*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, January 27, 2013

காதல் துளிகள்(5)

எத்தனை அலைகள்
வந்தபோதும்
உன் பெயர்கொண்ட
அலை மட்டுமே
உடைக்காமால்
அணைத்துப் போகிறது
என்னை !

வரம் தந்து
தொட்டுத் திரும்பும்
அலையாகவே
இருந்துவிடு
கரையாகவே
இருந்துவிடுகிறேன்
நான் !

நீயில்லா உலகில்
இன்னும்
சூடமுடியா
பூக்கள் பறித்தபடி
நான்....

கொஞ்சம் பொறு
பெருவெளி
கடந்துகொண்டிருக்கிறேன்
ஆனால்
இன்னும்
உன் வாசனை எட்டவில்லை
நியாயத்துக்கு மாறாக
பயணித்த உன்னை
இப்போதும் மன்னிக்கிறேன் !

அன்பென்று
சொல்லிச் சொல்லியே
என் இருப்பைக்
கலைக்கிறாய்
கொஞ்சமாவது
விட்டு வை என்னை
எல்லாமாய் எடுத்துக்கொள்கிறாய்
காற்றுவழி அலைகிறேன்
ஏகாந்தங்களை சரிசெய்தபடி
அங்கும் .....மிதக்கிறேன்
நீ தந்த ஒற்றைச் சிறகோடு !

இன்று...
இப்போ...
இனி...
என்று கடந்துகொண்டே
நிமிர்ந்தும்...
தாழ்ந்தும்...
அகன்றும்...
சுருங்கியும்...
இன்னும்....இன்னுமென
நீண்டுகொண்டே போகிறது
எதிர்பார்ப்பும் ஆவலும்
வாழ்வு நாட்களின்
சேதாரத்தின் இயல்பை
தவிர்ப்பாரின்றி.

வாழ்வின் தத்துவம்
போலானவனே
ஞாலக்கதிரில்
தூங்குகிறாய்
எதுவித பிரக்ஞையுமற்று !

வாசனைத் திரவியங்கள்
ஏதும்
போதுமானதாயில்லை
கனவுகளை
கொன்று புதைக்கிறேன்.

பிணநாற்றம்
என்று முகம் திரும்பி
மூக்குப் பொத்தி
போகிறார்கள்
சிலர்.....
வழியில்
பிணமொன்று
சிதம்பிக்கிடப்பதாய்
எழுதிப் போகிறாய் நீ !

சுவிஸின்
உயர் மலைத்தொடரில்
உன் பெயர்
எழுதி வந்திருக்கிறேன்
உரத்து வாசிக்கக்கூடும்
அவைகள்
தீராப்பிரியங்களின்
சொற்களில்
உறைந்து கிடக்கிறதென் காதல்.

அவனிடமும்
சொல்லாதீர்களென
அதட்டிவிட்டே
தீவனமிட்டு வந்திருக்கிறேன்
வெள்ளை மலைகளின்
குருவிகளுக்கு
சிலுவை ஏந்தியவனின்
நினைவு நாளின்று !

ஹேமா(சுவிஸ்)

Monday, January 21, 2013

மனம்...

மனங்களைப்
படித்துக்கொண்டிருக்கிறேன்
படித்த புத்தகங்களில்
ஏதும் இல்லை
இவர்கள் முகங்களின்
கிறுக்கல்கள்போல.

முகத்தில் பதியா குணங்களை
அடுக்கி வைத்திருக்கிறார்கள்
கையளவு இதயத்துள்
சேமிப்பறைகளில்
இலக்கமிட்டு.

உலகை மிஞ்சும் எண்ணங்கள்
மனமில்லா உடம்பிற்குள்
எப்படிப் புகும்
திணித்ததெப்படி ?!

