*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 27, 2009

தோழா நீ எங்கே...

தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !

கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!

என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !

என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !

முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!

வாராயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 24, 2009

பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்

இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.

தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.

தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.

அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.

வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.

அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.

நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, November 20, 2009

கேட்பாரற்ற பொழுதுகளில்...

சில கதவுகள் வேண்டுமென்றே
மூடப்பட்டே...யிருக்கும்.
மூடியிருப்பதாய் மௌனித்துத்
ஏன் திரும்புகிறாய் நீ.

தட்டு எங்கே உன் கைகள் ?
கூப்பிடு எங்கே உன் குரல் ?
கதவின் பின்னால்
யாரும் இறந்திருக்க நியாயமில்லை
இரத்தக் கறைகள் அங்கில்லை.
அங்கு...
உண்மைகளின் யன்னல்கள் மூடப்பட்டே.

கதவுகளும் அதன் இறுக்கங்களும்
சுவர்களும் பருமனும் கடினங்களும்
அவைகளுக்கே இயல்பானவை.
எங்கே தொலைத்தாய்
உன் இயல்பை.

விசாலங்களும் வீடும்
தேவையாயிருக்கிறது உனக்கு.
விடு சிந்தட்டும்
ஒரு துளி இரத்தம் மண்ணில்.
முட்டியில் இரத்தம் தோயும்
கையும் வலிக்கும்
என்றாலும்
முட்ட முட்ட
தட்டத் தட்ட தகரும்.

சுவரோ கதவோ ஏதும்
முன்பு எப்போதும்
இருந்ததில்லை இங்கு.
தர்மம் நிரம்பிய
விசாலமான வெளிதான் முன்பு இங்கே.

பொருத்தப்பட்ட சுவர்களும்
கதவுகளும் யன்னல்களும்
பூச்சட்டிகளும் முளைத்தன
கேட்பாரற்ற பொழுதுகளில் !!!

"போராடினாலும் அழிவோம் தான்.
போராடாவிட்டாலும் அழிவோம் தான்.
ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது"

ஹேமா(சுவிஸ்)

Wednesday, November 18, 2009

இழப்புக்களின் வரிசையில்...

நீ....
அன்றைய தினத்தில்தான்
உனக்கென
ஆவேசமான முடிவெடுத்திருப்பாயோ!
காதலிப்பதாகவும் சொல்லிவிட்டாய்.

அதே ஆவேசம்
பயமாய்
கௌரவமாய்
அம்மா முகம் நிழலாட
பிரிந்தும் விட்டாய்.

எப்படி அறிவாய் நீ
என்னையறியாமலே எனக்குள்
நிறைந்திருப்பதை.
காற்றுத் தரும் மரம்
வீட்டுக்குள் வராது என்கிறாய்.
தத்துவத்துள்
காதல் தளும்புகிறது பார்.

உன் அசட்டுத்தனம்தான்
எனக்கும் பிடித்திருந்தது.
பிரிந்தபோது
சிந்தித்திருக்கவில்லை என்னை நீ.
வந்தாய் சொன்னாய் சென்றாய்.
பெரியதொரு பெருமூச்சோடு
நிம்மதியாய் இருக்கிறாய்
அதே ஆவேசத்தோடு.

மிச்ச சொச்சமாய் இருக்கும்
தைரியத்தை
இனிமேலும் ஆவேசமாக்காதே.
சேமித்துக்கொள் புத்திசாலித்தனத்தை.

இன்று...
இப்போ...
இந்த நொடிகூடக் காத்திருக்கிறேன்
ஒரு நிமிடம் பேசவும்
உன் கைக்குள் அடங்கவும்
அழவும்
நானும் ஒரு அசடாய் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, November 14, 2009

பழுத்தல் இலை...

புதிய தளிர்கள் பூப்படைய
பழுத்தல் இலையாய்.
தாங்கிய காம்பு தளர்ந்து உலர
இறுக்கிப் பற்றிய
என் தாய் கரம் தவற விட
வெற்று வெளி வானம் தாவி
வேகமாய் அலைகின்ற சருகாய் நான்.

தாயின் காலடி தாண்டி
காற்றின் கைதியாகிப் பறக்கிறது தேகம்.
மூச்சுத் திணறப் பறக்கும் வேதனை விட
நான் வாழ்ந்த மரத்தின்
அடி விட்டுப் பிரிவதே வேதனை.
பயம் பயமுறுத்த
எங்கே விழுவேன் எப்படி ஆவேன்.

