*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 22, 2010

உயிர்த்தளம்...

இது என் மண்.
இந்த மண்
என்னைத் தாங்கும்
வெறும் நிலம் அல்ல.
என் மூச்சுக் கிடக்கும்
காற்று அடைத்த மண்டலம்.

இது என் கிராமம்.
இது என் குடிசை.
கிரவல் மண் தாங்கி நிற்கும்
ஒரு திடல் அல்ல
என் வாழ்வு
என் உயிர்த்தளம்.

என்னை வளர்த்த அன்னை பூமி.
என் பாட்டன் பூட்டன் பாதுகாத்த பரம்பரை
பாரம்பரியம் பண்பாடு.
கூட்டுப்புழுக்களாய் புரண்டு உழுது
பிணைந்து கிடந்த கூட்டு வாழ்க்கை.

இன்று....
விழுது விட்டு கிளை பரப்பி
வேர் பதித்த என் மண்ணை விட்டு
வேறு வேறாய்.

ஒரு குடிசைதான்
என் அழகிய வீடு
என்றாலும்
என் பெற்றோரின்
இரத்தம் தாங்கும் இதயம்.

இப்போ..... இது
தன் நினைவுகளை....சுவடுகளை
மட்டுமே வைத்துக்கொண்டு
புல்லிடமும் பூண்டிடமும்
தன் பழைய வரலாறு சொல்லியபடி
கண்ணீர் துடைக்கக்கூட கைகள் அற்று
பாம்புகளுக்கும் பூச்சிகளுக்கும்
படுக்க இடம் கொடுக்கும்
கறையான் அரித்து
இற்றுக்கிடக்கும் நினைவுச் சின்னமாய்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி
வலம் வருகிறேன் கோவில் போல.
அக்கா பொத்திப் பொத்திப்
பாதுகாத்த சினிமாப் புகைப்படங்களை
எடுத்தோடி
வீட்டைச் சுற்றி ஓட ஓட
அடிவாங்கிய நினைவு.

தடுக்கி விழுத்திய
அதே பலா வேர்
இப்போதும் என்னைத் தடுத்து முட்டி
நலமா என்கிறது.
எனக்காகவே தனை உயர்த்தி
எத்தனை தடிகள் கொடுத்திருக்கும்
இந்தப் பூவரசு.
இப்போதும் பரிதாபமாய்ப் பார்க்கிறது.
வயதின் முதிர்வைப் பார்த்தா
இல்லை பயந்து ஓடிய
கோழைத்தனத்தை நினத்தா.
அப்பப்பா வளர்த்த பனை
தாத்தா நட்ட தென்னை
என்னை மட்டுமே நெருங்க விடும் அருநெல்லி.
இப்போதும்....
காய்கள் ஆய்வதற்கு ஆருமே இல்லாமல்
இருந்த ஒரேஒரு அறையின் நடுவில்
பெரிதாய் உயரமாய் நிறைந்த
காய்களோடு ஒரு பப்பாமரம்.
முளைத்துக் கிளம்பியிருக்கலாம்.
காக்கா போட்ட எச்சத்திலிருந்து

அம்மிக்காக போட்ட சிறு மேடை
சிதைந்து ஞாபகச் சின்னமாய்
ஓ...ஒரு மண்ணெணெய் விளக்குக்கூட
புல் போல வளைந்து ஆடியபடி
நின்ற வேப்பமரம் பெருவிருட்சமாய்
பல கிளைகள் விட்டு
இடம் பெயராமல் அப்படியே.

பேசமுடியா அத்தனையும் தமக்குள்ளேயே
போராடி நகர்வில்லாமல்
தன் மண்ணில் நிலைத்து நிற்கும்போது
நியாயங்கள் பேசி
தீர்ப்புக்கள் எடுக்கக்கூடிய
நாம் மட்டும்
நாடு விட்டு நாடு
அலைவது ஏன் ????

போட்டி !
பொறாமை !
பேராசை !
பெரு நினைவு !
சொல்லலாமா !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, February 19, 2010

தொலைத்த பதிவுகள்...

