லூசுகள் என்று தான் திருந்துமோ."ஐயா பெயரில்லதவரே....சுவிஸ்ல் சுகமாக இருந்தால் நானும் உங்களைப்போல திட்டிக்கொண்டுதான் இருப்பேன் மாவீரர்களை.நான் இதுவரை சுவிஸ் பாஸ்போட் எடுக்கவில்லை.என் உயிர் மட்டும்தான் இங்கே.நினைவு முழுதும் என் மண்ணில்தான்.கையாலாகாத நான் உங்களைப்போல் துணிச்சலாணவர்கள் யாரும் வழிநடத்தினால் விடுதலைக்காய் தோள் கொடுப்பேன்.

ஐயா பெயர் சொல்லாதவரே....புலம்பெயர்ந்த எம்மிடம் எத்தனையோ பொறுப்புக்கள் செய்யக்கூடியதாக இருக்கிறது.சரி ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்கள் இல்லை பலம் இல்லை.இலங்கையில் இருந்துகொண்டு சிங்களவர்களின் அடக்குமுறைக்குள்ளும் சட்டத்துக்குள்ளும் இருந்துகொண்டு செய்யமுடியாத எத்தனையோ எழுத்துவழி,பேச்சுவழி,கல்விவழிப் போராட்டங்களை ஏன் நானும் நீங்களும் வெளிநாடுகளில் இருந்தபடி செய்யலாமே.இதற்கெல்லாம் எங்களுக்குள்ளும் விடுதலை என்கிற எண்ணம் வேண்டும்.போராளிகளுக்கு மட்டும் அது இருந்தது.நீங்கள் அவர்களை மட்டுமே நம்பியிருந்தீர்கள்.சரி நானும்தான்.ஏதோ தவறு நடந்திருக்கிறது.நல்லது செய்தால் நல்லவர்கள்.அவர்கள் விடுதலை வேண்டித் தந்திருந்தால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு பிறகு மறந்தும்விட்டு ஊரில் போய் சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்போம் இல்லையா.

ஒட்டுமொத்தத்தில் நீங்கள் சுகமாய் எங்கேயோ இருக்க அவர்கள் மட்டுமே விடுதலையை எடுத்துத் தருவார்கள் என்கிற பெரு எதிர்பார்ப்பு இருந்தபடியால்தால் உங்களுக்குள் இந்த ஏமாந்த தமிழன் என்கிற ஏமாற்றம் வந்திருக்கிறது.யாரும் ஏமாறவில்லை.விட்டதைத் தொடர்வோம்.அவர்களைத் திட்டாமல் கொஞ்சம் தமிழ் உணர்வோடு ஒற்றுமையோடு தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நம் காலத்தில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்திற்காக நாமும் அணிலாய் ஒரு புல் எடுத்துப் போடுவோம்.நிச்சயம் அது விருட்சமாகும்
நம் குழந்தைகளுக்கு !

பெயர் சொல்லாத ஐயாவே...நான் சொன்னவற்றில் ஏதாவது பிழை இருந்தால் நாகரீகமாகத் தெரியப்படுத்துங்கள்.உங்களுக்கும் சரி நமக்கும் சரி தெளிவு பிறக்கட்டும்.துஷி,சுதன் போன்றவர்கள் கருத்துச் சொல்வார்கள்.என் கருத்துப் பொதுவானவையே.எவருக்கும் சார்பற்றது.தமிழர்கள் எமக்குச் சுதந்திரம் தேவை அவ்வளவுதான்.வெளிநாடுகள் எமக்குத் திறந்த வெளி அகதி முகாம்கள்.அல்லது வாடகை நாடுகள்.எமக்கு என்றொரு நாடு தேவையில்லையா.வேண்டாம் என்றால் உங்களைப் போன்றவர்களுக்காக நான் செலவு செய்த நேரம் வீண் !

ஹேமா(சுவிஸ்)

Sunday, November 27, 2011

அடங்கிய எழுத்துக்கள்...

உரத்துக் குரலிட்ட
பேனாக்களை
வானரங்கள் உடைத்து
மையை உறிஞ்ச
மௌனித்த செய்திகள்.

யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்.

மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய
இனி ஒருக்காலும்
வரப்போவதில்லை
அந்தப் பேனாக்கள்
செய்திகளிலும்கூட!!!
யுத்தபூமியில் மரணித்த வீரர்களோடு ஆயுதம் ஏந்தாத அத்தனை உயிர்களுகளுக்குமான தினம்தான் இந்த மாவீரர்தினம்.ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கற்பனை ஒவ்வொரு ஆசை.ஆனால் ஈழத்தமிழருக்கோ ஒருமித்த ஒரே கற்பனை ஒரே ஆசை.உலகத் தமிழர்களுக்கும் விடுதலையை ஊட்டியவர்கள்.அதைத் தந்தவர்களும் இந்தத் தெய்வங்கள்தான்.அவர்களை வணங்கி அவர்வழி நடக்க அவர்களே எங்களுக்கு மன உறுதியையும் தர வேண்டிக்கொள்வோம்.

