*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, February 27, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவை...

தகர்த்தெறியப்பட்ட
வேலிகள் சுவர்கள்
உயரமாயும்
உடைந்து சிதைந்து சின்னதாயும்
அதற்கப்பால் அதற்குள்
பலருக்குத் தெரிந்தும்
சிலருக்குத் தெரியாததுமான
விம்மி வெடித்த உண்மைகள்
அறிந்ததும் அறியாததுமாய்.

தாண்டித் தேடும் புலன்களுக்குள்
ஏன் அகப்படவில்லை
அவைகள் அவர்களுக்கு
நியாயம் சொல்பவர்களாயின்
தேடல்
அப்பாலுக்கு அப்பால்தானே.

முடக்கும் வேலிகளுக்குள்
எம் உண்மைகள்
எம் உபாதைகள்
வேலிகள்
எம் மெய் மறைக்குமெனில்
ஏன் அவைகளும்
அவர்களும்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 23, 2012

இதற்குள்தான் எல்லாம்...

தலைதான் சிதறிவிட்டதாம்
ஒற்றைக் கீறல்கள கூட
ஏதுமில்லையாம்
ஒருகாலை மடக்கி
கைகளை விரித்து
படுத்திருப்பதுபோல
அவரை
வரைந்திருந்தார்கள்
எத்தனையோ தடவைகள்
கடந்த இடமிதில்
பலரும்....நானும்
படத்தில் வரைந்தவரை
புன்சிரிப்போடு கண்டிருக்கிறோம்
சந்தியை கட்டம் கட்டி
வட்டத்திற்குள்
வரைந்திருக்கிறார்கள்
இனி எப்போதுமே
காணப்போவதில்லை அவரை
என்றாலும் அந்தச் சந்தியை
நித்தமும் கடந்துகொள்ளத்தான்
வேண்டியிருக்கிறது!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, February 20, 2012

காட்சிப் பிழை...

வினாக்கள் முதுகில் கனக்க
சந்திப்பின் கணநெருக்கத்தில்
தயங்கி நிற்கிறேன்
முகம் சிதைந்து மாறிக்கிடக்கிறது
பாதி தேய்ந்தும் பாதி புண்ணாகியும்.

கொலையாளிகளே நீதிபதிகளாய்
தீர்வற்ற கேள்விகள் பதில்களோடு
கம்மாளர்களாகி சுற்றி நின்று
நிர்வாணமாக்கி சதையறுத்து
ஆக்கும் புதிய உறுப்புக்களில்
நான் ஏதோ ஏதோவாய்.

காட்சிப் பிழையென
தரித்த நிழலில்
தலை துளைத்தொரு
மரம் தெரிய.....

தொப்பி என்றான் ஒருவன்
கிரீடமென்றான் இன்னொருவன்
இல்லையில்லை....
மகுடமென்றான் மற்றுமொருவன்
குழம்பிப் பார்க்கையில்
அட்டகாசமாய் சிரிக்கிறது
என் தலையில்
இன்னொரு முகம்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, February 14, 2012

சிறகானவனுக்காக...

தொட்டுக்கொண்டே நகர்ந்துபோகும் முகிலாய் நம் நட்பில் முளைத்த காதல் பட்டுக்கொண்ட நொடியிலேயே பட்டும்போனது.வெற்றிடம் நிரப்பும் காலமாய் நீ....இப்போதும் கைபற்றித்தான் வைத்திருக்கிறாய்.பேச்சு,பார்வை,தொடர்பு,இணைப்பு எதுவும் தேவையில்லை.உயிருக்குள் வாழும் உணர்வுக்குத் தீண்டல் அவசியமற்றது.ஒரு அழகான இறகு காற்றின் திசையில் வந்ததாகவே முதன் முதலில் அறிந்துவைத்திருந்தேன் உன்னை.பௌர்ணமி பூஜித்த ஒரு நாளில் சிறகுகளோடு நுழைந்த நீ கை குலுக்கிச் சிரித்தாய்.பின் இடப்பக்கச் சிறகில் இருத்தி மெல்ல மெல்ல அழைத்துப்போனாய் ஓரிடம்!