இருட்டியது
இருள் முட்டியது
வீடு அடங்கியது
சன்னமாய் ஒரு குரல்.
அலமாரிக்குள்
மிக...மிக
மிகவும் தெளிவாய்.

மனதோடு உரசி
அழுது சிரித்து
பக்கமிருந்து
தலை தடவி
குட்டியா என்றழைக்கும்
இளமையில் கேட்ட குரலாய்
நெகிழ்வோடு
அது....அது அப்பா !

அம்மாவின்
சமையல் சரியில்லை
தொடங்கி...
பக்கத்துவீட்டு
தங்கமணி அக்காவின்
குழந்தை நடக்கிறாள்
என்பது வரை...
உறவுகளின்
ஒரு பெரும்
சரித்திரச் செய்திகளோடு அவர்.

குறைந்தது பேசிக் கட்டணங்கள்.
குறைந்தது
அசைபோடும் நினைவுகளும்தான்.
பிறந்த நாள் வாழ்த்துக்கூட
தொலைபேசியிலாகி
தொலைந்து போனது
கையின் பதிவுகள்
அழகு கையெழுத்துக்கள்.

மீண்டும்....மீண்டும்
படிக்க
பார்க்க
சந்தோசிக்க
சேமித்த ரகசியங்களோடு
காத்திருக்கும்
கடிதங்கள் இன்னும்
என்னிடம்
நினைவுகளை மீட்கும்
உணர்வுகளோடு !!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, February 14, 2010

2010 காதலர் தினத்தில்...

இந்தக் காதலர் தினத்திலும்
பனிப்போருக்குள் குளிர் தணிய
வெப்பமூட்டியபடி
தனித்த தீவுகளில்தான் நாம்.

திடீரென உன் வாசம்
குளிர்ந்த காற்று
சுமந்து வந்திருக்கிறது.

தற்சமயம் நான் கூட
உன் அறையில்
உன் மடியில் இருக்கலாம்.
கதவுடைத்து
என்னைத் தொடும் காற்று
உன்னைத் தொட்ட காற்றாயும்
இருக்கலாம்.

பொழுது கழிய அலுவல்கள் ஆயிரம்.
ஆனாலும்
தூக்கத்திலும்
என் நினைவுகளோடு
நகரும் உன் நிமிடங்கள் போலவே
என்னுடைய நொடிகளும்.

திகதியிடப்படாத எல்லையில்லா
பாவிப்பின் பெறுமதியோடு
தேங்கிக் கிடக்கிறது
உனக்கான அன்பும்
முத்த முத்துக்களும்.
சீக்கிரம் வா
திணறும் பாரம் இறக்கு.

ஓ...
உன்னை எண்ணிய இரவும்
துயில் கலைந்து
விடியலுக்கு
காதலர்தின வாழ்த்துச் சொல்லி
முத்தாடுகிறது.

நான் இன்னும் உன் அணைப்பில்தான்.
கொஞ்சம் விடேன் என்னை.
இனியேனும்
கொஞ்சம் தூங்கலாம் நான் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, February 12, 2010

க.க.க.போ காதல்...

புரியாத்தனமும் எழுத்துப்பிழைகளுமே
உன்னிடம் என்னைத் தந்துவிட்டுப் போயின.
உன் விரட்டும் விரல்களைப்
பற்றிக்கொள்வதற்காகவே
வந்து வந்து சேட்டை செய்யும்
பிள்ளைப்பூச்சியாய் ஒளிந்துகொள்கிறேன்
உனக்குள்ளே.

என்னை வழி நடத்தும் தாயாய்
கை பிடித்துச் செல்லும்
குழந்தையாய் உன் நிழல்.
அதற்குள்....
முகம் காணத் தவித்திருந்த தருணத்தில்தான்
மழையும் முகிலும்
உன் நிழலை ஏந்திக் கலை(ந்)த்தன

ம்ம்ம்....
பார்த்தபோதும்
வார்த்தைகள் வரப்போவதில்லை.
வெறும் மௌனம்தான் உதடு பூசியிருக்கும்.
அப்புறம் எப்பிடி !
இருந்தும் பகல்களும் சில இரவுகளும்
என்னோடு உன் கதை பேசி விழித்தபடி.

