மகளே எழு...
விழித்தெழு... விரைந்தெழு
இன்னும் ஏன் அழுதபடி?
அடிமை ஓலை ஏதாவது
எழுதிக் கொடுத்தாயா?
சமூகம் எப்போதுமே
சலசலக்கும்
கவலை விடு.
நன்மைக்கும் சரி
தீமைக்கும் சரி
பின்னால் பேசும்.
செவி சாய்த்தால்
சாய்வது நீயேதான்.
நீ பறி கொடுத்த
வசந்தம் கூட
கைக்கெட்டிய தூரத்தில்
காத்துக்கிடக்கிறது
கவலையோடு உனக்காக.
காதல் வலைக்குள்
கல்யாணச் சிலந்தியாய் நீ.
உன்னை நீயே
புதைத்துக் கொள்கிறாய்
கல்லறைக்குள் ஏன்?
தன்னை
மறைத்துக் கொண்டிருக்கிறானே
தவிர மாறவில்லை
என்றும் ஆண்.
உன் வீட்டிலும் கூடத்தான்.
மனதால்...
முன்னூறு வருடங்களுக்கு
முன்னால் உன் கணவன்.
காலத்தின் கைதியாய்
எதற்கு நீ?
நீயும் தீக்கொளுத்து
உன் பயத்தை.
உபயம் யாருக்காக...
வாழ்வை அர்ப்பணிக்கிறாய்.
வாழ்வு வாழத்தான்...
திரும்பிப் பார்
நீ வாழ்ந்த வாழ்வையும்
இப்போ...
வாழாமல் புதை குழிக்குள்
வீழ்ந்து கிடக்கும் உன்னையும்.
தட்டு...
உன்மனத் தூசுகளைத் தட்டிவிடு...
தைரியத்தை தட்டியெழுப்பு...
தன்மானத்தை தூக்கியெடு...
அடிமைத்தனத்தைத் தூக்கியெறி...
பூவாய்... பாவையாய்
பெண்களைப் போற்றினாலும்
அதற்குள் புதைந்திருக்கும்
பூடகம் அறிவாயா.
வாடிய பூ பிறகெங்கே...?
பேசாத பொம்மை பேசினால்...?
பிறக்கிறது 2008
இன்னும் பெண்ணுக்கு
"அடுக்களையில் வேலையிருக்கு
கணணியில் உனக்கென்ன அலுவல்.
பிள்ளை அழுகிறது,
இப்போ என்ன
ஈமெயில் வேண்டியிருக்கு"
அன்புக்குக் கட்டுப்படு.
அடிமைத்தனத்தை
உதைத்துத் தள்ளு.
இன்னும் ஏன்
ஆணவமே உருவமான
ஆணுக்கு அடிமையாய் நீ!
அடிமை ராணியே எழுந்திரு...
வெட்டியெறி...
அடிமை விலங்கை.
மனிதம் வளர்..
தன் மானம் காட்டு...
நீ நீயாய் வாழ்...
உனக்காய் வாழ்...
இற...
பெண்ணின்
பெருமையோடு இற!!!
ஹேமா(சுவிஸ்) 26.12.2007
Tweet | ||||