பத்தியமிரு
நல்லதை நினை
மனம் கழுவு
புத்தனாய் வாழ்
பெரியாராய் மாறு
உன்னுள் நீயிரு
ஒழுங்கு படுத்தவாவது செய்
மறுபிறப்பெடுத்து
மீண்டும் வாழ்வாய்
இப்பிறவியிலேயே!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, January 18, 2013

முத்தத் துளிகள் (1)

முத்தங்களை
அள்ளித் தெளித்துவிட்ட
நிம்மதியில்
நீ....
நித்திரையில்
எடுத்தும்
கோர்த்தும்
கலைத்துமாய்
நான் !
எப்போதும்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
முத்தக் களத்தில்
வெட்கம்கூட
கண்மூடி வெட்கபட
"நெப்போலிய முத்த"த்தில்
மயங்கி
தலை கீழாய்த் தொங்குகிறேன்
வௌவாலென
ஆனால்....
அவன் மட்டும் நேராய் !
நீ....
பேச்சினிடையே
அள்ளியிறைத்த
'ச்' ல்
ஒன்றையெடுத்து
ஒட்டிக்கொண்டதோ
ஒளியற்ற
அந்த விண்மீன்
பொறுக்கிச் சேர்க்க
என்....
கணக்கில் குறைகிறதே
நிறைய !
வான் நிமிர்த்தி
வாமன முத்தமொன்றில்
உயிர் கலந்துவிடுகிறது.
மூச்சிழந்து
தேவதை தவிக்கையில்
காமமும் காதலும் வேறென
தத்துவம் சொல்லி
கண்ணைக் கட்டி
மறைந்தும் போகிறது
மீண்டும் வருவேனென!!!

அன்பு கேட்ட இடமெல்லாம்
வெறிச்சோடி வெளித்துவிட
உதிர்ந்துகொண்டிருந்த கனவை
இழுத்து
வெற்றிடம் நிரப்புகிறாள்
என்....தமிழ்.
ராட்சஷி
காற்றலையில்
தலைகோதி
முத்தம் தர
நடக்கத் தொடங்குகிறேன்
நீள் மௌன வீதியில்!
கஞ்சனாயில்லாமல்
காற்றுமுத்தமென
நாளொன்றிற்கு
ஆயிரம் அனுப்பினாலும்
கிடைப்பதென்னவோ
கனவில் அவன் தரும்
அந்த ஒற்றை முத்தம்
மட்டுமே
அதையும் கடன்
முத்தத்தோடு
கணக்கு வைக்கிறான்
கடன்காரன் !

அன்பு முத்தங்கள் தொடரும்.... ஹேமா(சுவிஸ்)

Tuesday, January 15, 2013

விட்டுப்போன புத்தன்...

அழுவதால்
நீயோ
இல்லை
நானோ
தீட்டாகி விமாட்டோம்.

தமிழனின்
இரத்தமும் கண்ணீரும்
நனைத்த புத்தன்கூட
இன்னும்
போதி மரத்தடியில்தான்.

இலங்கையில்
இருக்கும் புத்தன்
போலியாம்
அது வேறு கதை.

தலைகள்
சிதறும் தருணத்தில்
காணாமல் போன
புத்தன் போல
நீ இப்போ.

வெள்ளரசு மரத்தடியில்
காணாமல் போன
தமிழன் வாழ்வு
தொடர்கிறது
மரணத்தோடு
அவர்களோ
சதுரங்க விளையாட்டில்.

நான்
மண்ணோடு அல்ல
மரணித்த பின்னும்
வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன்
புத்தனைப்போல.

ஆசை பட்ட பின்னல்ல
ஆசைப்பட்டபின் தானே
சித்தார்த்தனும்
புத்தனானான்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 14, 2013

ஏக்கப்பொங்கல்..

நாற்பக்கக் கரும்பும்
நெய்யோடு பொங்கலும்
நாக்கோடு இனித்து நிற்க
பொங்கலோ பொங்கலென
பாடிய குரல்களும்
நினைவோடு
நெஞ்சில் நிறைய
இன்றைய பொங்கல்
விசும்புகிறது
ஏக்கங்களை நிரப்பிக்கொண்டு.

ஏமாற்றம் தாளாத
விடிகாலைச் சூரியனும்
தீயென
கண் சிவந்து
சுட்டெரிக்க
பூமிமேல்
நீர் கோர்க்கிறது மேகம்
சமாதானமாய்
பொங்கலோ பொங்கலென.
 
பானைகளும்
மண் அடுப்புக்களும்
முற்றங்களும்
காத்தே இருக்கும்
பொங்கலுக்காய்.

நிலாவுக்கு....
முற்றமும் கோலமும்
கரும்பும்
மண் அடுப்பும்
பொங்கலும்
இதுதானெனக் கீறிக்
காட்டிக்கொண்டிருக்கிறேன் நான்.