வாகன நெரிசலுக்குள்
வெப்பப் புகை கக்கும் பெரும் தெருக்களிலா !
வெப்பக் கற்கள் கோர்த்து
கொத்தனார்கள் கூடிக் கட்டிய
கட்டிடக் காடுகளின் நடுவிலா !
ஈக்களும் கொசுக்களும்
கொஞ்சி கதை பேசி விளையாடும்
குப்பைகள் சேரும் கும்பலிலா !
கரையோடும் தரையோடும்
உரசி நெளிந்து ஓரத்துப் புற்களோடும்
முந்தியோடும் மீன்களோடும்
போட்டி போடும் ஓடுகின்ற தண்ணீரிலா !
மனிதனின் உணவுக்காய்
மேய்கின்ற மாடுகளின் உணவுக் கூடத்திலா !
காடும் மலையும் காதலிக்க
வானம் பார்த்துக் கூச்சம் கொள்ளும்
கானகக் கரைகளிலா !
இல்லை நகரத்தின் நடுவே
கொஞ்சும் குழந்தை ஒன்றின்
பிஞ்சு விரல்கள் பசை தொட்டு ஒட்டுகின்ற
ஓவியப் புத்தகத்திலா !

காற்றே மீண்டும் விடு
என் தாய் மடி.
சருகாய் உக்கி
சாந்தியடையும் என் ஆத்மா.
இல்லை அவலமாய்
அலைக்கழியும் என் ஆவி !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 12, 2009

வானம் வெளித்த பின்னும்...

அண்டத்தில்..........
ஞாயிறும் திங்களும்
அருகருகா!?
ஒரே நேரம்
பயணிக்க..சந்திக்க
முடியாமலிருந்தும்..
அருமையாய் வகுத்து
ஆளுக்கொரு வேலையாய்
அவனியை ஆட்கொள்ளும்
அற்புத தம்பதியராய்.

நீலமும் வெண்மையும்
தொட்டதில்லை
ஒன்றையொன்று
இருந்தும்...
போகுமிடமெல்லாம்
தவற
விட்டதில்லை
துணையை.

அகிலத்தில்....
வானம் வெளுக்காமல்..
தூரல்கள் தூங்காமல்..
ஒத்தையாய் புறாவொன்று
ஏன்?
இன்னும் தனிமையா?
இடையில் தொலைந்ததா?
இள மையில் அறுந்ததா?
இல்லை!
இரு கை இறுக்கம் தளர்ந்ததா?
இன்னொன்றின் மேல் படர்ந்ததா?

ஏன்?
தனிமையாய்.........!
வெறுமையை நோக்கி
“உன்”
சிறகுகளுடன்...
எதைத் தேடி.
பயணிக்கின்றாய்!
ஊமைப் புறாவாய் !!!

"வானம் வெளித்த பின்னும்"முகப்புக்காய்
ஆர்வத்தோடு ஆக்கம் இணையத் தோழி கலா.

அவருக்கென்று தளம் இன்னும் இல்லை.என்றாலும் சிங்கையிலிருந்து எப்போதும் என்னை அடிக்கடி ஊக்கப்படுத்தும் ஒரு குரல்.அவருக்கு நன்றி சொல்லும் விதமாகவே இப்பதிவு அன்போடு அவருக்காக.கலா உங்கள் அன்பிற்கு என்னால் இப்போதைக்கு என் அன்பாக !!!

என்னோடு சேர்ந்து நீங்களும் என் தோழியை
வாழ்த்துங்கள் தோழர்களே.


தூரத்துத் தோழி கலாவின் கைகள் பற்றிய வெப்பத்தோடு
ஹேமா(சுவிஸ்)

Monday, November 09, 2009

காதலுக்கு விலையில்லை...

முத்திரை இல்லை
முதலில்.
முகவரி இல்லை !
முன்னுரை இல்லை !
முன்பின் தெரியவில்லை !
என்...
கைக்குக் கிடைத்த
கடிதம் மட்டும்
புலம்புகிறது
காதல் தோல்வியென்று !!!

பிரியமுடன் வசந்த் கவிதையில்
பிரிந்த கவிதை.

ஹேமா(சுவிஸ்)

Friday, November 06, 2009

வெட்கச்சிறை...