மௌனம் உலர்ந்து
கை தொட நினைக்கையில்
மீண்டும் அந்த முகிலோ மழையோ
நனைத்து மறைத்து வைக்கலாம்
உன்னை.
உன்னையும் என்னையும் பிரிக்கும்
சதிக்கூட்டத்தை
கொலை செய்யக்
காத்திருக்கையில்தான்
எப்போதும்போல உன்னுடனான
அந்தச் சண்டை வலுத்துக்கொண்டது.

என்றாலும்
நீ....
என்னைத் திட்டித் திட்டி
தப்பு தப்பாய் சுழிகள் குறைந்த
ன்...ண் க்களும்
முற்றில்லாக் குற்றுக்களுமாய்
எழுதிய கவிதையே
அந்தக் கொலைகளை
காப்பாற்றிப் போயின.

வளரும் எம் காதல் போலவே
மீண்டும் மீண்டும் தொடரும்
அழகான உன் எழுத்துப் பிழைகள்.
இன்னும் எழுது
பிழை பிழையாகவே எழுது
ரசிக்கவும் திருத்தவும்
நான் இங்கே வேலையில்லாமல்தான் !!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, February 10, 2010

வீணாய்ப்போன...

பெயரிட முடியா
உறவுகளின் பெயரில்

இரு கருவிழிப்பாம்புகள்
மாயக்குகை விட்டு

மண்தடவி
மரம் தடவி
பூவுக்குள் ஒளிந்துகொள்ள

சூரிய விந்தில் பிறந்த குழந்தைக்கு
பெயர் மாற

பெயர் சொல்லப் பிடிக்காத
கூத்தியாளின்
கூம்பிய காம்பில்
கள்ளிப் பால் வடியவிட்டு

குண்டுணி காணமுன்
குறி மூடி

பின் ஊழ் திணித்து
அல்லது அகற்றி

இருளில் நகரும்
பறையில்லா சவ ஊர்வலம் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 04, 2010

வெறுமையின் பாரம்...

இனி யாரும் என்னைத் தேடாதிருக்கட்டும்.
தடுத்துத் துகிலுரிக்க
கையொன்று என்னை தீண்டாதிருக்கவே
பாரங்கள் கையிலும் தலையிலுமாய்
எல்லை தொடும்
பறவையின் வேகத்தோடு புறப்படுகிறேன்.

வறுமை வயிறு காய்ந்தபோதும்
குழந்தைகள் நடுவில்
காமத்தால நிரப்பப்படுகின்றன என் இரவுகள்.
மனித உருவில் மிருகங்கள் வாழும்
குகையிலிருந்து செல்வது
வீண் விரயமாய் இல்லை எனக்கு.

பாரங்கள் தந்தவன்
வெறும் பொருளாய் பிண்டமாய்
நினைக்கையில்
தீப்பற்றி எரியும் நகரத்திலிருந்து
விடுபடும் புழுக்கள் பூச்சிகள் போல
இடம் நகர்ந்து
காடோ கடலோ தேடியே போகிறேன்.

ஐந்தறிவு மிருகங்களால்
ஆபத்து ஒன்றும் பெரிதாயிருக்காது.
மனதிலும் கையிலும் யாருக்கும் உதவாத
வெற்றுப் பாராங்கள் மட்டுமே
எடுத்துப் போகிறேன்.
விட்டுப் போவதும் அதுவேதான்.

இனியாவது உணரட்டும்
மனிதரா மிருங்களா நாங்கள் என்று.
இல்லை அப்படியே வாழட்டும்.
மறுத்து வாழாத ஒருத்தி
வரும்வரை !!!

ஜெகா வரைந்த ஓவியத்திற்கு என் கற்பனையில்.
"ஜே..."ன் கவிதை காண...
ஹேமா(சுவிஸ்)

62 வருட சுதந்திரமாம்...

கம்பி வேலிகளுக்குள்
பசியின் அரட்டல்கள்
பசி உணர்வோடு
நீட்டிய கையில்
வறட்டிய ரொட்டி
கொடுக்கும் கையிலோ
புணரும் பசியோடு
பாவாடை நாடா
சுதந்திரமாய் !

