நண்பன் ஒருவன் இறந்ததாய்ச் செய்தி.
தற்கொலையாம்.
தன்னைத் தானே சுட்டுக்
கொண்டானாம் - கொன்றானாம்.
கோழை என்றாலும் வீரன்.
எதிரியின் குண்டு வாங்கிச் சாகாத வீரன்.
பிரச்சனைகளோடு விளையாட முடியாமல்
தோற்றுப்போனானாம்.
எதிர்க்காற்றில் நீச்சலடிக்கத்தானே
நேசங்கள் நீக்கி
தேசம் கடந்து
சர்வதேசக் கூலிகளாய் நாடு கடத்தப்பட்டோம்.
அழத்தான் முடிந்தது.
அரற்றினேன் நண்பர்களிடம்.
வந்து பேசியது அவனது முகம்.
அவன் மனைவி ,ஐந்தே வயதான மகன்.
ஏனடா....நீ எங்கேயடா.
பொழுது நகரச் சாப்பிட்டேன்.
படுக்கையில் புரண்டேனே தவிர
தூக்கம் புழுவாகி நெளிந்தது.
அவனது புள்ளியில்.
விடிந்தது...தொலைபேசியில் விசாரித்தேன்.
புறப்பட்டேன்.
மாற்றுத் துணிகளோடு புகையிரதத்தில்.
டிக்கட் எடுத்தேன்.
அறிவித்தலுக்காகக் காத்திருக்கிறேன்
கோட்டுக்கு வெளியில்.
யன்னலோர இருக்கையே பிடிக்கிறது.
தேடி இருந்து கொள்கிறேன்.
யாரோ ஓட்டுனர் கதவைத்
திறந்தால் மட்டுமே ஏறவும் இறங்கவும்.
மூன்று மணித்தியாலப் பயணம்.
தூங்கியும் இருக்கலாம்.
இறங்கி நடக்கிறேன்.
பாதையின் இடையில் சிநேகிதர்கள்
குசல விசாரிப்பு.
சந்தோஷமான விடயங்களும் கூட.
அண்ணா வீட்டுக்குப்
பழங்களும் இனிப்புக்களும் பை நிறைய.
இறந்தவர் போக இயல்பு வாழ்வு
கை கோர்த்துக் கொள்கிறது.
போனேன்...
அவளைப் பார்த்ததுமே குழறி அழுதுவிட்டேன்.
குழந்தை சிரித்தான் தூக்கினேன்.
பிடிக்கவில்லை அவனுக்கு என்னை.
இதோ விளையாடிக் கொண்டிருக்கிறான்.
சம்பிரதாயங்கள் நடந்தன.
முடிந்தன.
முடிந்தது எல்லாமே மூன்று நிமிடத்தில்.
அந்தப் பிஞ்சு கேட்கும் கேள்விகள்
மட்டும் முடிவில்லாமல்.
" அம்மா அப்பா எங்கே? " !!!
ஹேமா(சுவிஸ்)
ஊரில் என் அயலவரும் நண்பருமான
பொ.கேதீஸ் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.(31.08.09)