ஒரு நிகழ்வு சொல்ல ஆசை.

அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார்.இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்பதற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள்.கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார்."எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்" என்றார்.

அந்த மாணவனும் "4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான்.உடனே தலைவர் "இல்லை...இவன் ஒரு வட்டத்தை விட்டுவிட்டான்.40 வருடமும் ஆகும்.400 வருடமும் ஆகலாம்.இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம்.அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்" என்றார்.

திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் "விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?"என்று அதற்கு தலைவர் சொன்னார்.

"விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல.விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி,எங்கள் மக்களின் எழுச்சி,சிங்கள தேசத்தின் வீழ்ச்சி,தமிழகத்தின் ஆதரவு,சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்" என்று சொன்னார்.

மறவாத தமிழின் வேட்கையோடு உங்கள் வழி தொடர்வோம் என உறுதி சொல்லி உங்கள் பாதம் விளக்கேற்றித் தொழுகின்றோம்.

"தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்"

ஹேமா(சுவிஸ்)

Friday, November 25, 2011

ஐயா ஐ.நா ஐயாவே...

நீதியற்ற எலும்புகளால்
கோர்த்துக் கட்டிய
வானுயர்ந்த கட்டிடமொன்று
சுவிஸ் ஜெனீவாவில்.

அசையும் கொடியில்
வதைக்கப்பட்ட உயிர்கள்.
ஈழத்துயிர்களை
விதைத்த மேடைமேலொரு
வெ(ட்)டிப்பேச்சுக்கள்
பேசுங்கள்...பேசுங்கள்
பூச்சாண்டி காட்டுங்கள்
ஆவிகள் துரத்திக்
கண் குத்தும் ஒருநாள்.

பதவிப் பயங்கரவாதம்
சிங்களத்தைப் பொத்திக் காக்கின்றீர்
பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்
பத்தாயிரம் முறை கொட்டும் பனியிலும்
கொளுத்தும் வெயிலும் வாசல் நின்று
உயிர்ப்பலியும் தந்தோம்
அன்றொருநாள்.


கருக்கொள்கிறது காலம்
வயிறு பெருக்க பிரசவித்தே ஆவீர்
உண்மைக் குழந்தையை.
உன்னதக் கோட்பாடாம்
உலக சமாதானமாம்
பருந்துகளையும் காத்து
உம்மையும் காக்கும் தீக்கோழியாய்
கோட்டும் சூட்டும் போடும்
வேடுவர் கூட்டத்தோடு
நீரும் எனக்கெப்போதும்
அம்மணமாய்த்தான்.


எம் அழிவை உறுதிப்படுத்த
கள்வனிடமே சாவி கொடுத்தீர்
சுதந்திரமும் அதன் சோகமும்
சொந்தமாய் அனுபவம் உமக்கேதுமில்லை.
தேசமும் மக்களும் அழிவும் அடங்குதலும்
உரிமையும் தேவையும் எங்களுக்கே.

எத்தனை தியாகங்கள்
எத்தனை இழப்புக்கள்
அந்தத் திடல்களில் வளர்ப்போம்
இன்னும் எம் சுதந்திரத் தீயை.
பாதைகளும் பயணங்களும்
மாறுகிறதே தவிர

மறந்து சோரவில்லை
அவன் வழியே எங்கள் எண்ணங்கள்.

வருவீர்....வருவீர்
சந்திக்கவும் சமநிலையென்றும்
சமாதானமென்றும்.
பாடங்கள் சொல்லி
வகுப்பெடுப்போம் அப்போ உமக்கு
சுதந்திரம் பற்றிய
எம் சொந்த அனுபவங்களை!!!

ஹேமா(சுவிஸ்)

ஈழத்திற்காய் உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும் என் தலை சாய்த்த நன்றியும் வணக்கமும் !

Tuesday, November 22, 2011

சுகராகம்...

இதைத்தானே கேட்டுக்கொண்டாய்
பிடித்துக்கொள்
காதலும் நீ...கனலும் நீ...
தோழனாய்க்கூட கைநீட்டக்கூடாத
கல்லுளிமங்கனே....
மறந்திருக்கிறேன் உன்னை
சொற்படி நடக்கிறேனா
என்றாலும்
வெட்டிய வாழையில்
வெடிக்கும் குருத்தாய்
உன் நினைவுகள்.