அழகான அல்லது ஒளிர்மையான இல்லை இல்லை துளிர்காலமென்று உவமை சொல்லமுடியாத தனித்த தீவின் ஒரு மூலையாய் இருக்குமோ அது.வெக்கை பரவிய மணல் தரையை உன் நிழலைப் போர்த்தி ஈரமாக்கினாய்.நட்புக் கலந்த காதலோடு கைகுலுக்கினாய்.காய்த்திருந்த கைகளை வெடுக்கென இழுத்து இது களம் தந்த வடுக்களென வெளிறிச் சிரித்தாய் உயிரை எனக்குள் புதைத்து!சில பகல்கள் பல இரவுகளின் பின் ஒரு நட்சத்திரங்களற்ற இரவைத் தேர்ந்தெடுத்தாய்.அன்றைய நாளில்தான் உன் தத்துவங்கள் சேமிக்கும் போதிமரமானேன்.அணுவின் துகள்களைக்கூட அனுபவித்துச் சேர்த்த ஒரு அமைதி உன்னிடமிருந்தது.நானறியா ஒரு மலையின் பெயர் சொல்லி அங்குதான் வாழப் பிடிக்குமென்றாய் அடிக்கடி.பத்து நிமிடத்தில் இருபத்தொரு முறை அந்த மலையின் பெயர் வந்தது.நடு நடுவில் காத்திருப்புப் பற்றிய கதையும் சொன்னாய்.எனக்கானதா நம் தேசத்திற்கானதா என அறியமுடியவில்லை.அந்த இரவில் உன் முகமும் சரிவரத் தெரியவில்லை!

காலத் திசைகள் வேறுபட்டிருந்தாலும் அணையாது காதல் தீ என்றும் கை பிடித்துச் சொல்லியிருந்தாய்.அன்று பற்றிய தீ உன்னிடமும் என்னிடமும்.தீயில் உருகி உருமாறும் காலத்திலும் காதல் குழந்தையோடு நாமிருக்கலாம் என்றும்,தீயில் வெந்தாலும் சாம்பல் விலக்கி உனக்குள் இருக்கும் என்னையும் எனக்குள் வாழும் உன்னையும் பார்த்துவிடலாம் தீ வளர்த்த அந்த புதுத் தேசத்தில் என்றும் சொல்லியிருந்தாய்.தீயாய் நீராய் குளிர்தரு நிழலாய் இருந்தாலும் ஒற்றை இறகாகவே பறக்கும் லாவகம் உன்னிடமிருந்தது.காலமாற்றங்களின்போது உதிர்ந்த இறகுகளைப் பரிசாகவும் தந்திருந்தாய்.காதலின் மிகுதியாய் எப்போதுமிருக்கும் என்னிடம் அவைகள் உன் வீரம் சொன்னபடி!

தீ வளர்த்த தேசத்தில் சாம்பல் விலக்கி என்னைத் தேடு.நானும் முயல்கிறேன் உன்னைத் தேட.அங்குதான் நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!


அன்றைய இரவில்தான்
உன் முழுமையான
காதலைக் கண்டுகொண்டேன்
சாமங்கள் தாண்டிய இரவது
காதலின் முழுபலத்தையும்
முத்தங்கள்கொண்டு
மூர்ச்சடைய வைத்திருந்தாய்.

வேப்பம்பூவும்
தென்னங்கீற்று நிலவும்
கொஞ்சம் வெட்கி
மொழிமறந்த அழகு நேரமது
ஓவியக் கிறுக்கல்கள் பழகுகிறாய்
குழந்தையென என்மீது
அத்துமீறல்கள்தான்
என்றாலும்....
அளவோடு அனுமதிக்கிறேன்.

எல்லைவரை கூட்டிப்போன
நீ.....
என் ஒற்றை அதட்டலுக்குப் பணிந்து
வியர்வைக் குளியலோடு
தலைகுனிகிறாய்
"போடா பொறுக்கி நீயும் உன் வீரமும்"
தலைகோதி அணைக்கையில்
ஒற்றைக் கண்ணீர்த்துளி சொன்னது
வானம் தாண்டிய
உன் அன்பை!!!