இது ஓர் சுதந்திரமாம்.அதுவும் அறுபத்திரண்டாம் !

செருகிய கிடுகு வேலிக்குள்
வேண்டுகோள்கள் விருப்பங்கள்
விண்ணப்பங்களாகி
பத்திரமாய்
கரையானுக்கும்
கணவனுக்கும் காட்டாமல்
இமைவரை அழுத்தி மை பூசி
மறைத்தபடி
சுதந்திர தேசத்து அதிர்வில்
அடுப்படிப் பாத்திரங்கள்
உருண்டு விழ
"சத்தம் கேட்டால் எழும்பிக் கத்துவார்"
மனதிற்குள் முணகியபடி
உணர்வுகள் முடங்க முறிய
சத்தங்களை சு(ச)கித்து
தொட்டிலோடு சேர்ந்தாடும் சுதந்திரப் பெண் !

இதுவும் ஓர் சுதந்திரம் !!!

வாழ்த்துக்கள் மனங்கள் நினைத்தபடி வாழ்வும் அரசியலும் நகர !

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 02, 2010

பிரிவு...


பிரிவின் புதைகுழிக்குள்
புதையுண்டு போயிருக்கிறாயா
பிரிவின் வதையை
அனுபவித்திருக்கிறாயா எப்போதாவது !

என்ன நடந்ததாக
என்னை விட்டுப் பிரிந்தாய்
என்ன சாதிக்கிறாய்
வானுயர சிறகடிக்க
சிறகு தந்து சேர்ந்து பறந்த
நீ.....
ஏன் பாதை மாறினாய்
பிரிவின் வழி சுகமானதா !

மரண தண்டனைக்குள்
தள்ளப்பட்ட எனக்காய் வாதாடி
விடுதலை தருவாய்
எனப் பார்த்திருக்க
மீண்டும்
சோகச் சிலுவைக்குள் அறைந்தவனே
என் கல்லறைக் கற்கள்கூட
கண்ணீர் சுரக்கும்
உன் பெயர் கேட்டால் !

எனக்கும் தெரியாமல்
என்னைத் திருடிவிட்டு
என் விருப்பம் தெரிவிக்க
ஒன்றுமே தெரியாதவனாய் மறுத்தது
படமாய் விரிகிறது மனக்கண்ணில் !
ம்ம்ம்.....
இனி நான் தரவும்
நீ மறுக்கவும் என்ன மிஞ்சியிருக்கிறது.
புரையோடிய மனதையாவது
திருப்பித் தந்துவிடு !

கட்டிய கோட்டைகளை நீயே சுக்கு நூறாக்கு.
நீ வளர்த்த பூக்களுக்கு நீயே புயலாகு.
உன் அன்பால் கட்டுண்ட என்னை
நீயே சுட்டுப் பொசுக்கு.
செய் ...
உன்னால் முடிந்த எல்லாமே செய் !

பைத்தியக்காரனே
யாருமே பிரிக்கமுடியாது
என்ற எங்களை பிய்த்தவன் நீ.
இரத்த வரிகள் மட்டுமே இனி உன்னால்
ஒவ்வொரு நிமிடத்திலும்.
வருகின்ற கண்ணீர்த் துளிகளைச்
சேகரித்து கவிதைகளாக்கி
காயமுன்
எழுதப்பழகிக் கொள்கிறேன் !

எத்தனையோ சோகங்களை
சுட்ட பழம்போல ஊதித் தின்று
செரிக்கப் பழகிக்கொண்ட என்னால்
நீ தந்துவிட்டுப் போன சோகத்தை
ஏனோ பழக மறுக்கிறேன் !

இப்போ என்னால் முடிந்ததெல்லாம்
இரவுப்பாயில் புரண்டுகொண்டு
இதயத்து நினைவுகளை உதறி
உன் நினைவுகளை மட்டும்
தனியாகப் பொறுக்கி
இறுகிய உன் இதயத்தில்
எங்காவது ஓர் இடமிருந்தால்
பொறுக்கிய சிறுதுண்டு
ஒன்றையாவது
பொருத்தலாமா என்று யோசித்தபடி !!!

வலியோடு ஹேமா(சுவிஸ்)