கருத்த கனவுகளுக்குள்
நினைவுகளைக் கரைக்க
காயங்களுக்கு மருந்து தந்து
விடியலைத் தள்ளி
வெளிச்சமாகிறது நிலவு.

உன் வருகை விளக்கிலேயே
உறங்கிவிடுகிறேன்
என்னோடு நீயும்தான்
இளைப்பாறுகிறாய்
விழிகளும் இதயங்களும்
ஓய்ந்துவிட்டன
காத்திருப்புச் சந்திகளில்.

தன் கூட்டின்
நுனி தேடும் சிலந்தியென
ஊர்ந்துகொண்டே
சிக்கிக்கொள்கிறேன்
இருமுனையில் ஒருமுனை
உன்னிடம் என்றறியாமல்.

போருக்குப் போக
ஆயுதமும் உடையும் தந்தபின்
வாளின் கூர்மைபற்றியும்
ஆடையின் அலங்கரிப்பு பற்றியும்
பேசிக்கொண்டு நீ
இடிபாடுகளுக்கிடையில்
எதிரியைக் காணும் ஆவலில் நான்.

நினைவுகளையும் கனவுகளையும்
காலத்தால் சலித்தெடுக்க
மிஞ்சுவதெல்லாம்
அவசியமில்லா
சப்பைக் கற்களும் குப்பைகளுமே
காதலும் கூட.

உன்னைக் காணாத நாட்களெல்லாம்
சூரியனுக்கு விடுமுறை
பூமிக்கு அமாவாசை
பனிக்குளிருக்குள்
ஒற்றை உயிரையும் தொலைத்து
யுகம் துழாவும் நான்
கனவை வரவழைக்க
வெப்பக் கருவியின் துணையோடு.

எத்தனை பொழுதுகள் விடிந்தன
நீ.....
இல்லையென்ற பூபாளத்தோடு

அதே பொழுதுகள் பழக்கித்தரும்
நீ......
இல்லையென்ற முகாரியையும்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, November 14, 2011

தப்பாகும் தப்புக்கள்...

முறைத்து...முழித்து
செல்லமாய் அடிக்கும்
குழந்தைக்கு திருப்பியடித்து
முரடனாக்கும் அம்மா.

மழலை மொழியில்
சொல்வதெல்லாம் இனிக்குமென்று
தப்பான சொற்களையும்
மழலையாக்கும் அப்பா.

செல்லமாய் தொடங்கி
மெல்லமாய் மெல்லமாய்
முரட்டு குணமும்
எதிர்க்கும் சக்தியும்
கொடுக்கும் உங்களையே
ஒரு நாள் வீழ்த்தும்
மழலை தாண்டிய
அதே குழந்தை!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 08, 2011

நான்...இங்கு...ஏன் ?

யார் நீ...
ஏன் இங்கு...
எங்கிருந்து...
என்று தொடங்கி
தொக்கி நிற்கும்
கேள்விகளோடுதான் இன்றும் !

வருடங்கள் கடந்து
நான்காவது தலைமுறை
நடக்கையிலும்
பார்வைகள் பிறத்தியாகவே !

இருப்பிடம் கேட்டால்
தெருப்பெயர் சொல்வேன்
இல்லை...இல்லை
உன் இருப்பிடம் என்பார்கள்
“இங்கு”தான் என்பேன் குனிந்தபடி !

நடுவில் ஒட்டிக்கொண்ட
நான்.....
நிலையானவர்களிடம்
சொல்லும் “இங்கு”
பிறழ்வாய் இருவருக்குமே !

அவர்களுக்கும் புரியவில்லை.
எனக்கும்...
தெரியவில்லை சொல்ல!!!

அடிக்கடி அடிபடுகிறேன்....ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 01, 2011

இருக்கை...

இயல்பை விடுத்து
இப்போ...
தனக்குத் தொடர்பில்லாத இடத்தில்
பறந்துகொண்டிருக்கலாம்.

நாளை...
நீந்திக்கொண்டும் இருக்கலாம்.

இன்னொரு நாள்...
இடப்புறச் சங்குக்குள்ளும்
ஒளிந்திருக்கலாம்.

பிறகொருதரம்...
பிணங்கள் புதைக்கும்
இடத்திலும் பார்த்ததாகச்
சிலர் சொல்லலாம்.

காற்றாய் பறந்து
நீராய் தெளிந்து
ஒரு குழந்தை கையில்
புட்டிப் போத்தலுக்குள்
அடைபட்டும் இருக்கலாம்.

இயல்பைக் கடந்து
மாறித் தெறிக்கும் உருவம்
அதுவென மறுகி வியந்தாலும்
முக்கியம்...
அது அதுவாகவே இருத்தல் மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)