அத்தனை என் உறவுகளுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துகள்.
காதலொடு ஹேமா(சுவிஸ்)

Sunday, February 12, 2012

காதல் சொக்லேட்...

இனிப்புகளை
அள்ளித் தந்துவிட்டு
ஒளிந்திருக்கிறாய்
முந்தானைக் குழந்தையாய்
நான் இப்போ !

கன்ன உரஞ்சலில்
முத்தம் கேட்கும்
லாவகம் !

நடு இரவில் எழுப்பிக்
கீறும் மோகச் சிரிப்போடு
எனக்கொரு கனவு
நீ...நான்...சொல்லவா !

சமாளித்துப் படுக்கவிட்டாலும்
குறுந்தகவல் பின்னிரவில்
ஐ லவ் யூடி !

வேணுமென்றே
கோபமாய்ப் திட்டினாலும்
பார்த்த அன்றே
போயே போச்....ச்
எல்லாம்....எல்லாம்
உடல் சொறிந்து சிரிப்பாய்
ம்...சுரணையில்லையாம் !

உன் வாசனை கேட்டு
அடம்பிடித்த அன்றுதான்
முதல் முத்தம் !

சில்மிஷம் செய்யப் பயந்த
உனக்குத்
தைரியம் தந்தவளே நானென்பாய்
மல்லுக்கு நிற்கிறாய்
நீ....இப்போ !

நாம் பேசிய பேச்சுக்கள்
சிரிப்புக்களால்
நிறைந்திருக்கிறது என்வீடு !

நீ....
தந்த இனிப்புக்களென
சொன்னது சின்னதுதான்.

தனித்த வானம் பார்த்து
நீயும்...
கொஞ்சம் பேசிப்பார்
உனக்குள்ளும் வரும்
சொக்லேட் நினைவுகள் !!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 09, 2012

உருமாறும் கனவுகள்...

நிலவுக்குள் ஒள‌வைப்பாட்டி
ந‌ம்பிய‌ குழந்தையாய் ‌
க‌வள‌‌ங்க‌ள் நிர‌ப்பப்படுகிறது
நாள்காட்டியில்
தொட‌ர்ந்த‌ இல‌க்க‌ங்க‌ள்.

க‌ருத்த‌ரித்துப் பின்
பின்ன‌ல் சட்டைக‌ளோடு
சுற்றும் ராட்டின‌ப் பூக்க‌ள்
எம் தொட்டிலில்
அடுத்த வீட்டுக் குழ‌ந்தை
நான் வைத்த பெயரோடு.

ச‌ரியில்லாச் சுழ‌ற்சியால்
த‌டுமாறும் மாத‌விடாய்
உதிர‌ப்போக்கு
வைத்திய‌ர்
ஓயாத உட‌ல் உபாதையென‌
ஒற்றைக்க‌வலை‌.

க‌ட‌வுள்...
வ‌ர‌ம்...
வேண்டுத‌ல்...எல்லாமே
நான்...
நீ...
நம்பிக்கை...
மறுதலிப்பு!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, February 02, 2012

பொல்லாத கடவுள்...

கூரை பிய்வதாய் ஒரு கனவு...

வீட்டுத் தலைவனுக்குக் கூடாது
இது அம்மம்மா...

நாட்டுக்குத் தீங்கு
இது பெரியண்ணா...

பணம் கொட்டப்போகுது
இது தங்கை...

பேசிவைத்த திருமணமோ
இது அக்கா...

இருப்பிடப் பிரச்சனை
பல்லிக்கும் பாம்பிற்கும்...

அடுத்தநாள் கனவில் கடவுள்
எல்லாம் நல்லது
எல்லாமே நடக்குமென்றார்...

எது முதலில்
அக்காவினதா அப்பாவினதா
இருந்த நின்மதிக்குத்தான்
கால் முளைத்தது
தினம் தினம்...

கடவுளுக்கும்
கனவுக்குமென்ன
வந்தார்கள் சென்றார்கள்!!!

ஹேமா(சுவிஸ்)