பூ போல...
பனித்தூவல் போல...
தூவானம் போல...
யாழின் இசை போல...
அணிலின் கொஞ்சல் போல...
அந்தி வானம் போல...
வேப்பம்பூ மணம் போல...
இன்னும்
போல போல...
உன் வெட்கம்.

ஐயோ...
உன்னையே தின்று தொலைக்கும் அது
அப்போதுதான்
பறக்கப பழகும் பட்டாம்பூச்சிக் கூட்டமாய்
எத்தனை வர்ணங்களில்
குழைத்தெடுக்கிறாய் உன் வெட்கத்தை
கன்னக் குவளைக்குள்
ஒவ்வொரு வெட்கமும்
ஒவ்வொரு சொட்டுக் கவிதையாய்.

நான் கேட்க
நீ மறுக்க
தரத் தயங்கி
பின் உன்னைத் தயார்ப்படுத்த !
ம்ம்ம்...

மகரந்தம் தொடும் கரமாய் நான்
வெட்க நிறங்களாய் நீ
உன் வெட்கம் தொட்டுப் பார்க்க
வெறும் வண்ணப் பொடி மட்டுமே
ஒட்டி முகம் மறைக்கிறாய்.

போடா...
உன் (ஆண்) வெட்கம் என்ன
பிறர்காணா
புது மொட்டின் மலர்வோ !
பார்க்கவும்
பறிக்கவும் கடினமாய்.

ப்ரியமானவனே...
உன் வெட்கச் சிறைவிட்டு
சுலபமாய் வெளிவர
ரகசியம் ஒன்று சொல்லவா
என் இதழ் தொட்டு
முத்த ஒப்பமிடு!!!

வெட்கத்தோடு...ஹேமா(சுவிஸ்)

Tuesday, November 03, 2009

எனக்குண்டான நிலத்துண்டு...

பருந்துகள் அலறிச் சுழலும்
சம​வெளிக்கு வந்தாலும்
பாதாளம் பார்க்கப் பயந்து
கால்கூசும் உயரத்தில்
வேறெங்கோ விரைகிறேன்.

எனக்கான நிலத்துண்டு
ஒரு அல்கெமிஸ்டின் குடுவைக்குள்
நீர்மமாக நிறைந்திருக்கிறது
கவிழ்க்கவியலா மர்மத்தைத் துக்கித்து
மீண்டு கடுகிப் பறக்கிறேன்.

பழைய பீடபூமியின் செவ்விந்தியன்
அழுகும் பிணங்களின் பித்ருக்களுக்கு
இயற்றிய பாடலுக்குள்
இளைப்பாறப் பார்த்தாலும்,
இறந்தவர்களின் கனவு மிச்சங்க​ளை
மொழி​பெயர்க்கப் பயந்து
மீண்டும்
புலம் பெயர்ந்தேன்.

பேராழிகள்
தோட்டங்கள் ​
மெக்பத் நாடக அரங்கின் திரைசீலை
மனிதர்களின் ஆறாம் விரல்கள்
கிதாரின் நரம்பு அறுந்த இசை
பறந்து கொண்டேயிருக்கும்
ஹீலியம் பலூன்கள்
எங்கும் இல்லை
எனக்குண்டான வாழ்நிலம்.

உடன்பாடு கொண்ட உறவுகளின்
அணுக்கத்தின் இருள்மையில்
மீண்டும் மீண்டும் ஏமாந்து
இருளின் திணறலிருந்து விடுபட்டு
நிலவொளிக்கு வந்து
கூந்தல் உதறி முடிந்து கொண்டேன்
மிக மிக ஆசுவாசமாய்.

கதவு திறக்கும் அக்ஸெஸ் கார்டு சாவிகள்
வாய்ஸ் மெயிலில் கேட்ட ஏலியன் அழுகுரல்
பாம்பின் வாசம் வீசம் என் ஆடைகள்
இரண்டாவது தற்கொலைக் கடிதம்
தனியே அழுது நடந்த இரவின் தெருக்கள்...
எங்கும் எங்கும் எங்குமே
எனக்குண்டான
ஏமாற்றத்தின் முகவரிகள் மட்டும்
கிழிந்து தொங்குகின்றன.

இறுதி நடவடிக்கையாய்
ஒரு கைவிடப்பட்ட தெய்வம்
கனவொன்று கண்டது.
கனவின் மொழிபெயர்ப்பில்
என் நிலமுகவரி தெரிந்தது
அது.....
கணணியின் விசைப்பலகையில் என்று !!!

ஹேமா(சுவிஸ்)