*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, July 30, 2012

கோழியும் கழுகும்...



வறுத்தெடுக்க மனிதன்
கொத்திக் குடிக்கப் பாம்பு
இயற்கையும் சிதைக்க....
உறக்கம் விற்று
திசையோடு தவமிருக்கிறது
காக்கும் அடைக்காய்.

ஆகாயக் காவலன்
கண்களில்
மிஞ்சிப் பொரித்த
ஒற்றைக் குஞ்சை
உறிஞ்சும் மரணம்.
 
அருக்கனையே மறைக்கும்
அதிகாரம் வானில்
அடங்கினால்
அரிகண்டம் மாட்டுவதற்கொப்பு.
இறகு இத்தினிதான்
எம்பி எதிர்க்கிறது
இருப்பு இருக்கும்வரை!!!

அருக்கன் - சூரியன்.

அரிகண்டம் - தன்னைத்தானே சித்திரவதை செய்துகொள்வதற்காக மாட்டிக்கொள்ளும்
இரும்புச் சட்டம் இல்லை வளையம்.

இத்தினி - கடுகிலும் சிறிதளவு.

எம்பி - உந்தி எழும்புதல்.

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 25, 2012

இலவச மன்னிப்பு...

ஒவ்வொருமுறையும்
கைபிசைந்து நிற்கிறேன்
செய்த தவறுகளுக்காய்
என்னை முறைத்து
பின் ரசித்து
ரட்சிக்கும் தேவனாய்
உதறி விடுகிறாய்
மன்னிப்புக்களை.

இலவசவமாய்
கிடைக்கும் மன்னிப்பை
அலட்சியமாய்
எடுத்துக்கொண்ட நான்
மீண்டுமொரு
தவறுக்கு ஆயத்தம்
செய்துகொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 23, 2012

கறுப்பு ஆடி 2012...

காலக்கொடுமைகள்
நிரம்பி வழிய வழிய
எல்லாவற்றையும்
ஏந்திக்கொண்டிருக்கிறது
அகதித் தேசம்
கரையாப் பனிமலைக்குள்
போர்வையோடு புதைந்தவள்
திட்டித் தீர்க்கிறாள்
தன்னையும்
தன் மண்ணுக்கான போரையும்
அகதி தேசத்தையும்.

எங்கேயோ பார்த்த ஒரு முகம்....
சிங்களச் சிப்பாய் ஒருவன்
என்னைச் சிதைத்துத்
கழிவறைக்குள் தள்ளுகையில்
அங்கு.....
பெண்சதை தின்று
புணரத் தாவும்
இன்னொரு மிருகத்தோடு
போராடிக்கொண்டிருந்த
அதே அம்மா.

தொடையிலும் மாரிலும்
வேறு வேறு இடங்களிலும்
இரும்பு ஒட்டும் இயந்திரத்தால்
சுட்டுச் சிதைத்த வடுக்கள்
இன்னும்....இன்றும்!!!

ஹேமா(சுவிஸ்)