கேள்விக்குறியின் முதுகில்
பரந்த பாலைவனங்களில்
என் பயணிப்பு.
விடையே இல்லாத
கேள்விகள் போல
வெறும் கீறிட்ட கோடுகள்
நிறையவே.
எதிர்காலத்தின் முன்னால்...
எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
தொடர்ந்த சிந்தனையை
முடிக்க முடியவில்லை.
கொஞ்சம் தண்ணீர்
குடித்துக் கொள்கிறேன்.
என்றாலும்
எப்போதுமே
வேதனைகள்
வெந்து தணிந்த பிறகு
எல்லையற்ற கற்பனைக்குள்
மனம் சுற்றிப் பறக்கும்.
விடியாத வாழ்வே ஆனாலும்
பசியால் வாடிய போதும்
உலகமே வெறிச்சோடி
தனித்து விடப்பட்ட போதும்
எனதென்று யாருமே
இல்லையென்று ஆனபோதும்
கனக்கின்ற மனம் நிரம்பி
கண்ணீராய் வழிந்தபோதும்
கனவில் வரும்
கற்பனைக்கு மட்டும்
கணக்கேயில்லை.
ஒரே ஒரு கனவு
திரும்பத் திரும்ப
ஒவ்வொரு நாளும் வரும்.
ஒளவைப் பாட்டிக்கு
அடுத்தாற்போல்,
நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
நானும் ஓர் நாள்
நிலவில் நின்று
கொடி நட்டு...கை தட்டி
காற்றில் மிதப்பதைப் போல.
அப்படிக் கனவிலும்
ஓர் திடுக்காடு.
மனிதர்களைப் போல
நிலவுக்கும் மறுபக்கம்
இருந்துவிட்டால் !!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||