இன்னொருமுறை
சூரியப்பொங்கலை
யாரவது தந்து செல்லட்டும்
வாழ்நாளில்
சுவை மாறாமல்!!!

ஹேமா(சுவிஸ்)

அன்புள்ளங்கள் எல்லோருக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !

Thursday, January 10, 2013

அலட்சியக் குறிப்புகள் சில...

விசும்பும் ஒற்றை ஒலி
அடுத்த அறையில்
சீரிய வரிசைக் கதிரைகள்
சிரிக்கக் கதைக்கச் சாப்பிட
குழந்தைகள் எவருமில்லை
அந்தத் தெரு
எப்போதும் போலத்தான்
கீழிருட்டில்
சிலரது அதிசய வருகைகள்
உலகம்
நீல நிறமாக மாறியிருந்தது
என்னைத் தேடும் இரவு நட்சத்திரம்
இன்னும் யன்னலில் இல்லை
சின்னக்கால நினைவுகள்
திரைவிலக்கும்
கருப்பு வெள்ளைப்படமாய்
உலகம் தொலைத்த
அமைதி எனக்குள்
வெம்மை குழைத்த
செந்நிற வண்ணமானாய் நான்
காதலை மறக்கவும் பிரார்த்தனை
காற்று மீட்டும்
தந்திக்கம்பிகளாய் மழைத்துளி
"செய்திகள் வாசிப்பது..."
அடித் தொண்டையில்
அதே அறிவிப்பாளர்
வானொலியிலும்
பூக்களின் சில
சிதறல்கள் என்னைச்சுற்றி

நானோ...
என் மூச்சைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, January 07, 2013

தாகம்....

ஒரு
சிறு துளி நீரை
பாதுகாக்கிறேன்
உள்ளங்கையில்.

தணித்திருக்கும் தாகம்
நா வறண்டு இறந்த
என் தேசத்து
உயிர்களுக்கு
இந்த ஒரு துளி.

கவிதைகளுக்குள் தாகம்
தணிக்கும் எனக்கும்
இரத்தம் குடிக்கும்
நுளம்புக்கும்
முலைக்குள்
முகம் புதைத்தழும்
குழந்தைக்கும்
தாகம் குறித்து
ஏதும் சொல்ல வராது.

அடிக்கடி
என் உதடு நனைத்து
உயிரெடுக்கும்
அவன்
அறிந்திருக்கக்கூடும்....

விட்டுப் போன
நத்தை ஓடுகளில்
மழை நீரை
தேடிவரும்
பாலைவனப் பறவைகளின்
தாகம் பற்றியும்
பேசவும் புன்னகைக்கவுமின்றி
தனக்கான
ஈரலிப்பைத் தரும்
என்
ஈர உதடுகளின்
தேவை பற்றியும்...!

ஹேமா(சுவிஸ்)

Sunday, January 06, 2013

முகமற்றவன்...

மதம் மாறக் கேட்டிருந்தேன்
வந்தான் மாறினான்
வானிலிருந்து வழுகிவிழும்
ஒரு பாம்பு போல....
பின் தேவனாக....
கந்தர்வனாக...
புராண காலத்துக்
கடவுளாக....
வீரனாக....

மெல்ல அருகில் வந்தவன்
சின்னச் சுடரென
அணையாமல்
அணைத்தான் என்னை
என் மேனியை ஏணியாக்கி
சொர்க்கம் தேடினான்.

ஏதேதோ கேட்டிருந்தான்
வாய் மட்டுமே அசைந்திருந்தது
சுவர்க்கலோக மாளிகைகள் பற்றியும்
அங்கு விண்மீன்களின்
குடியிருப்புப் பற்றியும்
இனி வரும்
அணுக்குஞ்சுகள் பற்றியும்
கேட்டிருக்கலாமோ...

பிறக்காத
பிரபஞ்சக் குஞ்சுகளைப் பற்றி
நான் விசாரிக்க
எனக்கான பதில்களைத்
தவிர்த்திருந்தான்.

மதம் மாறினால்
தேவர்களை மட்டுமே காண்பாய்
இனி மானிடர்களைக்
கண் மறைக்குமெனச்
சொல்லி மறைந்தே போனான்
வருவானா மீண்டும்!!!

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5886

ஹேமா(சுவிஸ்)